இன்று (செப். 21) கவிஞர் தமிழ் ஒளி பிறந்தநாள்

முகநூலில் ராஜ் கண்ணன் 

இன்று (செப். 21) கவிஞர் தமிழ் ஒளி பிறந்தநாள்.

புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். இயற்பெயர் விஜயரங்கம்.

பாரதிதாசனின் புதல்வர் மன்னர்மன்னன் இவரின் நண்பர். இருவரும் இணைந்து ‘முரசு’ எனும் கையெழுத்து ஏட்டை நடத்தினர்.

அதில் தமிழ் ஒளி எழுதியிருந்த கவிதைகளைப் படித்த பாரதிதாசன் தமிழ் ஒளியைப் பாராட்டினார்.

பாரதிதாசனின் ‘பாண்டியன் பரிசு’ காவியத்தின் கையெழுத்துப் படியினை நகல் எடுக்கும் பொறுப்பை ஏற்றுச் சிறப்பாக செய்து முடித்தார்.

பாரதிதாசன் பரிந்துரை செய்ய தஞ்சாவூர் கரந்தைத் தமிழ் கல்லூரியில் ‘வித்துவான்’ படிப்பில் சேர்ந்தார். படிப்பை முடிக்கவில்லை. ஓராண்டில் புதுவை திரும்பிவிட்டார்.

‘சிற்பியின் கனவு’ எனும் மேடை நாடகத்தை எழுதினார். சக்தி நாடக சபா உரிமையாளர் ‘சக்தி’ கிருஷ்ணசாமி அதன் உரிமையைப் பெற்று அரங்கேற்றினார். சிவாஜி கணேசன் நடித்த அந்நாடகம் பின்னர் ‘வணங்காமுடி’ எனும் பெயரில் திரைப்படமானது. திரைப்படத்திலும் சிவாஜி கணேசனே நடித்தார்.

தமிழ் ஒளி சிலப்பதிகாரத்தின் மீது பெரும் ஈடுபாடு கொண்டவர். ‘சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா?’ என்றோர் ஆய்வுநூல் எழுதியுள்ளார்.

மேலும், திருக்குறளும் கடவுளும், தமிழும் சமஸ்கிருதமும், நிலைபெற்ற சிலை. வீராயி, விதியோ? வீணையோ?, மாதவி காவியம், கண்ணப்பர் கிளிகள் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

தமிழ் ஒளி கவிதைகள், மக்கள் கவிதைகள், மே தினமே நீ வருக, நீ எந்தக் கட்சியில் ஆகிய கவிதை நூல்களையும் எழுதியுள்ளார். சிறுகதைகள், குறுநாவல்கள், குழந்தைப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

கவிஞர் குயிலன், எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், விந்தன் ஆகியோர் நெருங்கிய இவரின் நண்பர்கள். குறிப்பாக ஜெயகாந்தன் தமிழ் ஒளி மீது பெருமதிப்பு கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் இருவருக்கிடையிலான நட்பில் சிறு விரிசல் ஏற்பட்ட போதிலும் ஜெயகாந்தனுக்கு தமிழ் ஒளி மீதிருந்த மதிப்பு சிறிதும் குன்றவில்லை.

புதுமைப்பித்தனைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் ஜெயகாந்தன் தவறாமல் குறிப்பிடுவது, புதுமைப்பித்தன் குறித்து தமிழ் ஒளி எழுதிய, ‘உரைகெட்டிருந்து உணர்வற்றிருந்து சிறையுற்றிருந்த தமிழில் கரைதத்தி வந்த பெருவெள்ளமென்ற கதைகொண்டுவந்த புலவன்’ என்கிற வரிகளையே.

இன்று தமிழ் ஒளி பிறந்தநாள்.

One Comment on “இன்று (செப். 21) கவிஞர் தமிழ் ஒளி பிறந்தநாள்”

Comments are closed.