என் மீது வீசப்பட்ட அழுகல் முட்டை/- சாருநிவேதிதா

September 20, 2022

சென்ற மாதம் ஒரு பெண்மணி என்னிடம் ஒரு விஷயம் கேட்டார். அவர்கள் ஒரு இலக்கிய அமைப்பு வைத்திருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு மாதமும் ஒரு எழுத்தாளரின் ஏதேனும் ஒரு கதையைப் படித்து அந்தக் கதை பற்றிய மதிப்பீடுகளை சேகரித்து அதில் சிறந்த ஐந்து மதிப்பீடுகளுக்குப் பரிசளிக்கிறார்கள். அடுத்த மாதம் (அதாவது செப்டம்பர்) என்னுடைய ஏதாவது ஒரு சிறுகதையை வாசித்து மதிப்புரை எழுதச் சொல்லலாம் என்பது அவர்கள் திட்டம். என்னுடைய எந்தக் கதையை வாசிக்கலாம் என்று நான் யோசனை சொல்ல வேண்டும்.

கதை வாசிப்புக்காக நானும் சம்மதம் தெரிவித்தேன். ஏனென்றால், மாணவர்களோ பெண்களோ இலக்கியத்தின் பக்கம் நகர்ந்தால் அவர்களுக்கு என்னால் ஆன உதவியைச் செய்ய முற்படுவது என் வழக்கம். பிறகு கதை வாசிப்புக்கான தேதியும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் வழக்கப்படி அத்தோடு அந்த விஷயத்தை மறந்து போனேன்.

சில நாட்கள் கழித்து எந்தக் கதையை வாசிக்கலாம் என்று அந்தப் பெண் தொலைபேசியில் கேட்டார். என்னுடைய ஐந்து கதைகளைச் சொல்லி அதில் ஒரு கதையை தேர்ந்தெடுக்கலாம் என்றார். நான் முள் என்ற கதையை வாசிப்புக்கும் மதிப்புரைக்கும் எடுத்துக் கொள்ளலாம் என்றேன். என் வழக்கப்படி அத்தோடு அந்த விஷயத்தை மறந்து போனேன்.

ஸூம் மூலமாக நடக்கும் அந்த நிகழ்ச்சிக்குப் பத்து நாட்கள் முன்பாக அது பற்றி எனக்கு நினைவூட்டினார்கள். ஆனால் அந்தக் குறிப்பிட்ட தேதியில்தான் நான் என் நண்பர் ஒருவரை ஏழு ஆண்டுகள் கழித்து சந்திக்கிறேன். வெளிநாட்டிலிருந்து அவர் ஒவ்வொரு முறை சென்னை வரும் போதும் நான் ஏதாவது ஒரு வேலையில் மாட்டிக் கொண்டு இருந்ததால் அவரை சந்திக்க முடியாமலேயே போய்க்கொண்டு இருந்தது. இந்த முறை அவந்திகா ஊரில் இல்லாததால் அவரைச் சந்தித்து சாவகாசமாக பேசிக்கொண்டிருக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அது முடியாது போல் இருந்தது. இனிமேல் இம்மாதிரி நிகழ்ச்சிகளையெல்லாம் ஒப்புக் கொள்ளக் கூடாது என்று தாமதமாக நினைத்துக் கொண்டேன்.

ஒரு செக்ரட்டரி இருந்தால் இப்படிப்பட்ட தேதிக் குழப்பங்கள் நடக்காது. ஏழைத் தமிழ் எழுத்தாளனுக்கு அந்த லக்‌ஷுரியெல்லாம் கிடைக்குமா என்ன? (இதற்காகவாவது அந்த புக்கரோ கிக்கரோ கிடைத்துத் தொலைத்தால் நல்லது!)

இதற்கிடையில் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருவது ஒளிவண்ணன் என்பது தெரிந்தது. முன்பே இந்த விஷயம் மட்டும் தெரிந்திருந்தால் மிக நிச்சயமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்திருக்க மாட்டேன். முதல் பேச்சிலேயே மறுப்புத் தெரிவித்திருப்பேன். ஏனென்றால், ஏற்கனவே இரண்டு முறை ஒளிவண்ணனின் நடவடிக்கைகளால் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன்; அந்த இரண்டு சம்பவங்களைப் பற்றி எழுதியும் இருக்கிறேன்.

