
நான் சந்தித்த இரு முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இங்குக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒருவர் க.நா.சு. இன்னொருவர் சி சு செல்லப்பா. இவர்கள் இருவரையும் நான் சந்திக்க முடியுமென்றோ உரையாட முடியுமென்றோ நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இவர்கள் இருவரைத் தவிர இன்னொரு படைப்பாளியையும் நான் சந்தித்திருக்கிறேன். அவர் சிட்டி. இவர்கள் மூவரும் மணிக்கொடி எழுத்தாளர்கள்.
க.நா.சுவும், சி.சு செல்லப்பாவும் இருதுருவங்கள். இருவரும் நேர் எதிரான இலக்கியக் கொள்கை உடையவர்கள். க.நா.சு ரசனை அடிப்படையில் தன் விமர்சனக் கொள்கையை வகுத்துக்கொண்டவர். சி சு செல்லப்பா புத்தக விமர்சனத்தைப் பகுத்துப் பார்க்கும் கொள்கையைக் கொண்டவர்.
ஏன் இவர்களைப் பற்றி சொல்கிறேனென்றால் இவர்கள் மூத்தத் தலைமுறை படைப்பாளிகள். க.நா.சுவை மயிலாப்பூரில் உள்ள ஒரு வீட்டில் சந்தித்தேன். அவரைச் சந்திக்க எழுத்தாளர்கள் பட்டாளமே அன்று சென்றது. ஆனால் அந்தச் சந்திப்பு ஒரு இனிமையான அனுபவம்.
சி.சு.செல்லப்பா பெங்களூரில் இருப்பதாகக் கேள்விப்பட்டேனே தவிர, பெங்களூரில் உள்ள என் உறவினர் வீட்டிற்குச் சென்றாலும், அவரைச் சந்திக்க எந்த முயற்சியையும் நான் செய்ததில்லை சி. சு செல்லப்பாவை நான் முதன் முதலில் சந்தித்தது க.நா.சு இரங்கல் கூட்டத்தில்தான். அதேபோல் க.நா.சுவை முதன் முதலில் சந்தித்தது கூட மௌனியின் இரங்கல் கூட்டத்தில்தான்.
இலக்கியம் குறித்து க.நா.சுவின் கண்ணோட்டம் வேறு, சி.சு செல்லப்பாவின் கண்ணோட்டம் வேறு. இருவரும் நண்பர்களாக இருந்தாலும்.
ஒருமுறை க.நா.சு சொன்னதாக சி சு செல்லப்பா ஒன்றைச் சொல்லியிருக்கிறார். “நாமதான் படைப்பிலக்கியத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதேபோல் படைப்பிலக்கியவாதியான நாமே புத்தக விமர்சனமும் செய்ய வேண்டும்.”
அதைக் கேட்டு ரசனை அடிப்படையில் க.நா.சு ஒரு புத்தகத்தைப் பற்றி விமர்சனம் செய்தார். இந்த விமர்சனத்தில் எந்தவித பின்புலமும் கிடையாது. ஒரு புத்தகத்தைப் படித்தவுடன் என்ன தோன்றுகிறதோ அதைக் குறிப்பிட்டுவிடுவார். ஒருமுறை சா கந்தசாமியின் நாவல் ஒன்றைப் படித்துவிட்டு க.நா.சு குறிப்பிட்டது Dropouts பற்றிய நாவல் என்று. அவர் குறிப்பிட்டது அந்த நாவலைப் பற்றிய முக்கிய அம்சம்.
ஆனால் சி சு செல்லப்பா அப்படியெல்லாம் கிடையாது. அவர் ஒரு படைப்பை நன்றாக ஆராய்ச்சி செய்து அதை தியரி மாதிரி மாற்றி விடுவார். இதற்காக அவர் மேல் நாட்டு அறிஞர்களின் புத்தகங்களை எல்லாம் படித்து இருக்கிறார்.
சி.சு செல்லப்பா அவருடைய üஎன் சிறுகதைப் பாணிý என்ற புத்தகத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்:
‘தரமான இலக்கியப் படைப்புகளைச் சோதனை முயற்சிகளை இனம் காணத் தெரியாத, இயலாத ஒரு வாசகப் பரம்பரை இன்று பரவலாகிவிட்ட நிலையில், இலக்கியத்தை ரசித்து தராதரம் அறியாத தர விமர்சன அறிவு சேமிக்காத அரைகுறை இலக்கிய அபிப்பிராயக்காரர்கள் விருப்பு வெறுப்பு மட்டுமே கொண்டவர்கள் மலிந்து விட்ட நிலையில் படைப்பாளியே பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது,’ என்கிறார்.
