உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கிறதா/எம்.டி.முத்துக்குமாரசாமி


பல வருடங்களுக்குப் பின் இங்கிலாந்திலிருந்து வந்திருந்த நண்பர் நித்தியானந்தனை நடேஷின் வீட்டில் பார்த்தபோது அவருடைய பிரமாதமான நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. ஒரு முறை ஆட்டோக்காரர் ஒருவர் வண்டிச்சத்தம் பேரம் பேசும்போது நான் அவ்வளவு தூரம் வந்து உங்களை இறக்கிவிட்டுவிட்டு தனியாக வரவேண்டுமே என்றார். நித்தி உடனடியாக நாமென்ன காதலர்களா ஒன்றாகவே போய்க்கொண்டிருப்பதற்கு நீங்கள் என்னை இறக்கிவிட்டபின் தனியாகப் போகத்தான் வேண்டும் என்றார். பேரம் பேசிய ஆட்டோக்காரருக்கே சிரிப்பு தாளவில்லை.
இன்னொரு முறை மணிமேகலை பிரசுரம் வெளியிடும் புத்தகங்களின் தலைப்பு போல – மிக அதிகமான அளவு விற்பனையாவதற்கு வாய்ப்பு உள்ள புத்தகத் தலைப்பு எது என்ற பேச்சு வந்தது. நித்தி ‘உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கிறதா?’ என்ற தலைப்பைச் சொன்னார். எல்லோருக்குமே எப்போதுமே ஒரு மாதிரிதானே இருக்கும்? அதனால் அந்த தலைப்பைப் பார்த்து புத்தகத்தை அதிக அளவில் வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நிச்சயம் பெஸ்ட் செல்லர்.