
அனைத்து அழகும் ஒரு கனவு,
அவை தோற்றம் பெற்றிருப்பினும்.
ஏனெனில்,
எப்போதும் தன் இருப்பைவிடவும் அதிகமுடையது அழகு.
உன்னில் நான் காணும் அழகானது
எனக்கடுத்தாற் போல, இங்கே இருப்பதன்று.
நான் உன்னிடத்தில் எதைக் காண்கிறேனோ, அது
இங்கிருந்து வெகு தொலைவில்,
நான் காணும் கனவில் உயிர்த்திருக்கிறது.
நீ இருப்பாயானால் ,
நான் மாத்திரமே அதையறிவேன்.
ஏனெனில் அது என் கனவு மட்டுமே,
நான் மட்டுமே அதைக் கனவு கண்டேன்.
அழகு என்பது கனவில் கேட்கும், வாழ்வில் மேவிப் பாயும் இசை.
ஆயினும்
அதை வாழ்க்கை எனக் கூறவியலாது.
அது கனவு காணப்பட்ட வாழ்க்கை.
தமிழில் : க.மோகனரங்கன்
