
பரணிலிலிருந்து இறங்கிவந்து நிற்கிற பொம்மைகள்
தாத்தா பாட்டி காலத்தவை.
மாடவீதிகளின் குவிப்புகளிலிருந்து
பல பொம்மைகள்
ஒவ்வொரு ஆண்டும்
கொலுக்குடும்பத்தில் சேர்ந்துவிடுவதுண்டு.
உடைகளின் மிடுக்கிருந்தாலும்
உடையற்ற நிர்வாணமும்
தனியழகென நமக்கு
உணர்த்தியபடியே
இருப்பவை-
எப்போதும்
இந்த மரப்பாச்சி இணைகள்தானே!
கொடிகளாய் ஒளித்தொடர் மினுக்கும்
சிறுகுழல் விளக்குப்பந்தல்
வட்டமாய் ததும்பும்
குளத்தைச்சுற்றி
குறுகுறுவென ஓடியபடியிருக்கும்
மின்கல ரயில்.
மலைக்காட்சி, விளையாட்டுக்களம்,
ஆங்காங்கே மான்கள் யானைகள்
மற்றும் பறவைகள்.
தினங்கள் பண்டிகைகளானால்
கொலுவதன் வரிசை மிளிர்வு
மனதின் கொண்டாட்டங்கள்.
எப்படியோ போகட்டும்
வருடத்தின் மற்றைய நாட்கள்.
இந்த கொலு வரும் தினங்களில்
தினம் தினம் புழங்கும்
சிரிப்பையும் அன்பையும்
பரிவுறத் தரப்படும் சிறுதீனிகளையும்
கரம்பற்றி விழையும்
“ஒரு பாட்டுப் பாடுங்கோ!”க்களையும்
கானக்கேட்புச் செவிகளையும்
ஒருபோதும் பரணிலேற்றி
ஒதுக்கி வைத்துவிடாமல்
அன்றாடம்
பரஸ்பர அன்பின், சிரிப்பின், பரிவின், கரிசனத்தின்
ஒன்றிரண்டு பொம்மைகளையாவது
நம் நாளின் பார்வைதனில்
தொலைத்துவிடாமல்
கொலு வைத்திருப்போமாக!
——-அன்புடன் ஆர்க்கே!

அற்புதம்
பலே
..