இனிக்கும் தமிழ் – 141/டி வி ராதாகிருஷ்ணன்

உருவு கண்டு..

குப்பையில் கிடக்கும் காகிதம்..காற்றடித்தால் கோபுர உச்சிக்கு சென்று
அமரலாம்.கோபுர உச்சியில் உள்ள காகிதம் குப்பைக்கு வரலாம்.இதுவே
இப்படியென்றால் ..ஒவ்வொருவர் வாழ்க்கையும் அவர்களை எவ்வழி செலுத்தும் என்பதை சொல்ல முடியாது.
நம்மைவிட குறைந்தவர்களை..நாம் சாதாரணமாக நினைத்தால்..நம்மால் அவர்களுக்கு ஏதேனும் தீமை நேர்ந்தால் மனதில் வைத்துக் கொண்டு ..பின்னாளில்..நமக்கு பெரிய தீமையை உண்டாக்கிவிடுவார்கள்.
சிறுவர் என மற்றவர்களை எண்ணிவிடக் கூடாது..
உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து என்கிறார் வள்ளுவர்.


உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்
படுத்தக் கூடாது.பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான்..(அதுதான் அத்தனைப் பெரிய தேர் ஓடக் காரணம்) என்பதை உணர வேண்டும்.

சிறுவன் தானே என மகாபலி எண்ணினான்.அவனிடம் குள்ள உருவத்தில் வந்த வாமனன் ..மூன்றடியில் உலகையே அளந்தான்.

அவ்வளவு ஏன்..இராமன் கூட சிறியர் என எண்ணி கூனி வருந்த அவளிடம் ஆடிய சிறு விளியயாட்டாலேயே துன்பக் கடலில் வீழந்தான்
சுக்ரீவனுக்கு முடி சூட்டிய பின் அவனுக்கு சில அறிவுரைகள்
வழங்கினான்.அப்போது சொல்கிறான்..


சிறியர் என்று இகழ்ந்து நோவு
செய்வன செய்யல்.மற்று,இந்
நெறி இகழ்ந்து, யான் ஓர் தீமை
இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,
குறியது ஆம் மேனி ஆய
கூனியால், குவவுத் தோளாய்!
வெறியன எய்தி, நொய்தின் வெந்
துயர்க் கடலில் வீழ்ந்தேன்..

பொருள்-

நம்மைவிட (அறிவில்,பணத்தில்,அதிகாரத்தில்) சிறியவர்கள் என்று
எண்ணி,அவர்களை இகழ்வாகப் பேசி,துன்பம் தருவனவற்றை செய்யாதே! மேலும்,
இவ்வழியை மறந்து..நான் தீமை செய்ததால், அந்த பகைமை உணர்ச்சியை நீண்ட
நாட்கள் மனதில் வைத்திருந்து பழி வாங்கிவிடுவர்..குறுகிய வடிவை உடைய
கூனியால்..திரண்ட தோள்களை உடைய சுக்ரீவனே..(நான்) துன்பத்தினை
அடைந்து,வருந்தி..துன்பக் கடலில் வீழ்ந்தேன்.
நாம் சற்று யோசித்துப் பார்ப்போம்…

சக்ரவர்த்தித் திருமகன் இராமன்.கூனியோ அரண்மனையில் வேலை பார்க்கும் ஒரு
கிழவி.அவளால்..அவனை என்ன செய்ய முடியும்? ஆனால் அவளோ..சாம்ராஜ்ஜியத்தையே
புரட்டிப் போட்டு விட்டாள்.

இராமன் பெரிய தவறு ஒன்றும் செய்யவில்லை.மண் உருண்டையை வைத்து..அவளது கூன் முதுகில் அம்பு விட்டான்..சிறு வயதில்.
அது பொறுக்காமல்..அதை மனதில் வைத்து..பெரிய படைகளாலும் சாதிக்க முடியாததை அவள் சாதித்தாள்
அலள் போதனையால் கைகேயி மஞ்சள்..குங்குமம் இழந்தாள்
அவளால், இராமன் கானகம் போனான்.சீதையும், லட்சுமணனும் அவனைத்
தொடர்ந்தனர்.இராமன் அரசை இழந்தான்.தசரத சக்ரவர்த்தி இறந்தார்.
பரதன் அரசை ஏற்கவில்லை.இராமனின் பாதுகையை வைத்து ஆட்சி செய்தான்.
வாலி இறந்தான். இராவணன்,கும்பகர்ணன்,இந்திரஜித் போன்றோர் இறந்தனர்..
ஆகவே…சிறியோரை இகழேல் என்று தன் அனுபவத்தை சுக்ரீவனுக்கு பாடமாகச் சொன்னான்.