இங்கு சி சு செல்லப்பாதான் க.நா.சுவை மறைமுகமாகச் சாடுகிறார்.
நான் முதன்முதலாக சி சு செல்லப்பாவை க.நா,சு இரங்கல் கூட்டத்தில் சந்தித்தேன். திருவல்லிக்கேணி பெரிய தெருவில் நடந்ததாக ஞாபகம். எழுத்தாளர் சங்கக் கட்டடத்தில். சி சு செல்லப்பா எளிமையான தோற்றத்தில் கதர் வேஷ்டி கதர் சட்டை அணிந்திருந்தார்.
எழுத்தாளர்களிடையே மதிப்பை உருவாக்கியவர் ஜெயகாந்தன் என்று என் நண்பர்கள் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சி சு செல்லப்பாவைப் பார்த்தபோது அவர் சாதாரணமாகத் தென்பட்டார். ஆனால் அவர் குரல் அழுத்தமாகவும் சத்தமாகவும் இருந்தது. க.நா.சுவின் இரங்கல் கூட்டத்தில் அவர் க.நா.சு மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்துகிறாரோ என்று தோன்றியது.
சி.சு செல்லப்பாவிற்கு விளக்கு விருது வழங்க முன்வந்தபோது, அதை முதலில் மறுத்தார். வெளி ரங்கராஜன் முயற்சியால் பரிசுத் தொகையை மறுத்தாலும், அந்தத் தொகையில் அவருடைய புத்தகம் வருவதை ஏற்றுக்கொண்டார். சி சு செல்லப்பா பரிசுக்கெல்லாம் ஏங்காதவர். பரிசு கொடுக்கும் நோக்கத்தையும் சந்தேகப்படுவார். வேடிக்கையான மனிதர்.
üஎன் சிறுகதை பாணிý என்ற சி சு செல்லப்பாவின் புத்தகம் அப்படித்தான் உருவானது. அந்தப் புத்தகத்திற்கான கூட்டம் ஒன்று மயிலாப்பூரில் நடந்தது. சிறு பத்திரிகைகள் எல்லாம் சேர்ந்து நடத்தும் கூட்டமாக அதை மாற்றினார் சி சு செல்லப்பா.
60வாக்கில் எழுத்து என்ற சிற்றேட்டை சி சு செல்லப்பா கொண்டு வந்தார். எழுத்து என்ற பத்திரிகை கவிதைக்கும், விமர்சனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த பத்திரிகை.
30களில் முயற்சி செய்த புதுக்கவிதை உருவம் எழுத்து பத்திரிகை மூலமாக உறுதிப் பெற்றது. எழுத்து என்ற சிற்றேடு மட்டும் இல்லாமலிருந்தால், இப்போது வந்து கொண்டிருக்கும் கவிதையின் உருவம் எப்படி மாறிப் போயிருக்குமென்று தெரியாது. சி சு செல்லப்பாவின் üஎழுத்துý பத்திரிகை முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டியதாக உள்ளது.
சி சு செல்லப்பாதான் வெகு ஜன இதழ்களுக்கும் சிறு பத்திரிகைக்கும் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டார். எழுத்து பத்திரிகை வந்த சமயத்தில் கல்கிக்கும் மணிக்கொடிக்காரர்களுக்கும் பெரிய சண்டையே நடந்தது. இப்போது அது உடைந்து போய்விட்டது.
இன்றைய நிலையோ வேறு மாதிரி. ஒரு வெகுஜனப் பத்திரிகையே சிறு பத்திரிகையை எடுத்து நடத்துகிறது. மணிக்கொடி இதழ் சிறுகதைகளுக்காகவே ஒரு காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் இன்று சிறுகதைகளே தேவை இல்லை. பத்திரிகைகளின் தன்மைகளும் மாறி விட்டன. மருத்துவத்திற்காக ஒரு இதழ். வணிகத்திற்காக ஒரு இதழ் சினிமாவிற்கென்று ஒரு இதழ் என்று பல பிரிவுகளில் பலதரப்பட்ட பத்திரிகைகள் வெளி வருகின்றன.
