கம்ப்யூட்டரில் பூதம்/நாகேந்திர பாரதி


ஆப்பிள் கம்ப்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து, சொன்ன சொற்படி கேட்கும் ‘சிறி ‘ என்ற மென்பொருளுடன் பேசிக் கொண்டிருந்தான் அரவிந்த். அது அவன் சொற்படி கேட்டு ஒரு டாக்குமென்டை ‘ஓபன்’ செய்தது . அதில் அவன் சொல்வதை டைப் அடித்தது . அவன் அதைப் படித்து முடித்தவுடன் அதில் இருக்கும் பிழை திருத்தும் ‘ஸ்பெல் செக்’ போன்றவற்றையெல்லாம் செய்தது .

அப்பொழுதுதான் திடீரென்று அவன் மனதில் ஒரு எண்ணம். ஆப்பிள் கம்பியூட்டர் கான்பெரன்ஸில் போன மாதம் நடந்த மீட்டிங்கில் , ‘சிறி’யின் மேம்பட்ட மென்பொருளாக ‘பூதம்’ என்ற மென்பொருள் தயாரித்துக் கொண்டிருப்பது பற்றி சில வல்லுநர்கள் பேசிக்கொண்டு இருந்தது ஞாபகம் வந்தது. பரீட்சார்த்த முயற்சியாக சில கம்ப்யூட்டர்களில் அவற்றை நிறுவியுள்ளதாகச் சொன்னதும் ஞாபகம் வந்தது.

ஏதோ ஞாபகத்தில் மவுசை முன்னும் பின்னும் நகர்த்திய போது கம்ப்யூட்டர் திரையில் இருந்து ஒரு புகை வெளிவந்து உருவமாக மாறி ‘ அரவிந்த், நான்தான் , சிறியின் அண்ணன் புதிய மென்பொருள் ‘பூதம்’ உங்கள் விருப்பம் எதுவானாலும் சொல்லுங்கள் . உடனே நிறைவேற்றுகிறேன் . ‘ என்றது.

அப்போது தான் ‘ பொன்னியின் செல்வன் ‘ படம் வெளிவந்து பலர் கல்கியின் அந்தக் கதையைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததாலும் அவனுக்கும் அந்தக் கதையில் வரும் வந்தியத்தேவன் , குந்தவை பிடித்திருந்தாலும் , உடனே கேட்டு விட்டான். ‘நான் அந்த சோழர் காலத்திற்குச் சென்று வந்தியத்தேவனாக மாறி குந்தவையைச் சந்திக்க வேண்டும் ‘ .

பாவம் அவன் மறந்து விட்டான் , வந்தியத்தேவன் பற்றிய சரித்திர சான்று ‘ வல்லவரைய நாட்டை ஆண்டு வந்த வந்தியத்தேவன் சோழ இளவரசி குந்தவையை மணந்து கொண்டான். சோழ நாட்டின் சார்பாக பல போர்களில் கலந்து கொண்டான் ‘ என்ற ஒன்றே . மற்றவை எல்லாம் கல்கி அவர்களின் கற்பனை நிகழ்ச்சிகளே என்று .

‘கண்களை மூடிக் கொள்’. என்றது பூதம் . சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தான். இப்போது அவன் ஒரு காட்டுக்குள் இருந்தான். அவனைச் சுற்றி பல இளைஞர்கள் வேல் கம்போடு நின்று கொண்டு இருந்தார்கள். ‘எங்கே போய் விட்டீர்கள் அரசே , உங்களைத் தேடி , சோழ இளவரசர் ஆதித்ய கரிகாலன் வந்துள்ளார் . உடனே வாருங்கள் ‘ என்று அழைத்துச் சென்றனர்.

அங்கே சென்று பார்த்தால் , இவனைப் போல பல வந்தியத் தேவன்கள் நின்று கொண்டு இருந்தார்கள். அவர்களும் ஆப்பிள் கம்பியூட்டர் பூதத்தின் உதவியால் குந்தவையைப் பார்க்க வந்தவர்கள். ஆதித்ய கரிகாலன் ஒரு நிமிடம் குழம்பிப் போனான். இவர்களில் யார் நிஜ வந்தியத்தேவன் , என்று கண்டு பிடிக்க முடியாமல் , ‘ சரி எனது தங்கை குந்தவையிடம் அழைத்துச் செல்லலாம். அவள் புத்திசாலி , கண்டு பிடித்து விடுவாள் ‘ என்று அவர்கள் அனைவரையும் பழையாறைக்கு அழைத்துச் சென்றான். குதிரைகள் பறந்தன.

ஒரு பெரிய மண்டபத்தில் அவர்கள் அனைவரையும் நிறுத்தி வைத்து விட்டு , குந்தவையை அழைத்து வந்தான். வந்தவள் ‘ ஓங்கு தாங்கான கனத்த உருவத்தோடு பலத்த சிரிப்போடு’ வந்து நின்றாள்.

‘ஐயோ, எனக்கு குந்தவை வேண்டாம் ‘ என்று அலறியபடி விழித்தவனைப் பார்த்து ‘ எனக்குப் புரியலை, மறுபடி சொல் ‘ என்றது அந்த ‘சிறி ‘ என்ற கம்பியூட்டர் மென்பொருள் .

One Comment on “கம்ப்யூட்டரில் பூதம்/நாகேந்திர பாரதி”

Comments are closed.