ஒன்று:

ஜனவரி 22, 2014இல் எழுதப்பட்டது. அந்தக் கட்டுரையின் முதல் பத்தி இது:

”நேற்று புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன். இரண்டு மணி நேரம் இருந்தேன். புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்களில் ஒருவரான ஒளிவண்ணன் எனக்குக் கொடுத்த எல்கேஜி புத்தகங்களை உயிர்மை ஸ்டாலில் ஒளித்து வைத்து விட்டு வந்து விட்டேன். அதை வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஜாங்கிரி பொட்டலம் மாதிரி அதை எனக்குப் பரிசு கொடுத்தார்கள்.”

புத்தக விழாவில் சகஜமாக நடக்கும் விஷயம்தான் அது. எழுத்தாளன் என்ற ஜந்துவைக் கூப்பிட்டு ”எங்கள் அரங்கில் நின்று போஸ் கொடுங்கள்” என்பார்கள். இல்லாவிட்டால் எதைப் பற்றியாவது பேசச் சொல்வார்கள். நானும் பூம்பூம் மாடு மாதிரி அவர்கள் சொல்வதைச் செய்வேன். அப்படித்தான் ஒளிவண்ணனும் எதையோ செய்யச் சொன்னார். அதற்குப் பரிசாகத்தான் ரெண்டு எல்கேஜித்தனமான புத்தகங்களை எனக்குப் பரிசளித்தார். என்ன புத்தகம் என்பது இப்போது எட்டு ஆண்டுகளில் மறந்து விட்டது. ஏதாவது மு.வ. புத்தகமாக இருக்கும். அல்லது, பணம் சம்பாதிப்பது எப்படி என்ற புத்தகமாகவும் இருக்கலாம்.

இரண்டாவது சம்பவம்:

மாபெரும் சவால்… என்ற தலைப்பில் செப்டம்பர் ஏழாம் தேதி 2019இல் பதிவு செய்யப்பட்ட கட்டுரை கீழே உள்ளது:

”இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு உள்ள மாபெரும் சவால், தங்களுடைய படைப்புகளை அதிக அளவில் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது.

ஒரு எழுத்தாளருக்கு, தன்னுடைய படைப்பினை உருவாக்குவது சாதனையென்றால், அப்படி உருவாக்கிய படைப்பினை அதற்குரிய வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது அதனினும் கூடுதலான சாதனை.

இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு, எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை பெரும்பான்மையானவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் மைஆத்தர்ஸ்.காம் என்கிற வலைத்தளம்.

எழுத்தாளராகிய தாங்கள் எப்படி இதில் பதிவு செய்துகொண்டு உங்களது புத்தகங்களை அதிக அளவில் விற்பனை செய்ய முடியும் என்பதை அறிந்துக் கொள்ள என்னோடு தொடர்பு கொள்ளவும்.”

மேற்கண்ட அறிவிப்பை பதிப்பகத் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவரான ஒளிவண்ணன் எனக்கு அனுப்பியிருக்கிறார்.

