
கனவுகளில் திளைப்போரை
எழுப்பாதிருங்கள்.
தூக்கத்திற்கு
தன்னை ஒப்படைத்த
பிறந்த குழந்தையின்
புன்னகையையொத்த புன்னகையை
அவர்கள் சிந்துவதை ரசியுங்கள்.
நேற்றின் தயக்கங்களிலிருந்து
நேற்றின் காயங்களிலிருந்து
நேற்றின் வலிமிகுந்த கணங்களிலிருந்து
அவர்கள் தங்களை
விடுதலை செய்யும்
கணங்களை
கலைத்து விடாதீர்கள்.
ஒரு போதும் நடக்காத
ஒன்றென்றாலும்
எப்போதேனும்
நடக்குமெனும்
அவர்கள்
நம்பிக்கையின் மீது
கல்லெறியாதிருங்கள்.
கனவுகளிலிருந்து
அவர்களே தங்களை
விடுவிக்கட்டும்.
அடுத்தடுத்த நாட்களின்
அயற்கணங்களை
கனவுகளிலிருந்து
ஒரு துளியெடுத்து
வாழ்ந்து கொள்ளட்டும்.
கனவுகளில் திளைப்போரை
எழுப்பாதிருப்பவர்கள்
ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