இன்றைய காலகட்டத்தில் சி.சு.செல்லப்பாவால் எங்கே பொருந்தி நிற்க முடியும். எழுத்து மாதிரி ஒரு பத்திரிகையைத் திரும்பவும் எடுத்து நடத்த முடியுமா ? சந்தேகம்தான்.
தனது கடைசிக் காலத்தில் சி.சு செல்லப்பா பிள்ளையார் கோயில் தெருவில் திருவல்லிக்கேணியில் தனியாக மனைவியுடன் குடி வந்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 80து வயதைத் தாண்டியும் அவருடைய எழுதுகிற தாகம், எழுதியதைப் புத்தகமாகக் கொண்டு வருகிற தாகம் அடங்கவே இல்லை. அவருடைய புதல்வருடன் பெங்களூரில் இருந்தால், இதெல்லாம் சாத்தியமில்லை என்றுதான் அவர் தனியாக வந்துவிட்டார்.
ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு இலக்கியச் சந்திப்புக் கூட்டத்தில், ஒரு முறை, பல பதிப்பாளர்களிடம் 1000 பக்கங்களுக்கு மேல் எழுதிய üசுதந்திர தாகம்ý என்ற நாவலைப் புத்தகமாகக் கொண்டு வர முடியுமா என்று கேட்டுக்கொண்டிருந்தார். யாரும் துணியவில்லை.
அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த சி.சு செல்லப்பாவிற்குப் பெரிய ஏமாற்றம்.
சி.சு.செல்லப்பா எழுத்து பிரசுரமாகத் தானாகவே ‘ சுதந்திர தாகம்’ புத்தகத்தைக் கொண்டு வர முடிவெடுத்தார். 84 வயதில் சி.சு.செல்லப்பாவின் துணிச்சலான முடிவு இது. இந்தக் கட்டத்தில் நானும் சி.சு.செல்லப்பாவிற்குப் புத்தகம் கொண்டு வர உதவி செய்தேன். மணி ஆப்செட்காரர் சி.சு.செல்லப்பா வீட்டிற்கே வந்திருந்து உதவி செய்தார். தைரியமாக 1000 பிரதிகள் அச்சடித்து பாகம் 1, பாகம் 2, பாகம் 3 எனக் கொண்டு வந்தார். அவருடைய உறவினர்கள், நண்பர்கள் அவருக்குப் புத்தகம் கொண்டு வர உதவினார்கள்.
அவர் மீது உள்ள மரியாதைக் காரணமாகப் பல பத்திரிகைகள் புத்தகத்தைப் பாராட்டி விமர்சனம் செய்தன. இந்தியா டுடே என்ற பத்திரிகை புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்துப் பிரசுரம் செய்தது.
புத்தகம் கேட்டு கடிதம் எழுதுபவர்களிடம் தானாகவே கவரில் புத்தகக் கட்டை வைத்து தபாலில் அனுப்பி விடுவார். வீடு முழுவதும் பரண் மீது புத்தகக் கட்டு நிரம்பி வழிந்தது. அவர் வீட்டில் புத்தகக் கட்டைப் பார்க்கும் போது எனக்குக் கதி கலங்கும். இந்த வயதில் என்ன துணிச்சல் என்று.
ஒரு இலக்கிய விமர்சகர் என்னிடம், “பாருங்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் சுதந்திர தாகம் திருவல்லிக்கேணி பிளாட்பார கடையில் வந்து விடப்போகிறது,” என்று குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் அது பொய்த்து விட்டது. மூன்று பாகங்கள் கொண்ட புத்தகம் விலை ரூ.450. பாதிக்குமேல் விற்றதுபோக மீதிப் புத்தகங்களை ரூ.100க்குக் கிடைக்கும்படி புத்தகக் கண்காட்சியில் விற்றேன். எல்லாம் சி சு செல்லப்பாவின் மறைவுக்குப்பின். இன்று ஒன்று கூட இல்லை. க.நா.சுப்பிரமணியம் அவர் காலத்தில் ஒரு நாவலை அடித்துவிட்டு பரணில் வைத்திருந்தார். விற்கவில்லை என்றவுடன், அவர் மாமனாரிடம் சொல்லி புத்தகத்தை அப்படியே பேப்பர் கடையில் போடச் சொல்லிவிட்டாராம். என்ன கொடுமை இது.
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சி.சு செல்லப்பாவைப் போய்ப் பார்க்காமல் இருக்க மாட்டேன். அலுவலகம் கடற்கரைச் சாலையிலிருந்ததால் அவரைப் போய்ப் பார்ப்பது சுலபமாகவும் இருந்தது.