திரு ஒளிவண்ணன், நீங்கள் பாலாவின் நான் கடவுள் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வரும் பிச்சைக்காரக் கூட்டத்தைப் போல்தான் இருக்கிறோம் தமிழ் எழுத்தாளர்களாகிய நாங்கள். இதில் ஒன்றிரண்டு பேர் சினிமாவில் வசனம் எழுதுவதால் இந்தப் பிச்சைக்காரக் கூட்டத்திலிருந்து விலகி விட்டார்கள். மற்றவர்களெல்லாம் அப்படியேதான் இருக்கிறோம். இதற்குக் காரணம், புத்தகங்களின் விற்பனை என்று மட்டுமே சொல்ல மாட்டேன். உலகம் பூராவுமே பல எழுத்தாளர்களின் நூல்கள் ஆயிரம் ரெண்டாயிரம் பிரதிகளைத் தாண்டி விற்பதில்லை. ஆனாலும் அவர்கள் எப்படி தமிழ் எழுத்தாளர்களைப் போல் பிச்சைக்காரர்களாக இல்லை என்றால், அவர்களுக்கு வேறு விதங்களில் பணம் வருகிறது. கேரளத்தை எடுத்துக் கொண்டால், பல பத்திரிகைகளில் அவர்களை ஆலோசகர்களாக வைத்துக் கொண்டு மாத ஊதியம் கொடுக்கிறார்கள். என்னுடைய நண்பர் ஒருவர் இரண்டு பத்திரிகைகளில் ஆலோசகராக இருக்கிறார். சன்மானம், ஒரு பத்திரிகைக்கு ஒன்றரை லட்சம். ஐயோ, ரெண்டு பத்திரிகைகளில் வேலை செய்வது கஷ்டமாயிற்றே என்றேன். ஆமாம், கஷ்டம்தான் என்றவர், ”ஆனால் ஒன்றும் பிரச்சினையில்லை; தேதியை மாற்றிக் கொள்ளச் சொல்லி விடுவேன்” என்றார். எனக்குப் புரியவில்லை. நண்பர் விளக்கினார். மாதம் ஒருமுறையோ ரெண்டு முறையோ மீட்டிங் என்று சொல்லி மாலை எட்டு மணிக்கு அழைப்பார்கள். குடி பார்ட்டிதான் மீட்டிங். இரண்டு பத்திரிகைகளிலும் ஒரே நாளில் கூப்பிட்டு விட்டால் கஷ்டம் இல்லையா, அதனால் இரண்டாவதாக அழைக்கும் பத்திரிகையிடம் நாளை வைத்துக் கொள்ளச் சொல்லுவேன். அவ்ளோதான்.

அவ்வளவுதான் வேலையா?

அவ்வளவுதான்.

இதுக்கா அவ்வளவு பெரிய சன்மானம்?

சகோதரரே, என்னுடைய பெயரை நான் அந்தப் பத்திரிகைக்குத் தருகிறேன் இல்லையா? என் பெயர் என்ன சாதாரணமா? நாற்பது ஆண்டுகள் எழுதிச் சம்பாதித்த பெயர் ஆயிற்றே?

இந்தப் பெயரால் பத்திரிகையில் ஒரு பிரதியாவது அதிகரிக்குமா?

ம்ஹும். அதிகமாகாது. ஆனால் அந்தப் பத்திரிகையின் மதிப்பு உயரும்.

தமிழ்நாட்டைத் தவிர மற்ற இடங்களில், மற்ற நாடுகளில் இப்படி பல வகைகளில் எழுத்தாளர்களுக்குப் பணம் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும்தான் அப்படி நடப்பதில்லை. வெளியிடங்களில் வருகை தரு பேராசிரியராக பல எழுத்தாளர்கள் பெரிய பல்கலைக்கழகங்களில் பணியாற்றுகிறார்கள். அந்த வாய்ப்பும் தமிழ்நாட்டில் கிடையாது.

இந்த நிலையில் நீங்கள் (ஒளிவண்ணன்) எழுத்தாளர்களையே புத்தகங்களை விற்கவும் சொல்கிறீர்கள். பின்வரும் வாக்கியங்கள் உங்களுடையது:

”இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு உள்ள மாபெரும் சவால், தங்களுடைய படைப்புகளை அதிக அளவில் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது.

ஒரு எழுத்தாளருக்கு, தன்னுடைய படைப்பினை உருவாக்குவது சாதனையென்றால், அப்படி உருவாக்கிய படைப்பினை அதற்குரிய வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது அதனினும் கூடுதலான சாதனை.”

இதை விட ஒரு எழுத்தாளன் பிராத்தல் நடத்தலாம் ஒளிவண்ணன். கோபிக்காதீர்கள். உங்களுக்குத் தமிழ் எழுத்தாளர்களின் நிலை தெரியுமா, தெரியாதா? எத்தனை எழுத்தாளர்கள் பட்டினி கிடந்து செத்திருக்கிறார்கள் என்ற கதை உங்களுக்குத் தெரியுமா? அவர்களைப் போய் அவர்களின் புத்தகங்களையும் விற்கச் சொல்கிறீர்களா? எனக்கு ஒரு ஆண்டு ராயல்டி ஒன்றரை லட்சம் ரூபாய் வருகிறது. மாத வருமானம் எவ்வளவு? 12,500 ரூ. ஒரு இஸ்திரி போடுபவரின் சம்பளம் கூட இதை விட அதிகம். ஒரு கார் டிரைவரின் சம்பளம் கூட இதை விட அதிகம். ஒரு ஆட்டோ டிரைவரின் சம்பளம் கூட இதை விட அதிகம். தெருவில் நின்று தன் உடம்பை விற்கும் கடைநிலை விபச்சாரியின் மாத வருமானம் இதை விட அதிகம். நான் யார்? தமிழின் மிகப் பிரபலமான மூன்று எழுத்தாளர்களில் ஒருவன்.

