ஒரு மனிதனின் கதை/எஸ்.பி.முத்துராமன்

எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய, ‘ஒரு மனிதனின் கதை’ என்ற நாவலை தொலைக்காட்சித் தொடராக எடுக்கத் திட்டமிட்டோம். ‘குடிப்பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது’ என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதை
மையமாகக் கொண்ட கதை அது. அந்தத்
தொடருக்கு யாரை கதாநாயகனாக போடுவது என்று யோசித்தபோது, ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரகுவரன் நினைவுக்கு வந்தார். அவரை அணுகியபோது எந்த யோசனை யும் இல்லாமல் உடனே சம்மதித்தார். சம்மதித்தது மட்டுமல்ல; அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டினார். ‘குடித்து விட்டுத்தான் நடிக்கிறாரோ’ என்று மக்கள் கேட்டனர். அந்த அளவு அவரின் நடிப்பில் யதார்த்தம் தெரிந்தது.

தூர்தர்சனின் ‘பொதிகை’ தொலைக் காட்சியில் வெள்ளிக்கிழமைதோறும் ஒளிபரப்பான ‘ஒரு மனிதனின் கதை’ மெகா தொடர் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அப்போதெல்லாம் சென்னையைச் சுற்றி 100 கிலோ மீட்டர் தொலைவுக்குத்தான் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பானது. அந்தப் பகுதிகளில் பார்த்த மக்களிடம் இருந்து வந்த விமர்சனங்கள் பெரிய அளவில் உத்வேகத்தைக் கொடுத்தன.

‘என் கணவர் குடித்துவிட்டு வந்து குடும்பத்தினரைக் கொடுமைப்படுத்துவ தில்லை’, ‘என் கணவர் இந்தத் தொடரைப் பார்த்த பிறகு குடிப்பழக்கத்தையே விட்டு விட்டார்’ என்று பல மனைவியர்கள் கடிதம் எழுதினார்கள். அதைப் பார்த்த ஏவி.எம்.சரவணன் சார், தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல அந்தத் தொடரை சினிமாவாக எடுக்க முடிவெடுத்தார்கள். அந்தப் படம்தான் ஏவி.எம்-ன் ‘தியாகு’.

அந்தப் படத்திலும் ‘தியாகு’வாக ரகுவரனே நடித்தார். தனக்கென்று ஒரு தனிமுத்திரை பதித்த ரகுவரன், அந்தக் காலகட்டத்துக்குப் பிறகு நிஜ வாழ்க்கையில் சில விஷயங்களில் ஈடுபடத் தொடங்கினார்.

ஒருமுறை என்னிடம், ‘‘முத்துராமன் சார், வீட்டுல வரவர தொந்தரவு
அதிகமாகிடுச்சு. ஹோட்டலில் ஒரு தனி ரூம் எடுத்து தங்கப்போறேன்!’’ என்றார். அதுக்கு நான், ‘‘நீங்க தனியா தங்குறது எனக்கு சரியாப்படலை. உங்களை சுத்தி துணை இல்லாம இருந்தா கண்டதை சிந்திக்கத் தோணும். செயல்படத் தோணும். தப்பு நடக்க நிறைய வாய்ப்பு இருக்கு!’’ என்று சொன்னேன். அதை அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு பார்த்தால், ‘ரகுவரன் முழுக்க மதுவுக்கு அடிமை யாகிவிட்டார்’ என்ற செய்திதான் என் காதுக்கு வந்தது. அதை கேள்விப்பட்டதும் மனம் தாங்கிக்கொள்ள
முடியவில்லை.

ஒரு நாள் நானும், ரஜினியும் சோழா ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந் தோம். அவருக்கு அந்த ஹோட்டலில் தயாராகும் புதினா பரோட்டா ரொம்பவும் பிடிக்கும். அப்போது ரஜினிக்கு பக்கத்து இருக்கையில் ஒருவர் வந்து அமர்ந்தார். கொஞ்ச நேரத்துக்கு பிறகு ரஜினி என்னிடம், ‘‘முத்துராமன் சார், என்ன எதுவுமே கண்டுக்காம இருக்கீங்க?’’ என்று கேட்டார். அதற்கு நான், ‘‘என்ன ரஜினி… புரியலையே?’’ என்று சொன்னேன். அப்போது ரஜினி, ‘‘ என் பக்கத்துல உட்கார்ந்திருப்பது யாருன்னு பார்த்தீங்களா?’’ என்று கேட்டார். ‘‘தெரியலையே ரஜினி?’’ என்று சொல்லியபடியே ரஜினி சுட்டிக் காட்டியவரை உற்றுப் பார்த்தேன். யார் அவர்?

நானும் ரஜினியும்
ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, எங்கள் பக்கத்து டேபிளில் வந்து உட்கார்ந்தவரைப் பற்றி ரஜினி சுட்டிக் காட்டியவுடன், அந்த நபர் யாரென்று உற்றுப் பார்த்தேன். கண்கள் எல்லாம் உள்ளே போய், தாடி வளர்ந்து அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருந்த அவர், ரகுவரன்.

சில விநாடிகள் என்னால் நம்பவே முடியல. ‘‘ரகுவரன்… ரகுவரன்…’’ என்று இரண்டு தடவை உரக்கக் கூப்பிட்ட பிறகுதான் எங்கள் பக்கம் திரும்பினார். நான் ரஜினியைப் பார்த்தேன். அவர் சொன்னார்: ‘‘என்ன சார் பண்றது? நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். அவர் திருந்துற மாதிரி தெரியலையே!’’ என்றார். ரொம்ப வருத்தப்படும் அளவுக்கு அந்த சந்திப்பு அமைந்துவிட்டது.

அடுத்த சில ஆண்டுகளுக்குப் பிறகு ரகுவரன் திருந்திவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு மகிழ்ந்தேன். அதன் பிறகு நடிகை ரோகிணி, ரகுவரன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். சினிமாவை உயிராக நேசிக்கும் நடிகைகளில் ரோகிணியும் ஒருவர். எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று விரும்புபவர். ஆனால், ரகுவரன் – ரோகிணி இல்லறமும் நீடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அடுத்த சில ஆண்டுகளில் ரகுவரன் உடல் நலக்குறை வால் உயிரிழந்தார்.

‘ஒரு மனிதனின் கதை’ தொடரில் நடித்த ஒரு மனிதனின் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்டேன். அதனால்தான். ‘மதுப் பழக்கம், போதைப் பழக்கம் கூடாது’ என்று சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் நான் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.


நன்றி: இந்து தமிழ் திசை

One Comment on “ஒரு மனிதனின் கதை/எஸ்.பி.முத்துராமன்”

Comments are closed.