வலியைக் குறித்து/சார்லஸ் புக்கோவ்ஸ்கி


  • தமிழில் : க.மோகனரங்கன்

என் முதலாவதும்
ஒரே மனைவியுமானவள் ஒவியம் வரைந்துவந்தாள்
அது பற்றி என்னிடம் அவ்வப்போது பேசவும் செய்தாள்:
“இது எனக்கு
மிகவும் வலி நிறைந்த காரியம்,
ஒவ்வொரு தீற்றலுமே வலி தருவது…
ஒரு தவறு
முழு ஓவியத்தையும் பாழாக்கிவிடும்…
உங்களால்
ஒருபோதும் புரிந்து கொள்ளவியலாத
வேதனை இது…”

“கேள், செல்லம்,”
நான் அவளிடம் கூறினேன்,
“நீ ஏன் உனக்கு உவப்பான
செய்யவும் எளிதானவொரு காரியத்தை
எடுத்து செய்யக்கூடாது?”

அவள் என்னை வெறித்துப் பார்த்தாள்;
அதுதான்
நாங்களிருவரும்
ஒன்றாகச் சேர்ந்திருப்பதன்
துயரம் குறித்து
அவள் முதல்தடவையாக
உணர்ந்த தருணம்
என்று எண்ணுகிறேன்.

பொதுவாக
இதுபோன்ற விஷயங்கள்
இவ்வாறுதான்
எங்கிருந்தாவது தொடங்கும்.