இப்போது நீங்கள் எனக்கு என்ன ஆலோசனை சொல்கிறீர்கள்? உங்களை அணுகினால் என் புத்தகங்களை இன்னும் அதிகம் விற்பனையாவதற்கு ஆலோசனை சொல்வீர்கள். ஒளிவண்ணன், நீங்கள் அல்ல, உங்களைப் படைத்த ஆண்டவனே வந்தாலும் புத்தக விற்பனையை அதிகரிக்க முடியாது. முன்பெல்லாம், 1200 பிரதிகள் அச்சடிப்பார்கள். அதில் 200 பிரதிகளை புத்தக மதிப்புரைக்குக் கொடுப்பார்கள். இப்போது அச்சடிப்பதே 200 பிரதிதான். உங்களை அணுகி அலோசனை கேட்டால் இந்த 200 பிரதிகள் 210 ஆக உயரும் இல்லையா? ஆக, அதன்படி என் ராயல்டியும் 12500 இலிருந்து 12750 ஆக உயரலாம். ஏனென்றால், நான் 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள் ஒளிவண்ணன். இப்போதைய தேவை என்னவென்றால், தமிழ் எழுத்தாளர்கள் ஐரோப்பிய மொழிகளில் – குறிப்பாக ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் – மொழிபெயர்க்கப்பட வேண்டும். இன்னொரு கொடுமை, அப்படி மொழிபெயர்க்கப்பட்டும் அந்நூல்களை ஐரோப்பாவில் கொண்டு சேர்க்க ஆள் இல்லை. எங்கே விற்பனை? செக்ஸ் ஒர்க்கர் என்றால் ஐரோப்பியத் தெருக்களில் நிற்கலாம்? நான் மார்ஜினல் மேன் புத்தகங்களை வைத்துக் கொண்டு லண்டன் தெருக்களில் நிற்க முடியுமா? லண்டனில் ஒரு publishing outlet வேண்டும். அதற்கு மாதம் ரெண்டு லட்சம் ரூபாய் செலவாகும். என்ன செய்ய ஒளிவண்ணன்?

நீங்கள் இப்படிப்பட்ட திட்டங்கள் போடுவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அதை எனக்கு அனுப்பி வைத்திருக்கக் கூடாது. மேலும் ஒரு வேண்டுகோள். என்னை மீண்டும் தொடர்பு கொண்டு தங்கள் தரப்பு நியாயத்தை விளக்க வேண்டாம். அதைக் கேட்கும் பொறுமை எனக்கு இல்லை. மேலும், ஸாரியும் சொல்ல வேண்டாம். என் தரப்பை உங்களுக்கு விளக்கினேன். அதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டாம். அப்படி ஒரு கோணம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.

ஏற்கனவே அவலத்தில் வாழும் எழுத்தாளர்களை மேலும் மேலும் அவலத்தில் தள்ள வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.”

மேலே குறிப்பிட்ட கசப்பான இரண்டு அனுபவங்களால்தான் அப்படிச் சொன்னேன், ஒளிவண்ணன்தான் இந்த நிகழ்ச்சியை நடத்துபவர் என்று தெரிந்திருந்தால் ஆரம்பத்திலேயே மறுத்திருப்பேன்.

சரி, இப்போது ஒன்றும் செய்ய முடியாது, முடிந்த வரை காயம் இல்லாமல் தப்பி வர வேண்டியதுதான் என்ற மனநிலையோடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மனதைத் திடப்படுத்திக் கொண்டேன்.

