
“தாழம்பூ ஜடைப் பின்னலுக்காக, ‘ பூக்காரி ‘கிட்ட முன்னமே சொல்லி வச்சுட்டாயா..? அந்தப் ‘பிரிட்டானியா’ பிஸ்கட், டப்பால இருக்கிற அரிசியை மாற்று; அதைத்தான் ரெண்டு பக்கமும், பலகைக்கு ஸ்டாண்ட் ஆக வைக்கணும்.. வேஷ்டி நல்ல வெளுப்பா நீலம் போட்டுத் தோய்த்தாச்சா ..? ‘சுண்டல்’ லிஸ்ட் ரெடியா, பரணியில் இருக்கிற கொலுப் பெட்டியை ஜாக்கிரதையா இறக்கு ! , வரும் குழந்தைகளுக்குக் கொடுக்க ‘வாய்ப்பாடு , ஆத்திச்சூடி , பென்சில் டப்பா, சிலேட்டு பலபம் box ‘எல்லாம் வாங்கி வச்சாச்சா..?”
- நவராத்திரி (அந்நாளில்) நெருங்கிவிட்டது என அர்த்தம்…
பழைய காலத்துக் கொலுப் பெட்டியைத் திறந்து, பொம்மைகளைச் சுற்றி வைக்க உபயோகித்த பழைய பேப்பரை படிப்பதே ஒரு சுகம்.! ;ஒரு வருட முந்தய ‘வாக்குறுதிகள்’ எத்தனை பலித்துள்ளன..?எந்தப் படம் Hit ஆனது ( அ ) ஊத்திக் கொண்டது.?, நிரூபணமான ‘கிசு கிசு ‘ க்கள் எத்தனை..?.. – என்பதைப் படிப்பதே எத்தனை சுவை..!
” இன்னும் பொம்மையை எடுத்து வைக்காமல் எத்தனை நேரம்..? ” – என்னும் அதட்டல் வரும் வரை இது தொடரும்..

பலகைகள் , பெஞ்சுகள் வைத்து , தண்ணீரில் நனைத்த துடி(க்) கயிற்றால் கட்டிய (5 முதல் 11 வரை ) கொலுப் படிகள்.. அதற்கு அடியில் செம்மண்னிட்ட மாக்கோலம்..! , பழைய பல்புகளில் உள்ளே கலர் தண்ணீர் / மணிகள் இட்டு கார்க் அடைத்து , தொங்க விட்டு அலங்காரம்..!
தசாவரத்திலிருந்து துவங்கி , மணவறை செட் , அரை ட்ராயர் போலீஸ் காரன் போன்ற conventional மண் பொம்மைகள் தவிர, இலகுவான ‘பண்ருட்டி’ நெட்டி பொம்மைகள், திருப்பதி மரப்பாச்சிகள் , ஓலை பெட்டியில் வரும் ‘ திருவைக் கல்’ , ஆட்டுக்கல் போன்ற சின்னச் சின்ன வர்ண “கோவில் பட்டி’ மர(ச் ) சொப்பு பொம்மைகள், ‘பர்மா’ பீங்கான் பொம்மைகள், குட்டி,குட்டியாய் பித்தளையில் செய்யப்பட்ட (கும்பகோணம்,திருநெல்வேலி ) பாய்லர், குடம், தூக்கு வாளி , ஐந்தடுக்கு கேரியர், சமையல் பாத்திரங்கள் ,டின்னர் செட்,’சமயபுரம் ‘ மாக்கல் பொம்மைகள் இப்படி miniature அணிவகுப்பும் வைத்து அழகு பார்ப்பது அருமை…
Park project ( IT park அல்ல..) ஒன்று துவக்கப்பட்டு, காலி அட்டை டப்பாக்கள், நோட் பேப்பர் அட்டைகள் சேகரிக்கப்பட்டு ‘வீடுகள்’ நிர்மாணிக்கப்படும் .. ஈர ஆற்றுமணல் பரப்பி நவதானியங்கள் விதைக்கப்பட்டு, வயல்கள் , பூங்காக்கள், தெர்மகோல் மலைகள், பிளாஸ்டிக் மரங்கள், வேலிகள் உருவாகும்.. ஹோம குண்ட சிமெண்ட் தொட்டி, தெப்பக்குளமாக மாறும். தியேட்டர் , கருப்பு மையால் தோய்க்கப்பட்ட ஈர்குச்சி தண்டவாளங்கள் , ரயில்வே ஸ்டேஷன் முதல் , ஏர்போர்ட் ( கருப்பு நூலில் தொங்கவிடப்பட்ட விமானம் ) வரை பல கட்டிடங்கள் – என ரசனைக்குத் தகுந்தாற் போல் அந்த mini town இன் விஸ்தீரணம் விரிவடைந்து ‘கிச்சன் ‘ வரை செல்லும்..
