மனதில் உயர்ந்துவிட் ‘டால்’…/ஜனார்தனம் கே.பி.

2007இல் உலகின் தலைசிறந்த பத்து நாவல்களை ‘டைம்ஸ்’ தேர்ந்தெடுத்தபோது, முதலாம் இடத்தைப் பெற்ற நாவல், ‘ அன்னா கரீனினா’. மூன்றாம் இடம்: ‘போரும் சமாதானமும்’. சுவாரசியம் என்னவென்றால் நூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்த இரு நாவல்களின் ஆசிரியரும் ஒருவரே. லியோ டால்ஸ்டாய்!

Leo Tolstoy…இன்று பிறந்த நாள்…

‘மகிழ்ச்சியான குடும்பங்கள் எல்லாம் ஒரேபோல் மகிழ்ச்சியாய் இருக்கின்றன. மகிழ்ச்சியற்ற குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மகிழ்ச்சியற்று இருக்கின்றன….’ இப்படி அட்டகாசமாக ஆரம்பிக்கிறது ‘அன்னா கரீனினா’. உலக நாவல்களின் மிகப் பிரசித்தி பெற்ற முதல் வாக்கியம் அது.

நெப்போலியனின் ரஷ்யப் படையெடுப்பும் போரும் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டதை சுமார் 580 கதாபாத்திரங்கள் ஒவ்வொருவர் இதயத்திலும் புகுந்து புறப்பட்டுச் சொன்னார், ‘போரும் சமாதானமும்’ நாவலில்.

வாழ்க்கையை வாழ்ந்து எழுதியவர் மிகச் சொற்பம். அதில் இவர் வடித்த கதை ஒவ்வொன்றும் சிற்பம்.

‘ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை?’ அனைவரும் அறிந்த பிரபல சிறுகதை. இவருடையதே. ஏகப்பட்ட நிலத்துக்கு சொந்தக்காரனாக ஆசைப்படுகிற அவனிடம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கும் நிலத்தை காட்டி, இன்று மாலைக்குள் நீ எவ்வளவு தூரம் சுற்றி வர முடியுமோ அத்தனை நிலமும் உனக்கே, வெறும் ஆயிரம் ரூபிளுக்கு என்று சொல்லப்படுகிறது. ஆஹா என்று ஓட ஆரம்பிக்கும் அவன் மேலும், மேலும் என்று காலை எட்டிப் போட, நீண்ட தூரம் வந்து விடுகிறான். ஆதவன் மறைவதற்குள் ஆரம்பித்த இடத்தை அடைய வேண்டுமே என்ற ஆதங்கம் துரத்த, மூச்சுத்திணற விரைந்தவன் அந்த இடம் வந்ததும் உயிர் விடுகிறான். வெறும் ஆறடி நிலமே தேவைப்படுகிறது அவனைப் புதைக்க.

பொன் கதைகளை நம் முன் வைத்த டால்ஸ்டாயின் முன் கதை மிகச் சுருக்கமானது. பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தவர். வாழ்ந்ததோ சாதாரணராக. 20000 புத்தகங்கள் இருந்தன அவர் வீட்டு லைப்ரரியில். ஏற்கனவே தாத்தாவும் அப்பாவும் தங்கள் சொத்துக்களை சூதாடிக் கரைத்திருந்தார்கள். எனினும் அம்மா கொண்டுவந்த ஆஸ்தி ஜாஸ்தி.
கஸானா பல்கலைக்கழகத்தில் மொழிக் கல்வி பயிலச் சென்றவருக்கு அங்கேயுள்ள வேகம் பிடிக்கவில்லை. ஆசிரியர்களுக்கு இவரின் ஆர்வம் போதவில்லை. முதல் வருடம் தோற்றவர் வெளியேற்றப்பட்டார். அப்பால் சட்டம் படிக்கப் போனவருக்கு, நியாயத்துடன் அது வேறுபடுவதாகத் தோன்றியதால் அதிலும் இட்டம் இல்லை. ஊர் திரும்பி வேட்டையாடுவதிலும் குடிப்பதிலும் பொழுதைக் கழித்தார். இடையில் சூதாட்டக் கடன் நிறைய சேர்ந்து விட, ராணுவத்தில் சேர்ந்தவர் பனிமலைகளில் தார்த்தாரியக் கொரில்லாப் படையுடன் போராடும் அனுபவம் பெற்றார்.

எல்லைப் பாதுகாப்பு பணியில், பனியில் கிடைத்த தனிமைப் பொழுதுகளில் தன் இளமைப் பருவத்தைக் கதையாக எழுதி அது பிரபல பத்திரிகையில் வெளியாக, போர் முனையிலும் பேனா முனையிலும் புகழ் பெற்றார். போரில் கைப்பற்றிய ஒரு நகரை வலம் வந்த போது போர்பலம் தாண்டி ஒரு பிரபலம் எழுத்தினால் கிடைத்தது அங்கே.