குறிப்பிட்ட தினத்துக்கு இரண்டு நாட்கள் முன்பாக முள் சிறுகதை பற்றி வாசகர்கள் எழுதிய நாற்பத்தோரு மதிப்புரைகளும் எனக்கு வந்து சேர்ந்தன. இதெல்லாம் நான் எதிர்பார்க்காத வேலைப் பளு. அது எல்லாவற்றையும் வாசிப்பதில் பல மணி நேரம் போனது. 1978இல் எழுதிய ஒரு கதைக்கு நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் மதிப்புரை எழுதியிருப்பது பெருமையாகத்தான் இருந்தது என்றாலும் அந்த நிகழ்ச்சிக்கான தினசரிச் செயல்பாடுகளில் ஒரு கூலியாளைப் போல் ஈடுபட்டு என் நேரத்தை வீணடிப்பது பெரும் தவறு என்று எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது.

கடைசியில் வேறு வழி தெரியாமல் நாற்பத்தோரு மதிப்புரைகளையும் படித்து அவற்றிலிருந்து ஆறு மதிப்புரைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன். எழுதியவர் பெயர் எதுவும் தெரியாது. பிறகு ஆறு மதிப்புரைகளையும் தர வரிசையில் சொல்ல வேண்டும் என்றார்கள். உடனே அந்த ஆறு மதிப்புரைகளையும் மீண்டும் படித்து அவற்றைத் தர அடிப்படையில் வரிசைப்படுத்திக் கொடுத்தேன். (ஆச்சரியகரமாக என்னிடம் இடக்கு முடக்கான கேள்விகள் பல கேட்டு அவமரியாதை செய்த பெண்ணின் மதிப்புரையையே நான் முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்திருந்தேன்.)

குறிப்பிட்ட நாளும் வந்தது. என் நண்பரும் சென்னை வந்து சேர்ந்தார். அவரோடு மதிய உணவு மட்டும் சாப்பிட்டு விட்டு அடித்துப் பிடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். மாலை ஏழரைக்கு நிகழ்ச்சி. ஸூம் மூலமாக நடக்க இருந்தது.

கேள்விகள் எல்லாம் ஒரு குற்றவாளியை மடக்கிப் பிடிப்பது போல் இருந்தது. நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. இதுதான் இங்கே தமிழ்நாட்டில் இயல்பானதாகக் கருதப்படுகிறது. இதெல்லாம் ஒருவரை அவமதிக்கும் விஷயம் என்றே யாருக்கும் தெரிவதில்லை.

ஒரு உதாரணம் சொல்கிறேன். கமல்ஹாசனைக் கூப்பிட்டு இப்படியெல்லாம் அவமரியாதை செய்வார்களா? ”பதினாறு வயதினிலே படத்தில் கோமணம் கட்டி நடித்தீர்களே, இதெல்லாம் ஆபாசம் என்று உங்களுக்குப் புரியவில்லையா?” என்று கமல்ஹாசனை விருந்தினராக அழைத்து விட்டு அவரை மேடையில் வைத்துக் கொண்டு இப்படிக் கேட்பீர்களா? உடனே ஒளிவண்ணன் வந்து, கமல்ஹாசனைக் கவிழ்த்து விட்டார் எங்கள் குழுவைச் சேர்ந்தவர், பதில் சொல்ல முடியாமல் கமல்ஹாசன் திணறினார் என்றெல்லாம் எழுதுவாரா?

எழுத்தாளனைக் கூண்டில் ஏற்றி குறுக்கு விசாரணை செய்யும் அதிகாரத்தை இவர்களுக்குக் கொடுத்தது யார்?

கேள்வி கேட்ட பெண்மணி குற்றவாளியைக் குறுக்கு விசாரணை செய்யும் தோரணையிலேயே என்னைக் கேட்டுக் கொண்டிருந்ததால் “என்ன இது, ராம்ஜெத்மலானி மாதிரி கேட்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதையே அந்தப் பெண்மணி அவருக்கு நான் கொடுத்த பாராட்டு என்று எடுத்துக் கொண்டு அதை ஃபேஸ்புக்கிலும் எழுதிப் பகிர்ந்திருந்தார். அதற்குத்தான் ஒளிவண்ணன் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்.

எடுத்த எடுப்பிலேயே ஒளிவண்ணன் சொல்கிறார்: ”சாரு நிவேதிதா விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல.”

