கம்பன் கவியமுதம்—58 /வளவ. துரையன்

மாளிகையும் விலைமகளிரும்

பாடகக் காலடி பதுமத்[து] ஒப்பன
சேடரைத் தழீஇயின செய்ய வாயின
நாடகத் தொழிலின் நடுவு துய்யன
ஆடகத் தோற்றத்த மகளிர் போன்றன [124]

கம்பன் இந்தப் பாட்டில் மாளிகைகளை விலைமகளிருக்கு ஒப்பிட்டுக் காட்டுகிறான். அதனால் இப்பாட்டைச் சிலேடையாக அமைத்துள்ளான்.

அம்மாளிகையின் தூண்களின் அடிப்பகுதிகள் தாமரை வடிவமாக அமைந்துள்ளன. விலைமகளிர் பாடகம் என்னும் காலணியை அணிந்துள்ள தாமரை போன்ற பாதங்கள் பெற்றுள்ளனர். ஆண்டாள் நாச்சியார் திருப்பாவை 27-ஆம் பாசுரத்தில், “பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்” என்பார். சேடர் என்பதற்கு அஸ்திவாரம் என்னும் பொருள் உண்டு. மாளிகைகள் அஸ்திவாரத்தின் ஆழத்தால் நாகலோகம் வரை சேர்ந்துள்ளன. சேடர் என்பதற்கு அழகான ஆண்கள் என்னும் பொருள் உண்டு விலைமகளிர் ஆண்மக்களைத் தழுவுவார்கள். மாளிகைகள் செம்மையாக [சிறப்பாக] இருந்தன. விலைமகளிர் செம்மையான [செந்நிற] வாய் பெற்றிருந்தனர் விலைமகளிர் மாளிகைகள் நாடு அகம் பெற்றுள்ளன. அதாவது யாவரும் விரும்பி நாடக் கூடியனவாக இருந்தன. விலைமகளிர் நாடகம் ஆடும் தொழில் செய்வர். மாளிகைகளின் நடு இடங்கள் சுத்தமாக இருந்தன. விலைமகளிரின் நடுப்பகுதியான இடை சிறுத்து இருந்தது. மாளிகைகள் பொன்னாலான வெளி அமைப்பைப் பெற்றிருந்தன. விலைமகளிர் பொன்போல் ஒளிர்கின்ற மேனியைப் பெற்று இருந்தனர்.
அருமையான சிலேடைப்பாடல் இதுவாகும்.