எந்த எழுத்தாளராவது ஏழை விவசாயிகளின் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் ஆரம்பித்திருக்கிறாரா? இவர் ஆரம்பித்தார். இரண்டு முறை ஐரோப்பாவைச் சுற்றியபோது கல்வியின் மேல் எழுந்த ஆர்வம் உள்ளத்தின் மேல் அழுந்த, இவர் சொந்த ஊரில் தொடங்கிய பள்ளியில் பயிற்சிகளை நூதனமாய் வடிவமைத்தார். பாடம் கற்றுக் கொடுப்பது பற்றி நிறைய பாடங்கள் எழுதிக் குவித்தார். இவரின் 20 வருட உழைப்பில் வெளியான ரஷ்ய மொழிக் கல்விப் புத்தகம் பத்து லட்சம் பிரதி விற்றதில் பணமும் குவித்தார்.

நாவலின் தலைப்பு (‘போரும் சமாதானமும்.’) மணவாழ்க்கைக்கும் தலைப்பாக அமைந்தது. சோபியாவைக் காதலித்த போது, தன் கேளிக்கையான கடந்த காலத்தை பிட்டுப் பிட்டு வைத்து விட்டார் அவளிடம். எனினும் சோபியா உறுதியுடன் ஏற்றுக்கொண்டார் அவரை.
மனமொத்திருந்த முதல் பத்து வருடங்களில் மலர்ந்தது தான் அந்த நாவல். War and Peace. ஏழு வருடம் ஆயிற்று அதை எழுத. ஏழு முறை பிரதி எடுத்துத் தந்தாள் அவள். எழுதுவதைத் தவிர அவரின் வேறு எல்லா வேலைகளையும் தானே ஏற்றுக்கொண்டாள்.

ஆனாலும் இருவர் குணாதிசயங்களும் அகல நதியின் இரு கரைகள். இடையில் கரைபுரண்டோடிற்று காட்டாற்று வெள்ளம். எளிமை இவர் ராஜ்யம். வளமை அவள் இஷ்டம். கற்பனைதான் இவர் மனக் கிடப்பு. அவள் நாட்டமோ நிஜ நடப்பு.

சொத்து, சுகம், சௌகரியம் எல்லாவற்றிலிருந்தும் இவர் விலக விலக, மனைவி சோபியாவுக்கு பொறுப்பு அதிகரித்து அவற்றை இழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயம். நாடோடி மாதிரி அவர் சுற்ற, ஓடோடி அலைந்து குடும்பத்தைப் பராமரித்தாள் இவள்.

தன் புத்தகங்களைப் பொதுவாக்கினார். சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்தார். மனைவிக்கு மயக்கம் வராத குறைதான். அவரோ தன் வழியில் விரைவாய் பயணித்தார். புலாலையும் புகையையும் விட்டார். ஏன் வெள்ளை ரொட்டியைக் கூட! செருப்பு தைத்து, தின வருமானம் உழைப்பினால் பெற்றார். இடைவெளி பெரிதாயிற்று.

இல்லறத்தின் இறுதிக்காட்சி நாவலைப் போன்றது. தன்னிச்சையாக கடைசி மகளுடன் ரயில் போன போக்கில் புறப்பட்டுப் போன கணவர் வழியில் நிமோனியா தாக்குண்டு ஸ்டேஷன் மாஸ்டர் வீட்டில் கிடக்கிறார். மனைவியை உள்ளே விட மறுக்கிறார்கள் அவரை அப்செட் செய்துவிடுவார் என்று. அவர் நினைவிழந்த பின்னரே அனுமதி கிடைக்கிறது. தன் நேசத்தை சொல்லி அழுகிறாள் அவளும்!

காந்திஜிக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமை. நாட்டின் ஜீவநாடி கிராமங்களில் இருப்பதாக இவரும் நினைத்தார். 1908-ல் இந்திய பத்திரிகை ஒன்றில் டால்ஸ்டாய் எழுதிய கடிதம் காந்திஜியுடனான தொடர்பைத் தோற்றுவித்தது. வியக்க வைக்கிற விஷயம் இவரின் ‘கடவுளின் ராஜ்ஜியம் உனக்குள்’ புத்தகத்தைப் படித்து அகிம்சையில் தன் ஈடுபாடு அதிகரித்ததாக காந்திஜி நெகழ்வுடன் சொல்லியிருக்கிறார் தன் சுயசரிதையில். தன் ஆசிரமம் ஒன்றிற்கு டால்ஸ்டாய் பெயரையும் வைத்திருக்கிறார்.

திருப்பித் திருப்பிப் படித்துப் பார்த்துவிட்டு ஷேக்ஸ்பியர் நூற்களைப் பற்றி இவர் சொன்னது: ‘மோசம்.’ தன் கடைசி நாள்வரை உண்மையையும் சக மனிதனையும் நேசித்த டால்ஸ்டாய்க்கு ஆபிரகாம் லிங்கன் மேல் அபாரமான மதிப்பு.