ஏன் ஐயா, உங்கள் நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினரைப் பற்றி இப்படித்தான் எழுதுவீர்களா? யாருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லைதான். ஆனால் உங்களுடைய நிகழ்ச்சிக்காக என்னுடைய இரண்டு தினங்களை நான் செலவிட்டிருக்கிறேன். முக்கியமான நண்பரோடு நேரம் செலவிடாமல் உங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். பொதுவாக நான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 50000 ரூ. கட்டணம் வசூலிக்கிறேன். ஏனென்றால், இலவச சேவை செய்தால் இப்படித்தான் செருப்படி பட வேண்டியிருக்கிறது. காசு கொடுத்தால்தான் உங்களுக்கும் விருந்தினரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியும். ஒரு பிரமுகரை உங்கள் நிகழ்ச்சிக்கு அழைத்து விட்டு, அவரைப் பற்றி இப்படித்தான் ஃபேஸ்புக்கில் அவதூறு செய்வீர்களா? ஒளிவண்ணன் ஃபேஸ்புக் பின்னூட்டத்தில் செய்திருப்பது விமர்சனம் அல்ல, அவதூறு. அப்படியே விமர்சனமாக இருந்தாலும் உங்கள் நிகழ்ச்சிக்கு அழைத்து விட்டு – நானும் உங்களுக்காக இரண்டு தினங்களை செலவழித்து, உங்களுக்கு இலவச சேவை செய்து தந்திருக்கும்போது என்னை விமர்சிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? விமர்சிப்பதாக இருந்தால் நீங்கள் என்னை அழைத்திருக்கவே கூடாது.

ஒளிவண்ணனின் மொழியை கவனியுங்கள். என்னுடைய ஆன்மீக ஈடுபாட்டின் காரணமாக அவர் என்னிடமிருந்து விலகி விட்டாராம். இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நட்பு நீடிக்கிறதாம்.

ஒளிவண்ணனின் இந்தப் பின்னூட்டமே ஃபேஸ்புக்கில் எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், ஒளிவண்ணன் என்னைப் பல தருணங்களில் அவமதித்து இருந்ததால் நான் அவரை சில ஆண்டுகளுக்கு முன்பே ப்ளாக் செய்து விட்டேன். எனவே அவர் எழுதும் குப்பை எதுவும் எனக்குத் தெரிய வராது. ஆனால் என்னைக் கேள்வி கேட்டு மண்ணைக் கவ்வ வைத்த பெண்ணே அதை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அதனால் என் கைபேசியில் ஒளிவண்ணன் என் மீது அடித்திருந்த அழுகல் முட்டை எனக்குப் படிக்கக் கிடைத்த்து. இதில் பரிதாபம் என்னவென்றால், எனக்கு இந்த லிங்கை அனுப்பிய அம்மையாருக்கு ஒளிவண்ணன் செய்திருப்பது என் மீதான அவதூறு என்று கூடத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அனுப்பியிருக்க மாட்டார்.

அதை விடப் பெரிய பரிதாபம் என்னவென்றால், ஒளிவண்ணனுக்கே தான் செய்திருப்பது அவதூறு என்று தெரிந்திருக்காது. ஏனென்றால், ஒட்டு மொத்தத் தமிழ்நாடுமே ஒளிவண்ணன்களால்தான் நிரம்பியிருக்கிறது. இவர்களைத்தான் நான் ஃபிலிஸ்டைன் சமூகம் என்று விமர்சிக்கிறேன். இவர்களுக்கெல்லாம் இம்மியளவு கூட சுரணையுணர்வு என்பது கிடையாது. இருந்திருந்தால் தன் நிகழ்ச்சிக்கு அழைத்த விருந்தினரை இப்படி அவமதிப்பார்களா?

அடுத்து ஒளிவண்ணன் சொல்கிறார், ஆன்மீகத்தையும் பின்நவீனத்துவத்தையும் இணைப்பது என்னுடைய ideological bankruptcyயாம்.

முதலில் இவருக்குப் பின்நவீனத்துவம் என்றால் என்ன என்று தெரியுமா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. பின்நவீனத்துவத்தின் முக்கியக் கூறு அதிகார அழிப்பு. இந்திய ஆன்மீகம் – குறிப்பாக அத்வைதம் – தான் என்பதன் அழிப்பையும் எல்லாவற்றிலும் பிரம்மத்தைக் காண்பதையும் வலியுறுத்துகிறது. அப்படியானால் நானும் நீயும் ஒன்று என்று ஆகிறது. நானும் நீங்களும் ஒன்று என்கிற போது அங்கே அதிகாரத்துக்கு இடம் ஏது? ஆக, ஆன்மீகத்திலும் அதிகாரம் அழிக்கப்படுகிறது. எனவே அடிப்படையில் இரண்டின் அடிச்சரடுகளும் ஒன்றுதான்.