அவரை அழைத்துக்கொண்டு நூல் நிலையத்தில் புத்தகம் வாங்குவதற்கான படிவத்தைக் கொடுத்துப் பதிவு செய்தேன். நூல் வாங்குவதற்கான உத்தரவு கிடைக்கவில்லை. செல்லப்பாவிற்கு ஏமாற்றம். வருத்தம். இருந்தாலும் அவருக்குப் புத்தகம் போடும் ஆர்வம் சற்றும் குறையவில்லை. ஒவ்வொரு முறை அவர் வீட்டுக்குச் செல்லும்போது, ‘எழுத்தைப் பற்றி விமர்சனம் செய்த வெங்கட் சாமிநாதனுக்கும், பிரமிளுக்கும் நான் பதில் எழுதியிருக்கிறேன்,’ என்று அவர் எழுதிய பக்கங்களையெல்லாம் காட்டுவார். இன்னொன்றும் சொல்வார். இதெல்லாம் புத்தகமாகக் கொண்டு வர வேண்டுமென்று. எனக்குக் கேட்கவே பக்கென்று இருக்கும்.
அவரும், அவர் மனைவியும் தள்ளாத வயதில் தனியாக இருந்ததை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. சி. சு. செல்லப்பாவிற்கு மின் விசிறி போடக்கூடாது. அவர் மனைவிக்கு வேண்டும். மனைவி கணவருடன் சண்டையே போட மாட்டார். விட்டுக் கொடுத்து விடுவார்.
சி.சு.செல்லப்பா அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருப்பார்.
ஒருமுறை இலக்கியக் கூட்டத்திற்கு அவரைப் பேச அழைத்தார்கள். ஏற்பாடு செய்தவர்கள் சில இலக்கிய அபிமானிகள். அவரை திருப்பூர் கிருஷ்ணன் ஆட்டோவில் அழைத்துக் கொண்டு போனார். நானும் டூ வீலரில் பின்னால் வந்து கொண்டிருந்தேன். அன்று மழை.
கூட்டம் நடக்குமிடத்திற்கு யாரும் வரவில்லை. சி. சு.செல்லப்பா, கூட்டம் ஏற்பாடு செய்த இருவர், திருப்பூர் கிருஷ்ணன், நான், பின் வண்டி ஓட்டுநர் என்று ஐந்து பேர்கள்தான் இருந்தோம். கூட்டத்திற்கு வந்திருந்த சி.சு.செல்லப்பாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. எதிரில் அமர்ந்திருந்த என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டார். நான் விருட்சம் என்ற பெயரில் பத்திரிகை நடத்தி வருகிறேன். அந்த விருட்சம் பட்டுப்போய் நாசமாய்ப் போகட்டும் என்று திட்ட ஆரம்பித்து விட்டார். கேட்பதற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அடுத்தநாள் அவரிடமிருந்து போன். “நான் ஏதோ வேகத்தில் சொல்லிவிட்டேன். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று. இதுதான் செல்லப்பா.
லண்டனிலிருந்து வந்துகொண்டிருந்த ஒரு பத்திரிகையை விமர்சனத்திற்கு மாதிரியாக எடுத்துக்கொண்டுதான் அவர் எழுத்து பத்திரிகையைக் கொண்டு வந்ததாக சி சு செல்லப்பா குறிப்பிட்டிருக்கிறார்.
மௌனி, க.நா.சு படைப்புகள் எல்லாம் சி சு செல்லப்பாவிற்குப் பிடிக்காது. மௌனி கதைகள் குறித்து விமர்சனம் எழுதியிருக்கிறார். மௌனி கவிதைப்புத்தகத்தில் ஒரே ஒரு கதைதான் நன்றாக இருக்குமென்று கூறுவார். பி.எஸ். ராமையா அவருடைய குரு. எந்தப் பத்திரிகையில் எந்தக் கதை வந்திருக்கிறது என்று குறிப்புகள் எழுதி ராமையாவைப் பற்றி ஒரு புத்தகம் கொண்டு வந்து விட்டார். சுதந்திர தாகம் என்ற புத்தகத்திற்குப் பிறகு. அப் புத்தகத்தின் பெயர். ‘ ராமையாவின் சிறுகதைப் பாணி’. ராமையாவின் கதைகளே இல்லாதபோது ராமையாவின் சிறுகதைப் பாணி என்ற விமர்சனப் புத்தகத்தை யார் படிப்பார்கள் என்று அவரிடம் கேட்டேன்.
