
தமிழக அரசு மின்கட்டணத்தை இவ்வளவு அதிகமாக உயர்த்துவது மத்திய வர்க்கத்தின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். அரசு கட்டண உயர்வு வழியாக மின் துறையில் உள்ள நஷ்டங்களை ஈடுகட்டுவதை புரிந்து கொள்கிறேன். ஆனால் அது தவறான மார்க்கம் ஆகும்.
இதற்குப் பதிலாக வேறுவழிகளில் கஜானாவின் வருவாயை ஈட்டலாம்:
1) வணிக வளாகங்களை உருவாக்கி நடத்தலாம்.
2) வீடுகளையும் பிற கட்டிடங்களையும் கட்டும் துறையில் அரசு கால் பதிக்கலாம்.
3) சினிமா தயாரிப்பில் ஈடுபடலாம்.
4) ஐ.பி.எல் போன்ற கேளிக்கை ஆட்டத்தொடர்களை நடத்தலாம்.
5) மென்பொருள் நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், உற்பத்தி துறை என அடுத்தடுத்து கால் பதிக்கலாம்.
இவற்றில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு வரியை பெருமளவு குறைத்து மக்களின் வாங்கும் திறனை அதிகரித்து பொருளாதாரத்தையும் மேம்படுத்தலாம். இதனால் கறுப்புப் பணமும் ஒழியும். அரசே எடுத்து நடத்தினால் மணற் கடத்தல், கிரானைட் கொள்ளையும் ஒழியும்.
சொல்லப் போனால் எந்த வரியும் இல்லாமல் முழுக்க லாபத்தைக் கொண்டே அரசு தன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், நலத்திட்டங்களை செயல்படுத்தவும் முடியும். அதற்கு அரசு நிறுவனமானது தனியார் நிறுவனங்களுக்கு இணையாக லாப நோக்குடன் செயல்பட்டால் போதும். அரசிடம் அனைத்து அதிகாரங்களும் உள்ளதால் தனியாரால் தாக்குப்பிடிக்கவே முடியாது.
இதை நோக்கிய ஒரு சிறு முயற்சி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் எடுக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினும் இந்த கொள்கையை விரிவுபடுத்தி அரசின் வருவாயை பெருக்கினால் மக்களின் நன்மதிப்பை பெறுவார். அல்லாவிடில் வரி அதிகமாக ஆக மக்கள் அரசிடம் இருந்து அந்நியப்படுவார். இப்போதுள்ள நிர்வாக / சேவை அரசு எனும் கட்டமைப்பானது நவீன முதலீட்டிய அமைப்புடன் ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருகிறது. அதனாலே பினாமி முதலீட்டிய அரசாக, மக்களை சுரண்டுகிற, பொருளாதார வீக்கத்தை அதிகரிக்கிற நிர்வாக அரசாக இன்றைய ஜனநாயக அரசுகள் மாறி வருகின்றன. இதை மாற்றினால் ஒழிய மக்களுக்கு நிம்மதி கிடைக்காது.
இப்போதைக்கு அரசு இரு மாதங்களுக்கு ஒருமுறை கட்டண வசூல் செய்வதாக முடிவெடுக்க வேண்டும். மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். அடுத்து புதிய வருவாய் மார்க்கங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
