“விட்டு விடுதலையாகி நிற்பாய் – இந்தச் சிட்டுக் குருவியைப் போலே”/பாரதி

ஸ்ரீதர் நாராயணன் முகநூல் பதிவு

அண்மையில் நடந்த பொன்னியின் செல்வன் முன்னோட்ட்டம் வெளியீட்டு விழாவில், கல்கியின் கதை நாட்டுடையாக்கப் பட்டுவிட்டதால், தனக்கு அதைத் திரைப்படமாக்கும் ஆர்வம் குறைந்து விட்டதாக கமல் குறிப்பிட்டிருந்தார்.

சினிமா வணிகம் அப்படித்தான். அதன் காப்புரிமைக் கிளைகள் இன்று பல ஊடகங்கள் வழியே பரவி எண்ணி பார்க்கவியலாத வகையில் மிகப் பெரும் வாணிபம் செய்கின்றன. ஆனால் கமல் குறிப்பிட்ட காலத்தில் (எம் ஜி ஆருடனான அவருடைய உரையாடல் நிகழ்ந்த போது), கல்கியின் படைப்புகள் நாட்டுடமையாக ஆக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகள் குறைவுதான். 90களில்தான் கல்கி வாரப்பத்திரிகையில், பத்மவாசனின் ஓவியங்களுடன், பொன்னியின் செல்வ்வன் நான்காவது முறை, தொடராக வெளியிடப்பட்டது. கல்கியின் வாரிசான கி ராஜேந்திரன் அவர்கள், திரைப்படமாக்க ஒப்பந்தத்தின் போது அதில் ஒரு காலவரை நிபந்தனையை உட்படுத்தியிருந்ததால்தான், அதன் காப்புரிமையை ஒரேயடியாக எம்ஜிஆருக்கோ, கமலுக்கோ, மணிரத்னத்திற்கோ தாரை வார்த்து விடாமல் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது என்பார்கள்.

பாரதியின் நினைவு தினத்தன்று, இந்த காப்புரிமை பற்றிய எண்ணவோட்டம் வருவதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. அவருடைய தம்பி விசுவநாதையர் மற்றும் பாரதியின் இந்த சிட்டுக்குருவிப் பாட்டு.

பாரதியின் கவித்துவத்தின் உச்சமென அவருடைய புதுச்சேரி வாசத்தைக் குறிப்பிடலாம். அப்பொழுதுதான் அவர் மிகுந்த படைப்பூக்கத்துடன் கண்ணன் பாட்டு, குயில்ப்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்றவைகளைக் கூறலாம். சிறு காவியங்கள் எனும் அளவிற்கு தமிழ்பிரவாகமும், புத்துயிர்ப்பான கருப்பொருளும் கொண்டவை.

அவருடைய பிரசித்திப் பெற்ற ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’ பாடலில் இடம்பெற்றிருக்கும் “தீக்குள் விரல் வைத்தால், நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா” என்கிற வரியைய்ப் பற்றி ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அருமையானதொரு கட்டுரை எழுதியிருப்பார். “அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும் மெய்வேவாள்” என்கிற நம்மாழ்வாரின் பாசுரத்தோடு ஒப்பிட்டு மோகனரங்கன் எடுத்துவைக்கும் கருத்துரை, ஒரு கவிதையை எப்படி உள்ளார்ந்து அறிந்து கொள்வது என்பதற்கு மிக அழகான எடுத்துக்காட்டு.

அரசியல் கட்டுரைகள், விடுதலை முழக்கப் பாடல்கள், கார்ட்டூன்களுடன் (அவரே வரைந்தது) தலையங்கங்கள், அரவிந்தரால் ஈர்க்கப்பட்டு எழுதிய ஆன்மிக விவாதங்கள், புனைவுகள், காவியங்கள் என்று பாரதியின் படைப்புலகை ஒன்று கூட்டி புத்தகங்களாக அவர் கொண்டு வர நினைத்தது, அவருடைய மறைவிற்கு பின்னால்தான் முழுவதும் சாத்தியமாகியது.