ஒளிவண்ணனுக்கும் இலக்கியத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இந்தப் பின்னூட்டத்தை வைத்தே புரிந்து கொள்ளலாம்.

”ஒட்டு மொத்தமாகக் கதாநாயகியாக ஆக்கிரமித்தவர் அர்ஷா.

தொல்காப்பியன் சொன்னது போலத் தொடக்கத்திலிருந்தே அர்ஷாவின் கை ஓங்கியிருந்த்து. முதல் கேள்வியிலேயே சாரு விழுந்து விட்டார். பிறகு அர்ஷா சலிக்காமல் மாற்றி மாற்றிக் கேள்விகளைக் கேட்கும் போது – குறிப்பாகப் பின்நவீனத்துவம் ஆன்மீகத்தைக் குறித்து சந்தேகம் எழுப்பிய போது அவர் (சாரு) ராம்ஜெத்மலானி போல அர்ஷா மடக்கி விட்டார் என்று சாரு வெளிப்படையாகச் சொன்னார்.”

இது ஒளிவண்ணன்.

ஆக, என்னை அவமானப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டேதான் ஒளிவண்ணன் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். அதாவது, அர்ஷா என்ற பெண் கதாநாயகியாக ஆவதற்காக நான் பஃபூன் ஆக்கப்பட்டிருக்கிறேன், அப்படித்தானே மிஸ்டர் ஒளிவண்ணன்?

ஜெயமோகனின் அறம் கதையில் வரும் எழுத்தாளன் ஒரு பதிப்பாளரைப் பார்த்து அறம் பாடுவார்.

அதேபோல் இந்தத் தருணத்தில் இந்த ஒளிவண்ணன் என்ற பதிப்பாளர் மீது அறம் பாட வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அதையெல்லாம் நான் கைவிட்டுப் பத்து ஆண்டுகள் ஆகின்றன. இந்த அசிங்கத்தையும் அவமானத்தையும் இதனால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும் துக்கத்தையும் இறை சக்தியிடம் ஒப்படைக்கிறேன்.

பின்குறிப்பு: 1. எந்த இலக்கிய நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த இடமும் சூழலும் நண்பர்களும் சிநேகபூர்வமாக இருந்தால் நான் தங்கு தடையில்லாமல் பிரமாதமாகப் பேசுவேன். உங்களுக்கும் பயன் உண்டு. எனக்கும் மகிழ்ச்சி. ஆனால் என்னை அவமானப்படுத்த வேண்டும் என்றோ, என்னை முதல் அடியிலேயே விழ வைக்க வேண்டும் என்றோ, என்னைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றோ நினைத்துக் கேள்வி கேட்டால், முன்பு போல் நான் சண்டை போடுவதில்லை. உளற ஆரம்பித்து விடுகிறேன். யாருக்கும் பயனில்லை; ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் சாருவை வீழ்த்தி விட்டோம் என்று பீற்றிக் கொள்ளலாம்.

2. இனிமேல் இது போன்ற இலக்கியச் சந்திப்புகள் எதிலுமே கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். அதையும் மீறி என்னை அழைத்தால் கட்டணம் 50000 ரூ.

3. ”இந்த அசிங்கம் பற்றி எழுத வேண்டாம், விட்டு விடுங்கள்” என்று என் நண்பர்கள் பலர் அபிப்பிராயப்பட்டார்கள். ஆனாலும் இதை இத்தனை விரிவாக எழுதக் காரணம், நான் தொடர்ந்து நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்டு இதேபோல் விதவிதமாக அவமதிக்கப்பட்டு வருகிறேன். அது நிற்கும் வரை நானும் இதைப் பதிவு செய்து கொண்டேதான் இருப்பேன். ஏனென்றால், இதெல்லாமும் சேர்ந்ததுதான் என் இலக்கிய வாழ்க்கையாக இருக்கிறது.

முகநூலில் தெரிவித்தவர் : ஆர் . கந்தசாமி 

Like

Comment

5

One Comment on “என் மீது வீசப்பட்ட அழுகல் முட்டை/- சாருநிவேதிதா”

Comments are closed.