
குமரன் என்று பெயர் சுருக்கப்பட்டுத் தெரிந்தவர் மற்றும் தெரியாதவர்களால் கூட அழைக்கப்படும் திருக்குமரன் கணினித் திரையை மிகப்பெரியதாக விரிந்து நின்ற விழிகளுடன் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.திரையில் அவனுக்குப் புரிந்ததெல்லாம் சில கோடுகளும் புள்ளிகளும். ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த அந்தக்கடிதத்தின் மற்ற எழுத்துக்கள் கொசுவாகவும் மின்மினிகளாகவும் கண்களில் பறந்து மறைந்து பின் மறுபடியும் பறந்தது.
எதனால் என்று எப்படி அவனுக்கு இந்த பிரச்சனை ஆரம்பம் ஆனது?
எதனால்…? ஒரே ஒரு சிறிய பொய் ஒன்றைச் சொன்னதால்
என்று……? அவன் இந்த வேலைக்கான நேர்காணலில் பங்கு கொண்டபோது.
எப்படி….? நிறைய பேர் அன்று அந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்கள்.ஆனால் பத்து பேர் மட்டுமே எழுத்து தேர்வில் பங்குபெற்றார்கள்.அதில் மூன்று பேர் மட்டுமே நேரடி தேர்வுக்கு அழைக்கப்பட்டார்கள்.அதில் குமரனும் உண்டு.நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் சரியான பதிலைக் கூறினான்.கூடவே ஒரு பொய்யும் சொன்னான்.
“உனக்கு ஹிந்தி எழுதிப் படிக்க வருமா?”
மத்தியமாகத் தலை அசைத்தான்.அவனுக்கு சுத்தமாக ஒரு அக்க்ஷரம் கூட தெரியாது.ஹிந்தி சினிமாக்களைக்கூட பார்க்கமாட்டான்.
“யூ ஆர் செலெக்டட்”
அந்த பொய் தான் இப்போது பூதாகாரமாய் அவன் முன் நின்றது.
“குமரன், நம்ம முக்கியமான கஸ்டமர். இவருக்கு ஆங்கிலம் தெரியாது.தெரிந்தாலும் அவர் பாஷை மீது அபார பற்று. கடிதங்கள்,கொடேஷன்,கேள்விகள் எல்லாம் ஹிந்தியில்தான்.இதற்குப் பதில் எழுதுவதற்குள் எங்க நாக்கு தள்ளிவிடும்.இப்போ நீ வந்துட்டல்ல.பதிலை டிராப்ட் செஞ்சு எடுத்தா.உனக்கு கடிதத்தை மெயில் பண்ணி இருக்கேன்”
திருக்குமரன் இப்போது திரு திரு என்று விழித்தான்.என்ன செய்வது?பொய் சொன்னது தெரிந்தால் அவ்வளவுதான்.வேலை காலி.ஆனால் சமாளிக்கவும் முடியாதே.இது தினசரி தலைவலியாயில்லை இருக்கும்.
ஏதேதோ பெயர்களை உச்சரித்து அவனைக்காப்பாற்ற வரச்சொல்லி கேட்டுக்கொண்டான்.
திடீரென்று திரையில் புகை மேகம். பின் எழுத்துக்கள் தானாகவே
தோன்றத்தொடங்கியது.
“எதற்குக் கூப்பிட்டாய்?”
குமரன் மறுபடியும் திரு திரு.
“நான்….கூ..ப்ப்பி….ட்ட்…டேனா?”
“ஆமாம்.பூதங்களுக்கு பூதமான என் பெயரை இப்போது தானே உச்சரித்தாய்.”
என்ன நடக்கிறது?பூதமாவது ஒன்றாவது.என்ன செய்யப்போகிறோம் என்ற பயத்தில் மூளை குழம்பிவிட்டதோ?
“சீக்கிரம்…என்ன வேண்டும்.நான் பூதங்களின் தலைவன்.மற்ற பல ஜோலிகள் இருக்கிறது.திரையை தேவுடு காத்தபடி நிற்க முடியாது”
பல நாள் பழகிய நண்பன் போன்ற பூதத்தின் பேச்சு குமரனை சமநிலைப்படுத்தியது.
“நான் என்ன கேட்கப்போகிறேன்.இந்த ஹிந்தியில் எழுதப்பட்ட கடிதத்தின் மொழிபெயர்ப்பு பின் அதற்கு நான் எழுதும் பதிலை ஹிந்தியிலும் எழுதிக்கொடுப்பது”
பூதத்திற்கு ஹிந்தி தெரியுமா?
“இதோ பார்,இதுவரை யாரும் என் பெயர் சொல்லி அழைத்ததில்லை.முதலில் அவ்வாறு கூப்பிட்ட நீ என் எஜமானன் ஆகிறாய்.அதனால் தினமும் காலை ஒரு முறை உன் முன் நான் வருவேன்.அதுவும் இந்த கணினியில் மட்டுமே. அந்த நாளுக்காக நீ விரும்பும் ஏதோ ஒரு தேவையை மட்டும் பூர்த்திசெய்வேன்.” என்று சொல்லியபடி மறைந்தது.
