
என் அம்மா கொலு வைத்ததில்லை. நவராத்திரி சமயமும் மாலை தினம் செய்வதைப் போல பூஜை மேடையில் விளக்கேற்றுவதோடு சரி. பெற்றோர்க்குப் பிறகு என் நவராத்திரியும் அவ்வளவுதான். பணியில் மூழ்கி இருந்த போது நான் எந்த பண்டிகைக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு நான் வசிக்கும் குடியிருப்பில் முதல் நவராத்திரி வந்தது. எல்லோரும் என்னை கொலுவுக்கு அழைத்தார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அழைத்தார்கள். சிலர் பழைய பாணியில் வேலைக்காரியுடன் தன் பெண் குழந்தையை குங்குமச் சிமிழுடன் அனுப்பினார்கள். சிலர் தொலைபேசியில் கூப்பிட்டார்கள். ஒரு சிலர் நான் கீழே வாக்கிங் போய்க் கொண்டிருக்கும் பொழுது பால்கனியில் இருந்து கூப்பிட்டார்கள். ஒரு சிலர் என்னை ஒழுங்காக அழைத்திருந்தவர் வீட்டிற்குள் நுழையும் போது திடீரென அடுத்த வீட்டு வாசலில் உதயமாகி தன் வீட்டுக்குள் வந்து போகுமாறு டீ நகர் துணிக் கடை வாசலில் நிற்கும் வயதான பணியாளரைப் பிடுங்கினார்கள். இதெல்லாம் பரவாயில்லை. அந்த வளாகத்தில் இருந்த எனக்கு மிக நெருக்கமான தோழி ஒருத்தியின் வீட்டிற்கு நான் அடிக்கடிப் போவேன். அவளுடைய பக்கத்து வீட்டில் இருந்தாள் ஒரு வசதி படைத்தவள். அவளுடன் எனக்குப் பழக்கம் கிடையாது. ஏனெனில் சாதாரணமாக என்னை வளாகத்தில் பார்த்தால் தலையை திருப்பிக் கொண்டு கர்வமாக போகும் ரகம் அவள். நவராத்திரி நேரத்தில் நான் என் தோழி வீட்டிற்கு போன ஐந்தாவது நிமிஷம் (நான் எவ்வளவு பதுங்கிப் பதுங்கிப் போனாலும்) அங்கு ஆஜராகி என்னை ‘கிட்னாப்’ செய்யாத குறையாய் இழுத்த்ப் போய் வெற்றிலை பாக்கு, சுண்டல் கொடுத்து உடனே ‘கல்தா’ கொடுக்காத குறையாய் அனுப்பி விடுவாள். அவளுக்கு கொலுத் தீவிரவாதி என்று செல்ல்ப் பெயர் சூட்டினேன்.
எப்படி கூப்பிட்டாலும் போக நான் தயாராக இருந்தேன், கிருஷ்ணர் மாதிரி. இல்லாவிட்டால் பீரோவில் மடிப்பு கலையாமல் படுத்திருக்கும் என்னிடமிருந்த பழைய பட்டுப் புடவைகள் என்னவாகிறது? அத்துடன் எனக்கு கொலு பொம்மைகள் பார்க்கப் பிடிக்கும்.
பட்டுப் புடவையும் என்றைக்கும் அணியாத நெக்லெஸும் அணிந்து முதல் நாள் போனேன். கொலுவை ரசித்தேன். சுண்டல் தொன்னையை வீட்டிற்கு எடுத்துக் கொண்டேன். வெற்றிலைப் பாக்கு பை வாங்கிக் கொண்டேன். இப்படிப் போயின, இரண்டு நாட்கள். மூன்றாவது நாள் ஒரு வீட்டு கொலுவை ரசித்த பின் நான் கிளம்புவதாக சொன்னதும் உள்ளே போன வீட்டுப் பெண்மணிகள் வெகு நேரம் குசுகுசுத்தார்கள். பிறகு எனக்குப் பின் வந்த பெண்மணிகளுக்கு குங்குமச் சிமிழ் நீட்டி வெற்றிலை பாக்குப் பை கொடுத்தார்கள். அவர்கள் போன பின் என் கையில் பழம் ஒன்றை கொடுத்து அசட்டு சிரிப்பை உதிர்த்து நன்றி கூறினார்கள். நான் ஒன்றும் புரியாமல் எழுந்து வந்து விட்டேன்.
மறுநாள் காலையில்தான் ஞானோதயம் பிறந்தது. அதற்கு முன் தினம் நான் வாகிங் போகையில் அந்த வீட்டு பெண்மணி என் கணவர் எங்கே என்று கேட்டதற்கு என் இயல்புபடி நான் மணமுறிவு ஆனவள் எனும் உண்மையை கூறி இருந்தேன். என் நெற்றியில் இருந்த குங்குமத்தை வைத்து அது வரை அவர்கள் என் கணவர் வேறு ஊரில் இருக்கிறார் என்றெண்ணிக் கொண்டிருந்திருப்பார்கள் போலும். இப்போது மணமுறிவு ஆன என்னை விதவையாக நடத்துவதா இல்லை சுமங்கலியாக நடத்துவதா எனும் குழப்பம் பாவம், அவர்களுக்கு . அதன் பிறகு நான் கொலுவுக்குப் போவதில்லை. நவராத்திரி சமயம் மயிலாப்பூர் வீதிகளில் நடந்து அங்கு சாலையோரம் விற்கப்படும் பொம்மைகளை ரசிக்கிறேன்
