
“மேலே மாடிக்குப் போறேன் “ எனச் சொல்லியபடி செல்வா,காதில் நீலப்பல் கேட்பான், மடிக்கணினி, அறிதிறன்பேசி சகிதம் படியேறினான். செல்வாஇருக்கிற, மலை நடுவே சிறு கிராமமான கூடலூரில், இணையத் தொடர்பு, அலைபேசி இணைப்பு எல்லாம் தடையின்றிக் கிடைக்கிற இடம் அவன் வீட்டு மாடியில் ஒரு மூலை. மாடியின்,அந்த மூலையில், சின்னதாய் கூரை வேய்ந்து , சிறு அறை போல உருவாக்கி , அங்கு அமர்ந்துதான் செல்வாவின் தொலைபேசிப் பேச்சுகள், மெய்நிகர் கூட்டங்கள் எல்லாம்.
அந்த மாடியறையில் அமர்ந்து, செல்வா மின்னஞ்சல் பார்க்கத் துவங்கினான். கணினித் திரையின் வலது ஒரம் ஒரு விளம்பரம் தோன்றி கண்ணைக் கவர்ந்தது.
“ஜீபூம்பா!!!! நீங்கள் கேட்டது கிடைக்கும். இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்யுங்கள், பின் பாருங்கள் மந்திர வித்தையை!!!!”. பட்டிணத்தில்பூதம் சினிமாவில் வரும் பூதம் போல ஒரு வண்ணப் பூதம் கையசைத்து அழைத்தது. சட்டெனத் தோன்றிய ஆர்வத்தில் அந்த இணைப்பைச் சொடக்கினான். பூதம் கையசைக்க, ஒரு கேள்வி திரையில் மின்னியது.
“உங்களுடைய நிறைவேறாத ஆசைகளைச் சொல்லுங்கள், ஜீபூம்பா உடனே நிறைவேற்றும்.” சில நொடிகள் யோசித்து,” மாம்பலம் மாதுவின் ஸ்பெஷல் ஜாங்கிரி சாப்பிட ஆசை” எனத் தட்டச்சினான். இதெல்லாம் சும்மா விளையாட்டாயிருக்கும் என நினைத்து மின்னஞ்சல் பார்க்கத் துவங்கினான்.
கீழேயிருந்து மனைவி குரல் கேட்டது, “ என்னங்க , யாரோ கூரியர் அனுப்பி இருக்காங்க என்னனு வந்து பாருங்க.” செல்வா கீழே இறங்கிப் போனான். கூரியரில் மாம்பலம் மாதுவின் ஸ்பெஷல் ஜாங்கிரி ஒரு கிலோ அழகான டப்பா , பார்த்த உடனே பிரித்துச் சாப்பிடுகிற மாதிரி வந்திருந்தது. செல்வாவால் நம்பவே முடியவில்லை. இது உண்மையா என கிள்ளிப் பார்க்க வேண்டுமெனத் தோன்றியது.
மாடிக்கு வேகமாகப் போய், இரண்டாவது ஆசையைத் தட்டச்சினான்.”சொகுசுக் கப்பலில், சென்னை- இலட்சத் தீவுகள் உல்லாசப் பயணம் 3 நாட்கள் செல்ல வேண்டும்”. ஆர்வமாய் கணினித் திரையைப் பார்த்தபடியிருந்தான். ஏதோ ஜாங்கிரி வேணா வரும் , இதெல்லாமே கனவோ எனக் கூட தோன்ற ஆரம்பித்தது செல்வாவுக்கு. மீண்டும் மின்னஞ்சல், இணையதள மேய்ச்சல் என இணையத்தில் சுற்றத் தொடங்கினான்.
மீண்டும் மனைவியின் குரல் கீழிருந்து,” இன்னொரு கூரியர் வந்திருக்கு . இன்னிக்கி என்ன ஒரே கூரியர்மயமாயிருக்கு. மேலே உட்கார்ந்துகிட்டு, இப்படி ஏதாவது கச்சா மூச்சான்னு ஆர்டர் பண்ணிக்கிட்டு திரியறீங்களா/”
கீழே வந்து பார்த்தான். அவன் கண்ணை அவனே நம்ப முடியாதபடி, கூரியரில் 3 நாட்கள் உல்லாசக் கப்பலில் சென்னை- இலட்சத் தீவுகள் பயணத்திற்கான 2 டிக்கட்டுகள் வந்திருந்தன. செல்வா மயக்கம் போட்டு விழாத குறையாய் சுவரில் சாய்ந்து நின்று கொண்டான் . மனைவியிடம் சொல்லக்கூட தயக்கமாய் இருந்தது. அவள் நம்புவாளோ எனச் சந்தேகமாயிருந்தது.
ஜீபூம்பா செயலியின் தலைமை அலுவலக அறையில் கணேஷ் உற்சாகமாயிருந்தான். அவர்கள் செயலி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது குறித்து மகிழ்வாயிருந்தது. சமூக வலைத்தளங்களில் தேடி , ஒருவரின் வாழ்வு பற்றிய எல்லாத் தரவுகளையும் அலசி ஆராய்ந்து, தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு முதலில் ஜீபூம்பா பற்றிய விளம்பரத் தூண்டில். அதனை நம்பத் தொடங்கியபின்,அனுப்ப வேண்டிய அடுத்த செயலி, தரவுகள் , இவற்றை தயார் செய்யத் தொடங்கினான்.

நண்பா…
வடிவேல் காமடி…நினைவு.
என்னைய வச்சு காமடி கீமடி பண்ணலயே…
நண்பா நடை மிக மிக அருமை.
ஊர் மட்டும் ஆடலூர் என்று இருந்தால் இன்னும் இரண்டற க்கலந்திருப்பேன்.