குவிகம் கடைசி பக்கம் – பாகம் 2 – Dr பாஸ்கரன்/இந்திரநீலன் சுரேஷ்

திரு.பாஸ்கரன் அவதாரங்கள் எடுப்பதில் வல்லவர். ஒரு சமயம் ‘மருத்துவராக’ இருப்பார். மறு சமயம் ‘ரஸவாதி (அல்கெமிஸ்ட்)’ ஆக இருப்பார்

கதை எழுதும்போது அவர் ஒரு டாக்டராக, சமூக கோட்பாடுகளின் ஆழத்தை அணுகி அதற்குத் தீர்வு சொல்வார். பாலச்சந்தர் சார் படங்களில் எப்படி ஒரு ‘டைரக்டோரியல் டச்’ இருக்குமோ, அதுபோல இவர் கதைகளில் ஒரு டாக்டர்’ஸ் ‘டச்’ இருக்கும் என்பதை நீங்கள் கவனித்திருக்ககூடும்.

‘கி.ரா’ அவர்கள், தனது ‘கரிசல் காட்டுக் கடிதாசி’ முன்னுரையில், ‘கட்டுரை எழுதுவது என்பது தலையும் நனையாமல், சாத்திரமும் பொய்யாகாமல் குளிப்பதற்கு ஒப்பானது’ என்பார்.

சுருக்கமாகச் சொன்னால் கதையை, ‘கட்டுரை’ போல எழுத முடியாது. கட்டுரையில் வெறும் ‘கதை’ விட முடியாது. Data, தரவுகள் முக்கியம். அதேசமயம் கொஞ்சம் கதையும் சேர்க்காவிட்டால் சோபிக்காது. அளவாக நகைச்சுவையையும் தூவ வேண்டும். சுஜாதா சொல்லுவார் அல்லவா , நகைச்சுவை என்பது ‘பாலேடு’ போன்று இருக்க வேண்டும் என்று ;

ஆக மேற்கூறியவற்றைச் சரியான விகிதத்தில் கலக்கத்தெரிந்த வித்தகர்தான் நம் பாஸ்கரன். அதனால்தான் இவரை ஒரு ‘ரஸவாதி’ என்றேன்.

இந்த கட்டுரை தொகுப்பின் பக்கங்களைப் புரட்டும் போது கிடைத்த சில துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

எழுத்தாளர்களைப் போற்றுவது பாஸ்கரன் அவர்களுக்குப் பிடித்த விஷயம். இந்த தொகுப்பில் பரணிதரன் மற்றும் ரா.கி. ரங்கராஜன் அவர்களைக் கொண்டாடி இருக்கிறார்

இந்த தொகுப்பில் வர்ணனைகளுக்குப் பஞ்சமில்லை, உதாரணமாக;

‘மழை பெய்யும் பொழுது ஓட்டுக் கூரையில் வழிந்து, முற்றத்தின் நான்கு பக்கமும், வெள்ளி கம்பிகளாய் நீர் விழுவது, நீள் மணிகள் கோர்த்த திரை போல இருக்கிறது..’ (மழைத்துளிகள்)

சிறுவயதில் முதன் முதலாக மொட்டை மாடி ஏறிப் பார்க்கிறார் பாஸ்கரன். ‘வானம் கைக்கு அருகில் இருப்பதாகத் தென்படுகிறது. கீழே ஒரு மோர் காரி சென்று கொண்டியிருக்கிறாள். ‘பானை மூடியில் சிந்திய மோரில் சூரியன் பளிச்சிடுகிறது’ என்கிறது அவரின் வர்ணனை வார்த்தைகள் ( ‘எனது இந்த மொட்டை மாடி’)

சிலர் வீட்டு வாசலில் திருஷ்டி பொம்மைகளுக்குப் பதில், முகம் பார்க்கும் கண்ணாடி வாங்கி வைத்திருப்பார்கள். வீட்டுக்கு வருபவர்கள் தன் முகத்தைப் பார்த்தால் பயந்து திருஷ்டி போட மறந்து விடுவார்கள் என்பதால்.. என்று
கண்ணுபடப் போகுதையா.. கட்டுரையில் நகைச்சுவையோடு எழுதுகிறார்

‘கிளினிக் பல்புகள்’ என்ற கட்டுரையில் வரும் ஜோக் ஓன்று..

T A மதுரம், “தல ரொம்ப சுத்துதுங்க..”

அதற்கு N S கிருஷ்ணன், “அப்ப முதுகு தெரியுதா பாரு ?”

‘இசைக்கலைஞர்’களையும் இவர் கட்டுரை போற்றுகிறது . குறிப்பாக அழியும் நிலையில் உள்ள ஜலதரங்கம் மற்றும் அதன் வித்தகர் ஆணையாம் பட்டி கணேசன் அவர்களைப் பற்றிய ஒரு சிறப்பான கட்டுரை இதில் உள்ளது

வெளிநாட்டு விசாவிற்கு காத்திருக்கும் பக்தர்களுக்கு உதவ ‘விசா வெங்கடேசன்’ என்று ஹைதராபாத் அருகிலுள்ள ‘சில்குர் பாலாஜி கோயில்’ இருப்பதுபோல, நம் சென்னைக்கு அருகே ‘விசா ஆஞ்சநேயர்’ திருமழிசையில், உள்ளார் என்பது இந்த தொகுப்பில் கிடைத்த ஒரு கூடுதல் தகவல்

பொறியாளர், 82’வயது பேராசிரியர் S. பசுபதி அவர்களை ‘டொரோண்டோவில் ஒரு இலக்கியச் சுரங்கம்’ மூலம் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் பாஸ்கரன். இந்த ஆர்வலர் ஆற்றிவரும் இலக்கிய தொண்டு மிகவும் சிறப்பானது. கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

ஐந்து வருடங்கள் தொடர்ந்து (குவிகம்) கடைசி பக்கம் எழுதுவது ஒரு சாதனை! அதற்குத் தேவை தகவல் திரட்டுவதற்கான உழைப்பு. அந்த உழைப்பை Dr.பாஸ்கரன் அவர்கள் விதைக்க, நல்ல இலக்கிய மணிகள் விளைந்த வண்ணம் உள்ளன. இந்த புத்தகமும் அந்த வகையைச் சேர்ந்த நல் மணிகளில் ஒன்றுதான்..!