தோழர் தொல்.திருமாவளவனின் மணிவிழா/சுகுணா திவாகர்

தோழர் தொல்.திருமாவளவனின் மணிவிழாவுக்கு ஜெயமோகன் அழைக்கப்பட்டு, அவர் வர இயலாத சூழலில் திருமா குறித்து ஒரு நீண்ட பாராட்டைப் பதிவுசெய்திருக்கிறார் ஜெயமோகன். ஒரு விழாவுக்கு யாரை அழைக்கலாம், யாரை அழைக்கக்கூடாது என்பது விழா ஏற்பாட்டாளர்களின் உரிமை. ஆனால் அதேநேரத்தில் எந்த ஓர் செயல்பாடும் அரசியல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல.
ஜெயமோகன் இப்போது மட்டுமல்ல, தொடர்ச்சியாகவே திருமாவளவனைப் பாராட்டிவருகிறார். திருமாவளவனின் ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூல் வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய உரை, அபத்தத்தின் உச்சம். அரசியல்நீக்கம் செய்யப்பட்ட இலக்கியங்களையே முன்னிறுத்தும் ஜெயமோகனின் இலக்கியத்தூய்மைவாதம் புரிந்துகொள்ளக்கூடியது, விமர்சனத்துக்குரியது. ஆனால் கால்நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர் அரசியற்செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் ஒருவரையே அரசியல்நீக்கம் செய்து புகழுரைகளை முன்வைக்க முடியுமென்றால் அது அறியாமையின்பாற்பட்டதோ அப்பாவித்தனமானதோ அல்ல, அபாயகரமானது.
சாதிய ஒடுக்குமுறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் களத்தில் நிற்பதாலேயே திருமாவளவனைத் தான் பேராளுமை என்று புகழ்வதாக ஜெயமோகன் சொல்லிக்கொள்கிறார். ஆனால் சாதிய ஒடுக்குமுறை, அதற்கு எதிரான எதிர்வினை என்றளவில் திருமாவளவன் தன் பணிகளைச் சுருக்கிக்கொள்வதில்லை. அவருக்கென்று உறுதியான, தெளிவான அரசியல் சித்தாந்த நிலைப்பாடு இருக்கிறது.
திருமாவளவனின் அரசியல் என்ன? சாதி எதிர்ப்பு, சனாதன பார்ப்பனிய எதிர்ப்பு. ‘நாங்கள் இந்துக்கள் அல்ல’ என்ற பிரகடனம், பௌத்தத்தைப் பார்ப்பனியத்துக்கு மாற்றாக நிறுத்துதல், இந்துத்துவ எதிர்ப்பு, ஒற்றை இந்திய தேசிய எதிர்ப்பு, தமிழ்த்தேசியம், ஈழ ஆதரவு. இதில் எந்தப்புள்ளியிலாவது ஜெயமோகன் திருமாவளவனை அடையாளம் கண்டு இணையும் சாத்தியமுண்டா?
ஜெயமோகன் தொடர்ச்சியாக இந்துமத அடையாளத்தைப் பெருமையுடன் முன்வைப்பவர், முஸ்லீம்களைப் பழமைவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்திரிப்பவர், தேசிய இனப்பிரச்னைகளின் தனித்துவத்தை மறுத்து ஒற்றைத் தேசியத்தைத் தீவிரத்துடன் வலியுறுத்துபவர், பெண்களையும் பெண் எழுத்தாளர்களையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுதூரம் இழிவுபடுத்துபவர். திருமாவளவன் தன் கருத்தியல் முன்னோடிகளாக முன்னிறுத்தும் அம்பேத்கர், பெரியார் குறித்து ஜெயமோகன் முன்வைத்த அவதூறுகளை பா.பிரபாகரன், நான் உள்பட பலரும் மறுத்து தமிழ்ச்சூழலில் விரிவாக எழுதியிருக்கிறோம்.
திருமாவளவன் ஆதரிக்கும், திருமாவளவனை ஆதரிக்கும் நட்புச்சக்திகள் யார்? பெரியாரியவாதிகள், கம்யூனிஸ்ட்கள், தி.மு.க, பெண்ணியவாதிகள், இஸ்லாமிய அமைப்புகள், தமிழ்த்தேசியவாதிகள், ஈழ ஆதரவாளர்கள். இவர்களில் ஜெயமோகனால் இழிவுபடுத்தப்படாத, அவதூறு செய்யப்ப்டாத ஒருவர்கூட கிடையாது.
கொளத்தூர்மணி மாதிரியான பெரியாரியக்கத்தலைவர்கள், ஜவாஹிருல்லா போன்ற இஸ்லாமிய இயக்கத்தலைவர்களைப் பயங்கரவாதிகளாகவே சித்திரித்திருக்கிறார். கம்யூனிச இயக்கங்கள், அதன் எழுத்தாளர்கள், இலக்கிய அமைப்புகள் குறித்தும் அவதூறுகள்.
ஜெயமோகன் காந்தியை முன்வைப்பராகத் தன்னை முன்னிறுத்துக்கொண்டாலும் அதற்கும் அவர் நேர்மையாக இருந்தவர் கிடையாது. முஸ்லீம்களை நேசசக்தியாகப் பார்த்த காரணத்தாலேயே இந்துத்துவவாதிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் காந்தி. ஆனால் ஜெயமோகன் ‘முஸ்லீம்கள் எனக்குத் திருமணப் பத்திரிகை அனுப்ப வேண்டாம்’ என்று எழுதியவர். வன்முறைக்கு எதிரானவர் காந்தி. ஆனால் ஜெயமோகனோ எல்லாவகையான அரச பயங்கரவாதங்களையும் ஆதரிப்பவர். வடகிழக்கு மாநிலப் போராளிகளை அந்நியநிதி பெறும் தேசவிரோதிகள் என்று தொடர்ந்து எழுதி வருபவர். உளவுத்துறை அதிகாரிகளின் கருத்தையே தன் கருத்தாகத் தொடர்ந்து முன்னிறுத்துபவர். ‘இந்திய அமைதிப்படை பாலியல் வன்முறையில் ஈடுபடவில்லை’ என்று எழுதி அம்பலப்பட்டவர். மரணதண்டனையையும் வேளச்சேரி என்கவுண்டரையும் ஆதரித்த அவருக்கும் காந்தியத்துக்கும் என்ன தொடர்பிருக்க முடியும்?