அவருடைய தம்பி விசுவநாதர், மதுரைக்கு அருகே மானாமதுரையில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தார். மதுரையில் இருந்த எங்கள் தாத்தாவிற்கு விசுவநாதர் மீது மிகவும் மதிப்புண்டு. எங்கள் மாமாவிற்கு அவருடைய பேத்தியைத்தான் மணமுடித்திருந்தார்கள். ‘பாரதி பிரசுராலயம்’ அமைத்து, பாரதியின் துணைவி செல்லம்மாள் அவர்களுடன் இணைந்து பாரதியின் படைப்புகளை பதிப்பித்தது விசுவநாதையர்தான். அத்தோடு நில்லாமல், பாரதியின் ‘அக்கினி குஞ்சொன்று கண்டேன்’ பாடல்கள் முதற்கொண்டு பல படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1920களிலேயே வெளியிட்டார்.

இதில் விசுவநாதர் சம்பந்தப்பட்ட பல குறிப்புகளை, “கத்திக்காரன்” தொகுப்பில் இடம்பெற்ற “பாரதி என்னும் பற்றுக்கோடு” சிறுகதையில் குறிப்பிட்டிருந்தேன். அதில் இடம்பெறாத ஆனால் முக்கியமானது, அவர் பாரதியின் படைப்புகளின் காப்பிரைட் வழக்கில் சிக்கிக் கொண்டது.

1940-களில் பாரதியின் பாடல்களுக்கு தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்பு இருந்தது. பாடலுக்கான ராகம், சொற்களின் ஓசை நயம், மெட்டில் இயைந்து வரும் வரிகள், இந்திய விடுதலைப் போராட்டத்தின் முழக்கம் என்று பாரதியின் பாடல்கள் இயல்பாகவே இசையமைப்பாளர்களுக்கு உகந்தபடி அமைந்திருந்தன.

ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘நாம் இருவர்’ என்னும் திரைப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஆர் சுதர்சனம், பதினோரு பாடல்களை இசையமைத்து கொடுக்கிறார். அதில் ஆறு பாடல்களை கேபி காமாட்சிசுந்தரம் (இவர் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் வில்லன் நடிகரும் கூட என்பது உபரி செய்தி) எழுதிக் கொடுக்க, வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் ஒரு பாடலும், மகாகவி பாரதியின் நான்கு பாடல்களையும் சேர்த்து அருமையான இசை ஆல்பம் உருவாகியது.

ஏவிஎம் செட்டியார் பாரதியின் பாடல்களை மொத்தமாக சொற்ப தொகை பத்தாயிரம் ரூபாய் கொடுத்து காப்புரிமை வாங்கிக் கொண்டுவிட்டார். அப்போது பாரதி பிரசுராலயத்தின் வழியே பாரதியின் புத்தகங்களைப் பதிப்பிட்டுக் கொண்டிருந்த விசுவநாதருக்கு கிடைத்ததோ பத்தில் ஒரு பங்கு. ஆனால் ஒப்பந்தமோ பாரதியின் பாடல் வரிகளின் மொத்த காப்புரிமையும் செட்டியாருக்கு கொடுத்தபடி போடப்பட்டுவிட்டது.

அவ்வை சண்முகம் அவர்களின் ‘பில்ஹணன்’ நாடகம் திரைப்படமாகும்போது, பாரதியின் பாடல் ஒன்றை அதில் சேர்க்கத் திட்டமிடுகின்றனர். பாரதி பிரசுராலயத்திடம் பேசி ஒப்புதல் வாங்கலாம் என்றால் முடியவில்லை. இந்தப் பாடல் அந்தப் பாடல் என பாகுபாடில்லாமல் ஒட்டுமொத்த பாரதியின் பாடல்களின் காப்புரிமையும் ஏவிஎம்மிடம். அதுவும் சினிமாக்களுக்கு மட்டும் என இல்லாமல், நாடகங்கள், பத்திரிகைகள் என அனைத்து ஊடகங்களுக்கான காப்புரிமையும் அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. பத்திரிகையிலோ அல்லது வேறு பிரசுரங்களிலோ பாரதியின் பாடல் வரிகள் இடம்பெற வேண்டுமென்றால், ஏவிஎம்மிற்கு கட்டணம் கட்டித்தான் பாடல் வரிகளை பிரசுரிக்க முடியும். பாரதியின் குடும்ப்பத்தாருக்கோ, பாரதி பிரசுராலயத்திற்கோ தம்பிடி கூட கிடைக்காது என்பதுதான் அன்றைய நிலைமை.

அப்போதுதான் இந்த காப்புரிமை ஒப்பந்தத்தின் அபத்தமான திருகல் நிலை விசுவநாதையருக்கேப் புரிகிறது. அவ்வை ஷண்முமம் அவர்கள் அதை விடாமல், ‘பில்ஹணன்’ படத்தில் பாரதியின் பாடலை இடம்பெறச் செய்வதில் தீவிரமாக இருக்க, ஏவிஎம் செட்டியார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கிறார்.

