விருட்சம் நினைவுகள் 2

27.04.2018 – சனிக்கிழமை

அழகியசிங்கர்

     1981 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ‘கவனம்’ என்ற சிற்றேடு வெளிவந்தது.  இதன் ஆசிரியர் ஞானக்கூத்தன்.  திருவல்லிக்கேணியிலிருந்து வெளிவந்த பத்திரிகை இது.  இப் பத்திரிகை குறித்து ‘கணையாழி’ இதழில் அறிவிப்பு வந்தது.  இந்த அறிவிப்பைப் பார்த்தவுடன் நான் மேற்கு மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணிக்கு பஸ்ஸில் சென்று இப் பத்திரிகையை வாங்கினேன்.

       கவனம் இதழை நான் வழக்கமாகச் சென்று கொண்டிருக்கும் மின்சார வண்டியில் படித்துக்கொண்டு வந்தேன்.  அப்போது ஷங்கரலிங்கம் என்ற கவிஞர் என் எதிரில் அமர்ந்திருந்தார்.  அவர் கேட்டார் : “என்ன பத்திரிகை இது?” என்று.

            “கவனம் என்ற பத்திரிகை.  ஞானக்கூத்தன் ஆசிரியர்,” என்றேன்.

  ஷங்கரலிங்கம் அந்தப் பத்திரிகையைப் பார்க்கக் கேட்டார்.  கொடுத்தேன்.

            ஒரு சிறுபத்திரிகையை இன்னொரு சிறுபத்திரிகையை வாசிக்கும் வாசகர்தான் அறிவார். 

            “உங்களுக்கு பிரமிளை தெரியுமா?” என்று கேட்டார்.

            “கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஆனால் தெரியாது..அவர்தான் வெங்கட் சாமிநாதனுடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பாரே,” என்றேன். 

“அவர் என்னைப் பார்க்க வருவார்.. உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்,” என்றார்.  அவரிடம் என் அலுவலக முகவரியைக் கொடுத்தேன்.

     ‘கவனம்’ என்ற பத்திரிகைதான் எனக்கு பிரமிள் என்ற படைப்பாளியை அறிமுகப்படுத்தியது.  

            பிரமிள் என் அலுவலகத்தில் என்னைப் பார்க்க வந்தபோது, ‘மேல் நோக்கிய பயணம்,’ என்ற அவருடைய கவிதைப் புத்தகத்தை வாங்கிக்கொள்ள முடியுமா என்று கேட்டார்.      வாங்கிக்கொண்டேன்.

 பின் சில தினங்கள் கழித்து வந்தார்.  இந்த முறை ஷங்கரலிங்கத்துடன் வரவில்லை.  அதன்பிறகு இந்த ஷங்கரலிங்கத்தையே நான் பார்க்கவில்லை.

            “என் கவிதைகளைப் படித்தீரா?” என்று பிரமிள் கேட்டார்.

            ‘மேல் நோக்கிய பயணம்’ என்ற அந்தக் கவிதைத் தொகுதியில் மேல் நோக்கிய பயணம் என்ற கவிதை ஒரு நீண்ட கவிதை.  

     அந்த நீண்ட கவிதைû எத்தனை முறை படித்தாலும் என் மனதில் ஏறவில்லை.  ஆனால் இன்னொரு கவிதை எனக்குப் பிடித்திருந்தது.

            அந்தக் கவிதையின் பெயர், வண்ணத்துப் பூச்சியும் கடலும்.

            அந்தக் கவிதையை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

            சமுத்திரக் கரையில்

            தேன் குடிக்க அலைந்தது ஒரு

            வண்ணத்துப் பூச்சி

            வேளை சரிய

            சிறகின் திசை மீறி

            காற்றும் புரண்டோட

            கரையோர மலர்களை நீத்து

            கடல் நோக்கிப் பறந்து

            நாளிரவு பாராமல்

            ஓயாது மலர்கின்ற

            எல்லையற்ற மலர்கின்ற

            எல்லையற்ற பூ ஒன்றில்

            ஓய்ந்து அமர்ந்தது

            முதல் கணம் 

            உவர்த்த சமுத்திரம்

            தேனாய் இனிக்கிறது

            பிரமிளிடம் இந்தக் கவிதை இந்தத் தொகுதியில் எனக்குப் புரிகிறது என்றேன்.  அதைக் கேட்டு அவருக்கு ஆச்சரியம்.  “டேவிட் இந்தக் கவிதை புரியவில்லை என்று சொன்னார்,” என்றார். 

            “எனக்கு நீண்ட கவிதைதான் புரியவில்லை,” என்றேன்.

            “அவருக்கு அதுதான் புரிகிறது,” என்றார் பிரமிள்.

      பிரமிளுடன் எனக்கு இப்படித்தான் நட்பு ஏற்பட்டது.  அடிக்கடி அவரைச் சந்திப்பதும் பேசுவதுமாக இருந்தது.

           என் நண்பர் கவிஞர்  எஸ் வைத்தியநாதன்.  அவர் மயிலாப்பூரில் இப்போதும் குடி இருக்கிறார்.  அவர்தான் முதல் முறையாக இலக்கியச் சந்திப்பு ஆண்டுதோறும் நடக்கும் கூட்டத்தில் என்னை ஞானக்கூத்தன், ஆனந்த், ரா ஸ்ரீனிவாஸன், ராம் மோஹனுக்கு அறிமுகப்படுத்தினார்.  அப்போது நான் ஆத்மாநாமை சந்தித்ததில்லை.  அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன்.  அவருடைய நண்பர்கள் ரகசியமாக அவருக்கு உடம்பு சரியில்லை என்று குறிப்பிட்டார்கள்.  

      ஞானக்கூத்தன் அவருடைய நண்பர்களை வைத்தியநாதனுடன் கடற்கரையில் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பேன்.  நாங்கள் எல்லோரும் சேர்ந்து அமர்ந்துகொண்டு தமிழ் இலக்கியச் சூழலைப் பற்றிப் பேசுவோம்.  

            அந்த நண்பர்களில் சிலருக்கு நான் பிரமிளுடன் பழகுவது தெரியும்.  “அவருடன் ஜாக்கிரதையாகப் பழகுங்கள்,” என்று எச்சரிக்கைச் செய்வார்கள்.  ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருப்பேன்.

            அதனால் நான் பிரமிளை சந்திப்பதைப் பற்றி அவர்களிடம் பேச மாட்டேன்.  அது தேவையில்லாத வம்பை விலைக்கு வாங்குவதாகத் தோன்றும்.  உண்மையில் பிரமிளை நான் சனிக்கிழமை அன்று, ஜே கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷனில் சந்திப்பேன்.  அங்கு ஜே கேயின் காணொளியை நாங்கள் பார்த்துக்கொண்டிருப்போம்.

  ஞாயிற்றுக்கிழமை கடற்கரையில் ஞானக்கூத்தன் அவர் நண்பர்களையும் சந்திப்பேன்.  எனக்கு நல்ல பொழுதுபோக்காகத்தான் இது தோன்றியது.  ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கிறேன்.  அந்தத் தருணங்களில் நாங்கள் எல்லோரும் என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதை.  ஒன்று கூட என் கவனத்தில் வரவில்லை.

                                                                          (இன்னும் வரும்)