புஷ்பால ஜெயக்குமார்
அந்த நாடக அரங்கத்தின்
திரைச் சீலையில் வரையப்பட்டிருந்த
கட்டிடத்தின் படிக்கட்டில்
ஒவ்வொரு அடியாக வைத்து
அவன் இறங்கிக் கொண்டிருந்தான்
பெருந்துயர் வெளியில்
தனியனாய் உணர்ந்தவன் நிர்க்கதியானான்
அந்நிலையில் அவனுக்கு அளித்திருந்த
அமைதியெனும் பெருங்கடல்
ஒரு சிறை போல் ஆனது
புத்தகத்தில் இருக்கும்
குறியீட்டு உண்மைக்கு அப்பால்
நிஜத்தில் லௌகீக உன்மைகள்
சிதறி விரவி கிடந்தது
வேண்டியதைப் பொறுக்கிக்கொள்ளும்
வாய்ப்பை தேர்வு செய்யும்
பைத்தியக்கார தனம்
மௌனத்தின் சாட்சியாக
எல்லோரின் உள்ளத்திலும்
பதுங்கி இருந்தது
இருண்ட மனதில்
ஜன திரளின்
சிதைந்த மொழியில்
ஆற்றின் மேலே மிதக்கும்
காய்ந்த இலைபோல்
அவன் உனக்குத் தெரியக்கூடும்
