பொம்மைகள் / அனங்கன்

பலவண்ணப் பூச்சுக்களோடு காத்திருக்கிறது பொம்மைகள்…

அந்தக்கலை அழியும் நிலைக்கு
போய்க்கொண்டிருப்பதற்கு
சாட்சியாய் நிற்கின்றன
விற்பனையாகாத கொலுப் பொம்மைகள்…

பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு சிலவற்றை
ஏற்றுக்கொள்வதன் மூலம்…
சிலகலைகள் வாழ்கின்றன.

எல்லாக்கடவுள்களும் ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள்… தாம்
வீடுபேறு அடையப்போகும்
இடத்திற்காக..

கவலைகள் மிகுந்துவழியும்
நாட்களில்…கலைகள் மேம்படும் என்று எதிர்பார்க்கமுடியாதுதான்…

புதுமெருகோடு கூடிய பொம்மைகளுக்கு இடையே உயிர்ப்பொம்மை
ஒன்று அழுதுகொண்டிருக்கிறது…
இத்தனை பொம்மைகள்
நிறைந்திருந்தாலும்…எதிலும் அதற்கு ஈடுபாடில்லை…

நெகிழிப்பொம்மைகள் விற்றுக்கொண்டு சென்ற
ஒருவனிடம் உள்ள கிளிப்பொம்மை அதன்பார்வையில் பட்டுவிட்டது…அதைக்கேட்டுத்தான் அதன் அழுகை…
அக்கரை பச்சையென்று அது நினைக்கிறது…பாவம்.

பொம்மைகள் ஏதேனும் விற்றால்…இன்றைய செலவிற்கான அட்டவணையில் எதனை நிறைவேற்றலாம் என்று
மனக்கணக்கு போட்டுக்கொண்டிருக்கும்
அக்குழந்தையின் தாய்க்கு..

நெகிழிப்பொம்மைக்காய்
அழும் குழந்தை ஒரு பொருட்டில்லை..

அவரவர் இடத்தில் அவரவர்
இருந்துபார்த்தால்தான் தெரியும்…
அதற்கான நியாயங்களும்.