குமாரசுவாமி ஒரு சோஷலிஸ்ட்!! – சுஜாதா

நன்றி : அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு

ராம் ஸ்ரீதர் பதிவு


(கணையாழி, செப்டம்பர் 1965)
டாக்ஸி ஒட்டிக்கொண்டிருந்த குமாரகவாமி தற்போது திரு. ஆதிமூலத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமான காரியதரிசி ஆனதை சிவ வரிகளில் சொல்லிவிடலாம். அவன் டாக்ஸியில் ஒரு தடவை பிரயாணம் செய்தபோது ஆதிமூலம் தன் பர்ஸை மறுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அதை அவர் வீடு தேடித் திரும்பி வந்து கொடுத்துவிட்டுப் பணிவுடன்.
“எல்லாம் சரியாக இருக்கிறதா எண்ணிப் பாருங்கள் சார்” என்று சொன்னான்.
ஆதிமூலம் ஆச்சரியப்பட்டு.
“இவ்வளவு நம்பிக்கையான ஆசாமியாக இருக்கிறாயே. ஏன் அன்றாடம் காய்ச்சியாக டாக்சி ஒட்டுகிறாய்? என்னிடம் வந்து எனக்கு டினரவர் வேலை பார். மாதம் 100 ரூபாய் தருகிறேன்” என்றார்.
ஒப்புக் கொண்டான்.
டிரைவராக ஆரம்பித்தான். வீட்டுச் சாமான்கள் வாங்குவதையும் கவனித்துக் கொண்டான். பின்பு ஆதிமூலத்தின் சில்லரைக் கணக்குகளையும் கவனிக்க ஆரம்பித்தான். ஒரு பைசா தொடாமல் நெருப்பாக இருந்தான். ஆகிமூலத்துக்கு அவன் பேரில் நம்பிக்கை ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை வலுத்தது.
ஆதிமூலத்தின் தொழில் கொஞ்சம் நிழலானது. வாங்கல், விற்றல், எதையும் வாங்குவார். வாங்கின சூட்டில் விற்று விடுவார். இந்தச் சாமர்த்தியம் சங்க காலத்திலிருந்து பரம்பரையாக அவர் குடும்பத்தில் வந்தது. ரத்தத்தில் ஊறின சாமர்த்தியம் வாய்ச் சவடால்,
அவர் முக்கியமாக வாங்கி விற்பவை இவை. டிரான்ஸிஸ்டர்கள், கார், ரெஃப்ரெஜிரேட்டர் முதலியவை. கௌரவமான பித்தலாட்டம். வருமான வரி ஆட்களைச் சமாளிக்க, சாமர்த்தியமான கணக்கு. மொத்த வியாபாரமும் டெலிபோன் பேச்சில், தயாராகத் தண்ணீராக ஓடும் பணம். எதையும் கேள்வி கேட்காமல் வாங்குவார். ஒரு தடவை நொடிந்துபோன ஒரு சர்க்கஸ் கம்பெனிக்காரர்கள். இவரிடம் இரண்டு யானைகளை விற்கப் பார்த்தார்கள். ஆதிமூலம் திருவல்லிக்கேணி கோயிலில் விசாரித்து அவர்களுக்கு யானை தேவையில்லை என்று கண்டு கொண்டு அந்த மிருகங்களை வாங்க மறுத்து விட்டார். இந்த ஒரு தடவைதான் மறுத்திருப்பார்.
சாதாரணமாக வர்ஜ்யா வர்ஜ்யம் இல்லாமல் வாங்குவார். சமீபத்தில் டாக்டர் நரசிம்மாச்சாரி என்பவர் தன்னுடைய எம்.எஸ். எஃப்.ஆர்.ஸி.எஸ். (லண்டன்) எஃப். ஆர்.ஸி.எஸ். (எடின்பரோ) டிகிரிகளுடன் காலமானார். பெரிய நரம்பு வைத்திய நிபுணர். அவர் வைத்திருந்த, ‘எலக்ட்ரோ என்செஃபலோகிராம்’ (மன்னிக்கவும்) என்கிற கருவியை ஆதிமூலம் தான் வாங்கினார். அவருக்கு எலக்ட்ரோ என்செஃபாலோகிராமுக்கும் ஒரு குடைக்கும் வித்யாசம் தெரியாது. இருந்தும் வாங்கின உடன் அதைத் தூசி கூடத் தட்டாமல் வடக்கே ஒரு ஆஸ்பத்திரிக்கு விற்று விட்டார்.ரூ.8,000 லாபம்.
அவர் வியாபார வெற்றிக்குக் காரணம் உடனே பணம். அநாவசியக் கேள்விகள் கேட்பது கிடையாது எழுத்து விவகாரம் கிடையாது!