கம்ப்யுடர் திரையில் கடிதத்தின் ஆங்கில நகலும் அதற்கான பதில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலும்.
திருக்குமரன் தன்னைக்கிள்ளிப்பார்த்துக்கொண்டு அனைத்தும் நடந்தவைதான் என்று உறுதிப் படுத்திக்கொண்டான்.அன்றிலிருந்து அவனுக்குச் சுக்கிரதசை.வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே அலுவலகம்.அந்த நாட்களில் அவன் பூதத்திடம் ஹிந்தி மொழிபெயர்ப்பை மட்டுமே கேட்டான்.ஆனால் அவன் சனிக்கிழமையும் வேலை இருப்பதாகக் கூறி செல்லத்தொடங்கினான்.முதல் சனிக்கிழமை அவன் ரொம்ப நாளாக ஆசைப்பட்டுக்கொண்டிருந்த புது மாடல் ஆப்பிள் கைப்பேசி,அடுத்த வாரம் கை செலவுக்கு லட்சத்தில் பணம்,அடுத்த வாரம் அம்மாவிற்கு வைர நெக்லஸ்…..
ஆறு மாதத்தில் அவனுக்கு பூதம் நிறையச் செய்துவிட்டது.
இப்பொழுதெல்லாம் பூதத்தைப் பற்றிய பயம் அல்லது வேலை போய்விடுமோ என்ற பயம் அவனுக்கு வருவதில்லை. அவனுக்குத்தான் அடிமையாக ஒரு பூதம் இருக்கிறதே.அடுத்த வாரம் பயிற்சி காலம் முடிந்து அவன் வேலையில் நிரந்தரமாக்கப்படுவான்.
எதிர்பார்ப்போடு அலுவலகம் சென்றான்.
“குமரன், இந்தா ஹிந்தி கடிதம்.போய் பதிலை ரெடி பண்ணு”
கம்ப்யூடர் திரை மின்னியது.பூதத்தை அழைத்தான்.
வந்தது.
“இன்றும் நீ செய்யவேண்டியது இதை ஆங்கிலமாக்கி பின் அதற்கு நான் எழுதும் பதிலை ஹிந்தியில் மாற்றித்தர வேண்டும்”
திரையில் அவன் காட்டிய கடிதம் மாறாமல் ஹிந்தியிலேயே இருந்தது.
“முட்டாள் பூதமே…நேரம் ஆகிகிட்டே இருக்கு….எங்கே தொலைஞ்சே?”
“இனி நான் உனக்கு உதவமாட்டேன்”
திரையில் வார்த்தைகள் தோன்றின.
சட்டென்று அவனுக்கு கைகால்கள் வியர்க்கத்தொடங்கின.
‘அய்யோ…இன்னும் நிரந்தர பணியாளனாக மாற்றுவதற்கான ஆர்டர் வரவில்லையே?என்ன கேடு இந்த பூதத்திற்கு?”
வார்த்தைகள் தொடர்ந்து ஒளிரத்தொடங்கின.
“ஆறு மாதமாக உனக்கு நான் நிறையக் கொடுத்துவிட்டேன்.ஆனால் இலவசங்களைப்பெற்ற நீ மிகவும் மோசமானவனாகிவிட்டாய். உன் வேலைக்கு ஹிந்தி உனக்குத் தெரிந்திருக்கவேண்டும்.இந்த ஆறுமாதகாலத்தில் நீ அதைப் படித்திருக்கவேண்டும்.ஆனால் அதைச்செய்யவில்லை.சுலபமாகவும் இலவசமாகவும் உன் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதால் உன் வேலையிலும் கவனம் செலுத்துவதில்லை.என்னை விட நீ உயர்ந்துவிட்டவன் போல் என்னைப் பல சொல்லத்தகாத பெயர்கள் சொல்லி அழைக்கிறாய். பட்டால்தான் பூதத்திற்குத் தெரியும் என்று எங்கள் குழுமத்தில் ஒரு சொல் உண்டு.இனி நான் உனக்கு உதவமாட்டேன்”
ஒரு கணம் திடுக்கிட்டான்.இனி பணம்,வேலை இன்னும் இருக்கும் அவனது சில பல ஆசைகள்…?
சரி விடு,ஆறு மாதங்களில் பூதத்திடம் வாங்கிய பணமும் பொருளும் இருக்கிறது.சமாளித்துக்கொள்ளலாம்.
பூதம் தொடர்ந்தது
“அது மட்டுமல்ல..இலவசங்கள் எப்படி ஒருவனைக் கெடுக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.உழைக்காமல் கிடைத்தது என்றும் நிலைக்காது என்பதையும் நீ புரிந்துகொள்ள வேண்டும்.அதனால்…..
திருக்குமரன் கதை இத்தோடு முடிந்தது !!!
