ஆயுத பூஜை/செல்வி பிரகாஷ்

என்வீட்டு அரிவாளும்,
சுமங்கலியா ஆயிடுச்சி,
குங்குமம் வச்சி கிட்டு
சாமிகிட்ட வந்துடுச்சி.

புத்தகமும் பேனாவும்
பக்கத்திலே வந்திருக்கு
அரிவாளைப்பார்த்து மது
அழுத்தமாய்தானிருக்கு.

கத்தியும் சுத்தியும்
கமுக்கமா படுத்திருக்கக்
கரண்டிக்கும் பொட்டு வச்சி
கடைசியில் போட்டுவச்சேன்

புத்தகம் முனையெல்லாம்
சந்தனம் பூசி வச்சி
சரஸ்வதிய ஒருபக்கம்
சம்மணமா அமரவச்சேன்

சந்தனமும் குங்குமமும்
மணக்கும் வேளையிலே
அடுப்புக்கும் ,துடுப்புக்கும்
சுபமுகூர்த்தம் வந்துடுச்சி.

எல்லாமே சுமங்கலியா
ஆகிவிட்டதென்றறிந்து
அவசரமா பொட்டெடுத்து
நெத்தியில வச்சிகிட்டேன்.

அத்துணை சக்திகளும்
அமைதியாய் வீற்றிருக்க
மாபெரும் சக்தியாகி
அடுப்படியில்ஆடுகிறேன்

உக்கிர தேவதைக்கும்
உறியெலாம் உணவாக
நிக்கிற தேவதையென்
நிலையென்று அறிவாரோ?

பொத்தாம் பொதுவாக
படையல் போட்டுவச்சேன்
புதையல் மனசுக்குள்ள
புழுக்கத்த பதுக்கிவச்சேன்