குமாரசுவாமி, (அவர் டிரைவர், காரியதரிசி இத்யாதி) ஒரு சோஷலிஸ்ட். செய்தித்தாள்களின் பாஷையில் ஒரு ஆதார இடதுசாரி சோஷலிஸ்டு. அவன் மனத்தில் தன் நிலைமைக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம் வெறுப்பைத் தான் ஏற்படுத்தியது. தான் தினமும் பத்து மணி நேரம் உழைத்து மாதம் நூறு ரூபாய் கிடைக்கிறது. ஆதிமூலம் பேச்சுவாக்கில் பத்தாயிரம், இருபதாயிரம் என்று புரட்டுகிறார். இந்த நிலை ஏன்? என்கிற கேள்விக்குப் பதிலாக அவனுக்கு இரண்டு வழிகள்தான் புலப்பட்டன
எங்கள் இருவருக்கும் உள்ள நிலை வித்தியாசம் மறைய வேண்டுமானால், ஒன்று ஆதிமூலத்தின் மகளை நான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். அல்லது அவர் பணத்தில் பெரும்பகுதியை சமயம் பார்த்து அபேஸ் செய்ய வேண்டும். (இதனால் சோஷலிஸ்டுகள் எல்லோருமே திருடர்கள் என்று நான் சொல்லவில்லை. குமார சுவாமி அப்படி. அவ்வளவுதான்)
முதல் முயற்சியில் தீவிரமாக இறங்கினான். ஆகிமூலத்தின் பெண் பெயர் பார்வதி அழகான அசடான பெண் வயது: 18 ப்ளஸ். சட்டை சுற்றளவு 36 ‘ ஐக்யூ’ 36 அவளை தினமும் காலேஜிற்கு காரில் கொண்டு விட்டு வருவது வழக்கம்.
ஒரு அக்டோபர் மாதத்தின் இளம் காலையில் குமாரசுவாமி தன் சோஷலிசக் காதல் முயற்சியை ஆரம்பித்தான். காரின் கண்ணாடி வழியாகப் பார்வதியைப் பார்த்துச் சிரித்தான். பார்வதி பதிலுக்குச் சிரித்தாள். குமாரசுவாமிக்கு உற்சாகம் பிறந்து விட்டது.
மறுநாள் ரூ.1.25 கொடுத்துத் தலை வெட்டிக் கொண்டு (மிஷின் போடாமல்)டினோபால் போட்டுத் துவைத்த வெள்ளை சட்டை அணிந்து கொண்டு அவளை காரில் பார்த்துச் சிரித்தான். அலள் பதிலுக்குச் சிரித்தாள். ஆஹா! அந்தஸ்து, பணம் எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கும் ஒரே மந்திரம் காதல் என்று எண்ணி, மறுதினம் அவளுடன் பேச்சுக் கொடுக்க எண்ணி உற்சாகத்துடன்…
‘சித்தூர் ராணி பத்மினி’ என்கிற திரைப்படம் போல் அவன் உற்சாகம் வந்த வேகத்தில் போய்விட்டது. ஏன்?
அந்தப் பெண் பார்வதி தோட்டக்கார ஏழுமலை (வயது 57) யைப் பார்த்துக்கூட அப்படித்தான் சிரித்தாள். அப்புறம் அவர்கள் வீட்டுக் கன்றுகுட்டி லக்ஷ்மி (வயது 1/2) யைப் பார்த்துக்கூட அப்படித்தான் சிரித்தாள்.
சுலபத்தில் முத்துப்போன்ற பல்லைக்காட்டும் அந்தப் பெண், அன்று மாலையில் கடற்கரையில் சக வயது வாலிபன் ஒருவனுடன் உல்லாசமாக நடந்துகொண்டு சென்றதைப் பார்த்ததும் அவன் காதல் முயற்சி ஊதி அணைக்கப்பட்டுவிட்டது. இது நமக்கு உதவாது என்று கைவிட்டு, இரண்டாவது முயற்சியில் தீவிரமாக மனதைச் செலுத்தினான். அது என்ன? பெரிய திருட்டு.