எழுத்து பத்திரிகையின் முக்கியமான பங்களிப்பவர் பிரமிள். அவர் நோய்வாய்ப்பட்டுப் படுத்தப்படுக்கையாக மருத்துவமனையில் கிடந்தபோது விளக்கு பரிசைக் கொடுக்க மருத்துவமனைக்கு சி. சு செல்லப்பா வந்திருந்தார். அவர் கையால்தான் அந்தப் பரிசு பிரமிகளுக்குக் கிடைத்தது. அந்தக் காலத்தில் எழுத்துவில் புதிய படைப்பாளிகள் பலரை அறிமுகப் படுத்தியிருக்கிறார். ஆனால் ஏன் ஞானக்கூத்தன் கவிதைகளை எழுத்தில் பிரசுரம் செய்யவில்லை என்ற கேள்வி எனக்கு எப்போதும் இருந்துகொண்டிருக்கும். கனகசபாபதி, ந.முத்துசாமி, சச்சிதானந்தம், எஸ்.வைதீஸ்வரன் போன்ற பல படைப்பாளிகள் எழுத்து மூலமாகத்தான் உருவானவர்கள்.
செல்லப்பாவை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் எதாவது சுவாரசியமாகப் பேசுவார். ஒரு முறை க.நா.சுவை பற்றி ஒன்றைக் குறிப்பிட்டார். அவர் சிபாரிசில் க.நா.சு தங்குவதற்கு ஒரு இடம் வாடகைக்குப் பிடித்துக் கொடுத்தாராம். அந்த வீட்டின் சொந்தக்காரர் செல்லப்பாவிற்காக அந்த இடத்தைக் கொடுத்திருக்கிறார். ஒரு முறை வீட்டை வந்து பார்க்கும்போது, வீடு திறந்து இருந்ததாம். வீட்டில் ஒன்றுமில்லையாம். வீட்டில் குடியிருந்த க.நா.சு வும் அவர் குடும்பத்தையும் காணவில்லையாம். சில மாதங்களாக வாடகைக் கொடுக்காமல் க.நா.சு வீட்டை காலி செய்துகொண்டு சொல்லாமல் போய்விட்டாராம். இதைச் செல்லப்பா க.நா.சுவை திட்டியபடி கோபமாகச் சொல்வார். இதைக் கேட்டு எனக்கு க.நா.சு மீதுதான் இரக்க உணர்ச்சி ஏற்படும். எந்த நிலையில் ஒருவர் அப்படி ஒரு முடிவை எடுத்திருக்க முடியும் என்று.
செல்லப்பா மரணம் அடையும் தறுவாயில்தான் கேரளாவில் தகழி சிவசங்கரன் பிள்ளை என்ற படைப்பாளியும் மரணம் அடையும் நிலையிலிருந்தார். ஆனால் அங்குள்ள மக்கள் அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு தகழியைப் போய்ப் பார்த்துவிட்டுப் போவார்களாம். ஏன் கேரளாவின் முதலமைச்சரே அவரைப் போய்ப் பார்த்து நலம் விசாரிப்பாராம்.
தகழி என்ற படைப்பாளிக்குச் சமமான செல்லப்பாவிற்கு எதுவும் நடக்கவில்லை. செல்லப்பா தகழி என்ற படைப்பாளியைவிட மேலானவர். பல படைப்பாளிகளை எழுத்து மூலம் உருவாக்கியவர். கவிதைக்கும், விமர்சனத்திற்கும் தமிழில் புதிய பாதையை வகுத்தவர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எழுத்திற்காக அர்ப்பணித்தவர். அதோடு மட்டுமல்லாமல் அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். சிறைக்கெல்லாம் சென்றிருக்கிறார். அவருக்கு உரிய மரியாதையை நாம் கொடுக்கத் தவறி விட்டோம் என்று இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் அவர் இறந்தபிறகு சாகித்தியஅக்காதெமியின் விருது சுதந்திர தாகம் புத்தகத்திற்குக் கிடைத்துள்ளது.
(19.01.2013 அன்று சாகித்திய அக்காதெமி ஏற்பாடு செய்த சி.சு. செல்லப்பாவின் 100வது ஆண்டு குறித்து எழுதி வாசித்த கட்டுரை)