டால்ஸ்டாயின் ‘முட்டை அளவு தானியம்’ என்ற கதை எவரையும் பிரமிக்க வைப்பது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் முட்டை சைசுக்கு ஒரு உருண்டையான பொருளை கண்டெடுக்க, அது அரண்மனையில் ஒப்படைக்கப்படுகிறது. மன்னர் அது என்னவென்று தன் சபை அறிஞர்களைக் கேட்டதில் அவர்கள் அது ஒரு தானியம் என்று கண்டுபிடிக்கிறார்கள். எந்தப் புத்தகத்திலும் அது பற்றிய குறிப்பு இல்லை. எனவே நாட்டின் மூத்த விவசாயியைக் கேட்கலாம் என்று சொல்கிறார்கள். வரவழைக்கிறார்கள்.

இரண்டு கைத்தடி ஊன்றியபடி வரும் பார்வை மங்கிய காது கேட்காத கிழவர் அதைப் பார்த்துவிட்டு தனக்குத் தெரியவில்லை என்கிறார், ‘ஒருவேளை எங்கப்பாவுக்கு தெரியலாம்.’ அவர் அப்பாவோ ஒரே ஒரு கைத்தடியுடன் வருகிறார். காது கொஞ்சம் கேட்கிறது. அவரும் அதை மாதிரி பார்த்ததில்லை. ‘ஆனால் எங்கப்பா தன் காலத்தில் தானியம் எல்லாம் பெருசா இருந்ததாக சொல்லியிருக்கிறார். அவரை…’ அவர் அப்பா கைத்தடி இன்றி நல்ல கண் பார்வையுடன் நேராக நடந்து வருகிறார். அதை அடையாளம் கண்டு கொள்கிறார். ‘ஓ இதுவா… இதைத்தான் எங்க காலத்தில் எல்லா இடத்திலும் பயிர் செய்து வந்தோம்,’ என்று விளக்குகிறார். ‘அதெப்படி உங்கள் பேரனையும் மகனையும்விட நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்ட மன்னனிடம் ‘அப்போது நாங்கள் அடுத்தவர் உழைப்பில் வாழாமல் எங்கள் சொந்த உழைப்பில் வாழ்ந்தோம், அதனால்தான்,’ என்கிறார்.

பிற்காலத்தில் இவர் எழுத்துக்கள் ஆன்மீகத்தையும் அகிம்சையையும் தழுவின. புகழை ஏற்றுக்கொள்ளத் துளியும் விருப்பம் இல்லாத டால்ஸ்டாயின் மகிழ்வு இருந்ததெல்லாம் அவரது இளமை திகழ்ந்த, கைகள் அகழ்ந்த யஸ்னயாபோல்னயா மண்ணில் தான்.

கருத்துக்கள் ஒவ்வொன்றும் நச்சென்று இருக்கும். பாருங்களேன்!…
‘உலகத்தை மாற்ற எல்லோரும் நினைக்கிறார்கள். தன்னை மாற்றிக்கொள்ள யாருமே தயாராக இல்லை.’
‘எந்தப் பிராணியையும் கொல்லாமலேயே மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும் என்கிறபோது அவன் மாமிசம் உண்டால், தன் ருசிக்காக அவன் விலங்கினத்தை அழிக்கிறான் என்பதே அதன் அர்த்தம்.’
‘மனிதனின் சந்தோஷம் வாழ்க்கையில் அடங்கியிருக்கிறது. வாழ்க்கை உழைப்பில் அடங்கியிருக்கிறது.’
‘ஒரு மனிதனின் தோளின் மீதேறி நான் உட்கார்ந்து, மூச்சுத்திணற என்னை சுமக்க வைத்தபடி, நான் அவனுக்காக மிக வருத்தப்படுவதாக என்னையும் பிறரையும் நம்ப வைப்பதோடு, எந்த வகையிலாவது அவன் விதியை மேம்படுத்த விரும்புவதாகவும் சொல்லிக்கொள்கிறேன், அவன் தோளை விட்டு இறங்குவதை தவிர!’
‘அழகானவை எல்லாம் நல்லவை என்கிற மாயை எத்தனை முழுமையாகச் சூழ்ந்திருக்கிறது நம்மை!’
‘மனிதனின் சிறந்த ஓய்வு மற்றவர்களுக்கு உதவுவதே.’
‘நமக்குத் தெரிந்த ஒரே விஷயம் நமக்கு ஒன்றுமே தெரியாது என்பதுதான்!’

<<
(‘அமுதம்’ Feb. 2010 இதழில் வெளியான எனது ‘சந்தித்ததும் சிந்தித்ததும்’ அத்தியாயம் 36 -இலிருந்து.)

One Comment on “மனதில் உயர்ந்துவிட் ‘டால்’…/ஜனார்தனம் கே.பி.”

Comments are closed.