என்னதான் ஆதிமூலத்துக்கு அவன் பேரில் நம்பிக்கை இருந் தாலும், அவர் அலனிடம் இதுவரை இருநூறு முந்நூறுக்கு மேல் பணம் ஒப்படைத்ததில்லை. ஆனால் நம்பிக்கை நாளாக நாளாக ஏறிக்கொண்டு வந்தது. குமாரசுவாமி நிறையத் தொகை பிடிபடும். நாளுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். ஒரு தடவை அவனிடம் அவர் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து பாங்கில் சுட்டச் சொன்னார். அப்பொழுது ஆசை தட்டியது. கடைசி நிமிஷத்தில் மனம் மாறியது. இந்த ஆயிரத்தைக் கட்டிவிட்டால் இன்னும் நம்பிக்கை அதிக மாகும். நிஜமாகப் பெரிய தொகை புரளும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தான். காத்திருந்தான். காத்திருந் தான்
காலண்டர் நாள்கள் கிழிந்தன. அந்த சந்தர்ப்பம் வரவில்லை. அவன் பொறுமையை ஆதிமூலம் நிறைய சோதித்தார். அந்த ஆயிரத்துடனேயே ஓடியிருக்கலாம் என்று வருத்தப்பட்டுக் கொண்டான்,
ஆனால், அந்தச் சந்தர்ப்பம் வராமல் இல்லை. காந்திருந்த தினம் ஒரு வியாழக்கிழமை வந்தது நேரம் காலை பத்து மணி. டெலிபோனை வைத்துவிட்டு ஆகிமூலம் அவனைக் கூப்பிட்டார். “சர்க்கரை செட்டியார் வீடு தெரியுமா?!” என்றார்.
“தெரியும் சார்.”
“அவரிடம் இந்தக் கவரைக் கொடுத்துவிட்டு… நீளமான தடிமனான கவர் மேஜையின் மேல் இருந்தது. “அவரிடம் ஒரு அம்பாசிடர் கார் இருக்கும், அதை ஒட்டிக் கொண்டு வந்துவிடு.”
“கடைசியிலே காரை விற்கச் சம்மதித்து விட்டாரா, சார்!”
“ஆமாம்; பதினாயிரத்து சொச்சத்துக்கு தீர்ந்து போச்சு… 900 மைல்தான் ஓடியிருக்கிறதாம். வரும்போது நம்ம சம்பந்தம் ‘கராஜில்’ கொண்டு காட்டி இன்ஜினைப் பார்த்து எத்தனை மைல் ஓடியிருக்கும் என்று பார்த்துக்கச் சொல்லு. என்ன?… இந்தா. பணம் ஜாக்கிரதை…”
குமாரசுவாமிக்கு அந்த உறையை வாங்கும்பொழுது முதுகுப் பக்கம் ஒரு ஐஸ் நதி ஓடியது. இதுதான்… இந்தச் சமயம்தான், இந்தச் சமயம்தான்… என்று எண்ணிக் கொண்டான்.
“சரிங்க; நம்ம காரை எடுத்துக்கொண்டு போகவா?”
“முட்டாள். வரும்போது இரண்டு காரையும் ஓட்டி வருவாயா?”
“ஓ! மறந்துட்டேங்க!” என்று சிரித்தான்.
”குமாரசுவாமி,ஜாக்கிரதை, பதற்றமே காண்பிக்காதே… டாக்ஸியிலே போ, பணம் பத்திரம்.”
“கவலைப்படாதீங்க சார். பத்திரமாகச் சேர்ப்பிக்கிறேன்” என்றான்.
வீட்டுக் காம்பௌண்டை விட்டு வெளியே வந்ததும் அவனுக்கு வியர்வையில் சட்டை உடலுடன் ஒட்டிக் கொண்டது. 10 ஆயிரம் ரூபாய் !!
இந்தத் தருணத்தை விட்டால் இனி எங்கே கிடைக்கப் போகிறது. இப்போது மணி என்ன? பத்தேகால்! எங்கே போக லாம்? முதலில் சென்னையை விட்டு வெளியே போக வேண்டும் எங்கே?
எங்கே என்று தீர்மானிக்கவில்லை. பையில் உறை கனத்தது. எதிரில் வந்த டாக்ஸியை துரத்தி நிறுத்தி தானே அதன் கொடியை மடக்கிவிட்டு ஏறிக்கொண்டான். நல்ல வேளை. டாக்ஸி டிரைவர் தெரிந்தவனில்லை.
“எழும்பூர் ஸ்டேஷனுக்குப் போப்பா”
எழும்பூர் ரயில் நிலையத்தில் உயரமான போர்டில் வண்டிகள் புறப்படும் நேரத்தை அவசர அவசரமாக அவன் படித்துக் கொண்டிருந்தபோது, அவன் தோளில் ஒரு கை பட்டது. திரும்பினான். பக்கத்து வீட்டு டிரைவர் கதிரேசன்.
“என்ன குமாரசாமி, பார்த்து ரொம்ப நாளாயிற்று. எங்கே இந்தப் பக்கம்?”
இவன் எங்கே வந்தான் பூஜை வேளையில் குருஷேவ் நுழைந்ததுபோல்!
“அய்யாவுக்குத் தெரிந்தவர் ஒருவர் வருகிறார். வண்டி கொண்டு வந்திருக்கிறேன்” என்றான்.
“இப்ப எந்த வண்டி வருகிறது?”