இலக்கியத்தளத்திலும்கூட மாற்றுச்சக்திகள் குறித்த அவதூறுகளையே ஜெயமோகன் முன்வைத்துள்ளார். அ.மார்க்ஸ் உள்ளிட்ட நிறப்பிரிகை குழுவினரைத் தலித் விரோத இடைநிலைச்சாதிகள் என்றார். எஸ்.வி.ஆர் அந்நிய நிதி பெறுபவர் என்றார். கி.ராஜநாராயணனுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் புகார் கொடுத்தவர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சுந்தரராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள்விளை’க்கு எதிராகத் தலித்முரசு ஏற்பாடு செய்த கூட்டத்தை ‘சுந்தரராமசாமி ஆதவன் தீட்சண்யாவால் வேட்டையாடப்பட்டபோது’ என்றும் கொஞ்சமும் கூசாமல் பொய்களை முன்வைத்தவர் ஜெயமோகன்.
தமிழகத்தில் அரசியல் மற்றும் இலக்கியக்களத்தில் செயற்பட்ட, செயற்படும் அத்தனை ஆளுமைகள் குறித்தும் ஜெயமோகன் அவதூறுகளையும் பொய்களையும் முன்வைத்திருக்கிறார். அவற்றையெல்லாம் தொகுத்தால் ஜெயமோகனின் நூல்கள் அளவுக்குக் கனமானவையாக இருக்கும். இன்றைக்குத் திருமாவளவன் அடைந்திருக்கும் இடத்தை உருவாக்கிய ஆளுமைகளையும் அவரது கருத்தியல் நட்புச்சக்திகளையும் தொடர்ந்து அவதூறு செய்துவரும் ஜெயமோகன் திருமாவளவனை மட்டும் அவரது அரசியலில் இருந்து பிரித்து புகழ்வதற்கு என்ன காரணமிருக்க முடியும்? அது ஓர் எளிய தந்திரம்தான்.
2000 – காலகட்டத்தில் பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் கம்யூனிஸ்ட்களையும் தலித்துகளுக்கு எதிராக நிறுத்தும் விலகல்வாத தலித்தியம் தோன்றியது. அரசியல் அமைப்புகளில் தலித்துகளின் பிரதிநிதித்துவம் குறித்தும் தலித் இயக்க வரலாறு குறித்தும் அதன் விமர்சனக் குரல்கள் முக்கியமானவை. பெரியாரிஸ்ட்கள், தி.மு.க, கம்யூனிஸ்ட்கள் அந்தக் குரல்களின் மூலம் சில மாற்றங்களையும் உள்வாங்கிக்கொண்டனர்.
ஆனால் அந்த விலகல்வாத தலித்தியம் தலித் அரசியலை ஒரு குறுகிய சாதி அரசியலாக மாற்றியது. பெரியார், திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட்களைத் தலித்துகளுக்கு எதிராக நிறுத்தியதுடன் தலித்துகளை இந்துத்துவத்துக்கு ஒப்புக்கொடுத்தது. இளையராஜாவின் மோடி ஆதரவுக்கு முட்டுக்கொடுப்பது வரை பல விளைவுகளை நாம் புரிந்துகொள்ள முடியும். அடிப்படையில் சனாதன இந்துத்துவ எழுத்தாளரான ஜெயமோகன் இந்த விலகல்வாத தலித்தியத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதன் இன்னொரு பக்கம் அயோத்திதாசரையும் திருமாவளவனையும் புகழ்வது. அவர்களது கருத்தியல் அடிப்படைகளைக் காலிசெய்து, அரசியல்நீக்கம் செய்து நிறுத்துவதுடன் ‘தலித் ஆதரவாளர்’ என்ற பட்டத்தையும் சுலபத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்ற தந்திரம்தான்.
35 Comments

2 Comments on “தோழர் தொல்.திருமாவளவனின் மணிவிழா/சுகுணா திவாகர்”

  1. இன்றைக்குத் தாங்கள் வெளியிட்டுள்ள சுகுணா திவாகரின் குறிப்பு விருட்சத்தின் தரத்தைக் குறைக்கிறது. இலக்கியத்துக்கும் அக்குறிப்பிற்கும் தொடர்பில்லை. ஜெயமோகனை எதிர்ப்பவர்களுக்கோ அல்லது ஆதரிப்பவர்களுக்கோ விருட்சம் தளம் அமைத்துக் கொடுக்க வேண்டாம் என்று வேண்டுகிறேன்

  2. வளவதுரையன் கருத்தை நான் வழிமொழிகிறேன். அண்மைக்காலமாக நவீன விருட்சம் எந்த ஒரு குறிப்பிட்ட இலக்கும் இன்றி இயங்குகிறதோ என்னும் ஐயம் எனக்கும் எழுகிறது. இன்னோரிடத்தில் வந்ததை cut and paste செய்வதே இங்கு அதிகம் நிகழ்கிறது. அசல் படைப்புகள் மட்டுமே வெளியானால்தான் இதழின் கண்ணியம் கூடும்.

Comments are closed.