கம்பனைக் காண்போம் 57/ வளவ. துரையன்


புறாவின் மயக்கம்

தாஇல்பொன் தலத்தில்நல் தவத்தினோர்கள் தங்குதாள்
பூஉயிர்த்த கற்பகப் பொதும்பர்புக்[கு ஒதுங்குமால்
ஆவிஒத்த சேவல் கூவ அன்பின்வந்[து] அணைந்திடாது
ஓவியப் புறாவின்மா[டு] இருக்கஊடு பேடையே [116]

[தாவில்=குற்றம் இல்லாத; பொதும்பர்=சோலை;மாடு=அருகில்]

அந்தக் கோபுர வாயிலிலே ஓர் அழகான சித்திரம் இருக்கிறது. அதில் ஒரு பெண்புறாவின் உருவம் தீட்டப்பட்டுளது. உண்மையான உயிருள்ள புறாதானோ என்று ஐயம் கொள்ளும் அளவிற்கு அது வரையப்பட்டுள்ளது. அக்கோபுர வாயிலில் வசிக்கின்ற ஒரு பெண்புறா தன்னை வந்து கூடுமாறு குரல் எழுப்பி ஆண்புறாவை அழைத்தது. ஆனால் அந்த ஆண் புறாவோ கோபுர வாயிலில் வரையப்பட்டிருந்த பெண்புறாவின் சித்திரத்தைக் கண்டு அது உயிருள்ள ஆண்புறா என மயங்கி அதன் அருகே நின்றது. அது கண்ட பெண்புறா தன் உயிரை ஒத்த அந்த ஆண்புறா வேறொரு பெண்புறாவைப் பார்த்து விருப்பம் கொண்டதே என எண்ணி ஊடல் கொண்டதாம். எனவே அக்கோபுர வாயிலை விட்டுவிட்டு ஒரு கற்பகச் சோலையில் போய்த்தங்கி மறையும். நல்ல தவம் செய்யும் புண்ணியர்களைச் சேரும் மலர்களைப் பூக்கும் சோலை அதுவாம்.

இப்பாடலில் ஓவியங்களின் உண்மைத்தன்மை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கற்பகச் சோலை எனப்படுவது, கற்பகம், சந்தனம், மந்தாரம், பாரிசாதம், அரிசந்தனம் என்னும் ஐந்து மரங்கள் இருக்கின்ற சோலையாகும்.