
வாசலில் ஓலைக் கூரை
வசதியாக இரண்டு திண்ணை
ஈசனை நினைத்து தீபம்
ஏற்றிடவும் பிறைகள் உண்டு
நேசமாய் வருவோர்க் கெல்லாம்
நின்றுபேச நடையும் உண்டு
பூசையைச் செய்ய ரேழி
பூராவும் படங்கள் உண்டு !
ஒவ்வொரு படமாய்க் காட்டி
ஒழுக்கமிகு கதைகள் சொல்லிக்
கவ்விடும் அன்புத் தாத்தா
கருணைமிகு பாட்டி யோடும்
எவ்விதக் கவலை இன்றி
இருந்திட்ட இளமைக் காலம்
தவ்வியே போன தம்மா
தவிக்கின்ற நினைவைத் தந்து.
கொலுப்படி தகர டப்பா
கொஞ்சமான பொம்மைக் காக
சிலுக்குடன் பருத்தி சேர்த்த
சின்னதானப் புடவை போர்த்தி
மினுக்கெனப் படிகள் செய்து
மேன்மைமிகு கொலுவை வைப்பாள்
அலுப்பிலா அன்பி னாலே
அமுதான எங்கள் அம்மா !
அமைதியாய் இருந்து கொண்டு
அத்தனையும் ரசிக்கும் அப்பா
சுமைகளை மறந்து கொஞ்சி
சுந்தரமாய்க் கலந்தி ருப்பார் !
அமையுமா அதுபோல் நாட்கள்!
அளவான செல்வம் கொண்டு
அமைதியுடன் வாழ்ந்த தெல்லாம்
அழகான கதைபோ லாச்சே !
(26.09.2022 12.18 pm)
