அன்பின் வதைகள்

பானுமதி.ந

ஒற்றைக் கண்ணை விரித்துக் கொண்டு

தட தடத்துப் போன அந்த வண்டியில்

பிரியும் முன் கூட உன் பார்வை படாதா

எனத் தவித்தது நீ ஏசிய அந்த முரட்டு மனம்

முன்னர் என்னிடம் பேசும் போது உன்

வார்த்தை அமிலங்களால்

எழும்பிய தழும்புகளை

என் சுயம் உன்னிடம் காட்டாதிருப்பினும்

உனக்குப் புரியும் என்ற நான் இலவுக் கிளி

மங்கிய நிலவு விழுந்த பார்ப்போரற்ற

பாலை நிலம்

நான் எண்ணி எண்ணித் தொடுப்பதை

நீ கொட்டிக் கொட்டிக் கவிழ்ப்பாய்

வாதைகள் தொடரும் அன்பின் பாதை