தயங்காமல் “திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் லேட், டெலிபோனில் சொன்னார்கள். பிளாட்பாரம் டிக்கட் வாங்கப் போகிறேன். அப்புறம் பார்க்கலாம், என்ன?” என்று கழண்டு கொண்டு பிளாட் பாரம் டிக்கட் ஒன்றை வாங்கிக் கொண்டு ஒரு வாயிலில் நுழைந்து தள்ளியிருந்த மற்றொரு வாயில் வழியாக ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தான்.
என்ன சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்டேன். சே! கதிரேசன் என்னை எழும்பூரில் பார்த்ததாகச் சொல்லி விடு வானே… டாக்ஸி!
பாய்ந்து டாக்ஸியில் ஏறி, ”சென்ட்ரல்” என்றாள். டாக்ஸி விருட்டென்று ஓடித் திரும்பிச் செல்லும்போது. அவனை கதிரேசன் மறுபடி பார்த்துவிட்டான். அவன் தலைக்கு மேல் ஒரு கேள்விக்குறி தெரிந்தது… இதையெல்லாம் யோசிக்க இனி நேர மில்லை. முதலில் இந்த ஜில்லாலை விட்டு லெளியேற வேண்டும்.
சென்ட்ரல் நிலையத்தில் பரபரப்பில் மேலே தொங்கிக் கொண்டிருந்த ஒலிபெருக்கி விஜயவாடா. நாக்பூர். இடார்ஸி வழியாக புதுதில்லி செல்லும் கிராண்டிரங்க் எக்ஸ்பிரஸ் இன்னும் சில நிமிஷங்களில் முதல் பிளாட்பாரத்திலிருந்து…
தில்வி!
ஆம். அங்குதான் போக லேண்டும். தலைமறைவாக இருக்க தலைநகரம்தான் சரி! உடனே டிக்கட் ஜன்னலுக்கு ஓடினான். சம்பளத்தில் பாதி தனியாக பாண்ட் பைக்குள் இருந்தது. அதில் 45 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினான். அந்தப் ‘பணம்? அது பத்திரமாக, ரத்தினமாக உறைக்குள் உறங்கிக் கொண்டு சுலபமாக பை கனத்தது. அதைத் தொட்டுக் கொண் டதும் தைரியம் பிறந்து விட்டது. தில்லிக்குப் போகலாம். மீசையை எடுத்து விடலாம். பாஷையை மாற்றிக் கொள்ளலாம். இருபது லட்சம் ஜனங்களுக்குள் சுவடே தெரியாமல் மறைந்துவிடலா தப்பித்து விடலாம்…
கிளம்பிக் கொண்டிருந்த ரயிலில் தொத்தி ஏறிக் கொண்டான்.
பிட்ரகுண்டா வரை கூட அவன் படபடப்பு அடங்கவில்லை பையில் எத்தனை ரூபாய்? பதினாயிரத்துச் சொச்சம்…
எத்தனை நோட்டுக்கள் இருக்கும்…? அந்த நோட்டுக்கத்தை களை ஒன்று விடாமல் தடவித் தடவி எண்ணிப் பார்க்க அவ விரல்கள் துருதுருத்தன. ரயில் வண்டியில் தனிமையான இடம் எது? அங்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டான்.
அந்த உறையை எடுத்தான். ஓரத்தில் கிழித்தான். திறந்தான். உள்ளே சீல் வைக்கப்பட்ட மற்றொரு உறை இருந்தது. கை நடுங்கியது. ரெயில் வண்டியின் சப்தத்துக்கும் மேலாக திடும் திடும் என்று ஒரு சப்தம் கேட்டது. உன்னிப்பாகக் கேட்டதில் அவன் இதயம்!
நனைந்த விரல்களால் அந்த உறையைக் கிழித்தான். திறந்தான்.
உள்ளே கத்தை கத்தையாக நூறு நூறாக நோட்டுக்கள் இருக்கும் என்றுதான் எதிர்பார்த்தான். இல்லை. அழகாக அளவாக வெட்டப்பட்ட வெறும் வெள்ளைக் காகிதங்கள் இருந்தன. அவற்றின் மேலாக இருந்த காகிதத்தில் எழுதியிருந்தது.
“குமாரசுவாமி, உன் மேல் நம்பிக்கை வைக்கலாமா என்று பரிசோதனை செய்யவே இப்படிச் செய்திருக்கிறேன். நீ நம்பிக்கையுள்ள ஆளாக இருந்தால், இந்தக் கவரைக் கிழிக்காமல் சர்க்கரை செட்டியாரிடம் சேர்த்திருப்பாய். அப்படிச் செய்யாமல் கிழித்து இந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாய் என்றால் திரும்பி வரவே வராதே. ஒழிந்து போ!… ஆதிமூலம்.”
வண்டி தண்டவாளங்களில் இரக்கமின்றி மாறிக் கடகடவென்று சிரித்தது….”