‘மயிலாப்பூர் மாட வீதியில் ‘போன கொலு முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு சல்லிசாக* வாங்கிய கொலு பொம்மைகள் புதிதாக வாங்கியதாக முன்னிறுத்தப்படும் (* இப்போதெல்லாம் , இந்த டெக்னிக் உதவுவதில்லை.. )
‘D Day’ நெருங்குவதை அறிந்து தங்கைக்கு , திடீர் Crash course பாட்டுக் கிளாஸ் ஆரம்பிக்கப்படும் ; தேறாது (!) என உணரப்பட்டு , உடனடியாக கை விடப்பட்டு ‘ அலைப் பாயுதே ‘ , ‘பஞ்சாக்ஷ பீட்ட ரூபிணிகள்’ கற்பிக்கப் படும் .. ( இது போன்ற rewind கீர்த்தனைகளை, இந்த சீசனில் 100 தடவைக்கு மேல் பாட / கேட்கப் படுமாதலால் , பொதுவாகப் பக்கத்து வீட்டு மாமிகள் அதை கேட்பதை தவிர்த்து , சுண்டல் pack பண்ணச் செல்வது வழக்கம்..)
‘சுண்டல் schedule’ என்று ஒன்று தயாரித்தாலும், ‘வேர்க்கடலை சுண்டல்’ விநியோக நாள் மட்டும் Boss ( அல்லது Boss இன் பாரியாள் ) வரும் தினம் பொறுத்து மாறும் ..
வீட்டிலிருக்கும் ‘ஜாக்கெட் பீஸ்’களின் stock taking நடைபெறும் . Whats app மெசேஜ் களை போல நாம் அனுப்பியது , நமக்கே திரும்பும் சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயப்படும்..
(ஆண்) பசங்களைப் பொறுத்தவரை , இது AVK யாகத் திரியும் வாரம்.. (அம்மாக்கள் பர பர வென இருப்பார்கள் ஆனதால், கண்டு கொள்ள நேரம் இருக்காது.. ) வீடு, வீடாகக் சென்று சுண்டல் collect செய்வது ( ரகசியமாக தோழியை வம்பிழுப்பது ..) , எதாவது மொட்டை சுவற்றில் நண்பர்களுடன் உட்கார்ந்து கிடைத்த சுண்டல்களுக்கு ‘Rating ‘போடுவது.. என அவர்கள் பொழுது செல்லும்..!
பெண் பிள்ளைகளுக்குத் ‘தாழம்பூ பின்னல் design ‘ முடிவு செய்யப்படும்.. { தாழம்பூவுடன், மரிக்கொழுந்து, மல்லிகை, ரோஜா இதழ்கள் சேர்த்து, woolen நூலால் இணைத்து, ‘திருகுப் பூ’ வைத்து , உச்சி ‘ராக்ககோடி’யிட்டு அந்தப் பின்னலுடன் சின்னஞ்சிறு பெண் குழந்தைகள், ” கொலு வைத்திருக்கோம் , வாங்கோ ..” , என அழைக்கும் அழகே அழகு..!! } – “என்னை மறந்ததேன் …? ” எனத் தாழம்பூ பாடுவது உங்கள் காதுகளில் விழுகிறதா..?
இது போன்ற பழைய நினைவலைகள் தொடர்ந்து வந்தாலும், நவராத்திரியின் தற்போதைய பரிமாணங்கள் மாறியுள்ளதே தவிர அதன் ‘வசீகரம்’ என்றைக்கும் குறையவில்லை என்பது மட்டும் நிச்சயம்..!

சூப்பர் நினைவுகள்…//பழைய காலத்துக் கொலுப் பெட்டியைத் திறந்து, பொம்மைகளைச் சுற்றி வைக்க உபயோகித்த பழைய பேப்பரை படிப்பதே ஒரு சுகம்.!// .. சரியாக சொன்னீர்கள்.. இது எனக்கும் மிகவும் பிடித்த செயல்…
வேர்கடலை சுண்டல் என்றால் தனி அந்தஸ்துதான்… 👍😁
அருமையான நிகழ்வுகளை,
ஒவ்வொருவரின் பார்வையிலும்,
சிறப்பாக கையாண்டமைக்கு,
எனது வணக்கங்கள்!!