பாரதியின் ஆத்மார்த்த நண்பர்களில் ஒருவரான பரலி சு. நெல்லையப்பரின் சீடரான மற்றொரு விசுவநாதன் இப்போது களத்திற்கு வருகிறார். இவரை ‘எதிரொலி’ விசுவநாதன் என குறிப்பிடுவார்கள். பாரதியின் பாடல்கள் இந்த திருகலான காப்புரிமைச் சிக்கலிலிருந்து விடுவிக்க எழுத்தாளர்கள் கூட்டமைப்பு வழியே, தோழர் ஜீவா உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடைய முன்னிலையில் போராட்டம் மேற்கொள்கிறார். ஒருவழியாக, சென்னை ராஜதானியின் முதல்வரான குமாரராஜா அவர்களின் கவனத்திற்கு இந்த காப்புரிமை பிரச்னை செல்ல, அவர் ஏவிஎம் நிறுவனத்தையும், பாரதியாரின் குடும்பத்தையும் அழைத்துப் பேசி, பாரதியின் படைப்புகளை நாட்டுடமையாக்கும் அறிவிப்பை வெளியிடுகிறார்.

பாரதி மறைந்து முப்பது ஆண்டுகளிலே அவருடைய படைப்புகள் நாட்டு மக்களின் பொதுவுடைமையாகி விட்டன. அவருடைய குடும்பத்தாருக்கு, அவருடைய படைப்புகளின் முதன்மை பிரசுரகர்த்தருக்கு முதலியோர்க்கு எவ்வித பயனும் இல்லாமல் போயிற்று.

ஆனால், அதன்பிறகு அந்த மகா கவிஞனின் எழுச்சிமிகு வரிகள் தமிழ் பேசும் நாவெங்கும் பற்றிக் கொண்டு, தமிழகம், ஈழம், ஐரோப்பா, மத்தியகிழக்கு நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று உலகெங்கும் பரவத் தொடங்கின.

பாரதியின் படைப்பில் மிக நீண்ட காலம் ஆராய்ச்சி செய்து அவருடைய படைப்புலகை காலவரிசையிட்டு தொகுத்தவரும் ஒரு விசுவநாதன்தான். சீனி. விசுவநாதன் அவர்கள். 83ல் பாரதி நூற்றாண்டு விழா சீனி விசுவநாதன் தலைமையில் கொண்டாடப் பட்டது.

கிட்டத்தட்ட சீனி. விசுவநாதன் போல பாரதியின் எழுத்தில் நாட்டம் கொண்டவராகத்தான், ‘பாரதி என்னும் பற்றுகோடு’ சிறுகதையில் வரும் ‘புலவர் இரத்தனசாமி’ இருப்பார். பாரதியின் அருஞ்சேகரிப்பில் தன்னை முழுவதுமாக அமிழ்த்திக் கொண்டு.

ஆனால், நடப்புலகம் அவருடைய ஆத்மார்த்தமான சேவையை, பண மதிப்பில் அணுகும்போது அவரை அது பேசவிடாதபடிக்கு அழுத்திக் கொள்ளும். கதைசொல்லி அளிக்கும் பணத்தை மறுக்க இயலாத பொருளாதார நிலையும். இதற்குத்தானா தான் இவ்வளவு பாடுபடுகிறோம் என்கிற அதிர்ச்சியும் ஒருங்கிணைந்து அவரை அழுத்த, அவருடைய மனதின் வெம்மையை உணர்ந்தபடி கதைசொல்லி வெளியேறுவதுமாக அந்தக் கதை முடிந்திருக்கும்.

சுதந்திர வானின் ஒளிக்கு நிகராக, மதுவின் சுவை தவிர வேறெது உண்டு.

பாரதியின் சிட்டுக்குருவி பாடலின் முழுவடிவம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது..

“விட்டு விடுதலையாகி நிற்பாய் – இந்தச்
சிட்டுக் குருவியைப் போலே

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப்படாது எங்கும் கொட்டிக் கிடக்கும்
இவ்வானொளி எனும் மதுவின் சுவையுண்டு

பெட்டையி னோடு இன்பம் பேசிக்களிப்புற்றுப்
பீடையிலாததோர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு

முற்றத்திலேயும் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை ஆகுமுன் பாடி விழிப்புற்று.”