ராஜம் கிருஷ்ணன் என்ற எழுத்தாளரின் நினைவு நாள்


ஆசிரியரின் குறிப்பு 

2014 ஆம் ஆண்டு தன் 90வயது மரணம் அடைந்த ராஜம் கிருஷ்ணன் அவர்களின் நினைவுநாள் இன்று.  அவருடைய நினைவை ஞாபகப்படுத்தும் விதமாக க்ருஷாங்கினி எழுதிய கட்டுரையை விருட்சம் நாளிதழில் வெளிப்படுத்துகிறேன்.

ராஜம் கிருஷ்ணன்

க்ருஷாங்கினி

நாலு கிரவுண்டில் வீடு, தோட்டத்துடன். சுற்றிலும் மரங்கள். எல்லாமே ராஜம் கிருஷ்ணன் தன் கையால் வைத்து வளர்த்தவை. வீட்டைச் சுற்றி மரங்கள். மரங்களை தொட்டுத்தொட்டு அந்தந்த மரத்தின் வகை அது வைத்த காலம் என்று மனம் மகிழ்ந்து விளக்குவார்.

 கணவர் கிருஷ்ணனின் மறைவிற்குப் பிறகு அவர் மிகவும் தனிமையை உணர்ந்தார். வீடும் விற்கப்பட்டது.

 ராஜம் கிருஷ்ணன் கிழக்கு தாம்பரத்தில் இருந்த போதில் இருந்து அவருடைய இறுதிக்காலம் வரை அவரை அடிக்கடி சென்று சந்தித்திருக்கிறேன்.  மந்தைவெளி, திருவான்மியூர், முதியோர் இல்லம், ராமச்சந்திரா மருத்துவமனை என்று. வீடு விற்ற பணத்தை உறவினர் ஒருவரின் ஜாயிண்ட் அக்கவுண்டில் இட்டிருந்தார், தனக்கென குழந்தைகள் இல்லாததால். திருவான்மியூர் வீட்டிலிருந்து உறவினர் வீடு சென்று அங்கேயே விழுந்து விட்டார். அங்கிருந்து மருத்துவமனை மற்றும் பிற இடங்கள். இறுதிவரை அவர் அந்த சூழலுக்குஅவர் வீடு என்ற சூழலுக்குத் திரும்பி வரவே முடியாமல் போயிற்று.

 வீட்டில் முதியவர்கள் நிராகரிக்கப்படும் போது அந்த மனதின் வேதனையை பலரும் உணர்ந்திருப்பார்கள். ஆனால் ராஜம் கிருஷ்ணனுக்கு நிராகரிக்கக் கூட யாருமில்லை. வீடும் இல்லாமல் போயிற்று. அந்தப் பணம் முழுவதும் இல்லாமல் போயிற்று. முதியோர் இல்லம் செல்ல நேர்ந்தது. பண இழப்பு உடல் உபாதை எல்லாமாக அவரை மன அழுத்தத்தில் கொண்டு போய் விட்டு விட்டது

 நிறைய நண்பர்களும், அவருடைய வாசகர்களும் எப்போதும் அவரை பார்க்க வந்த வண்ணம் இருப்பார்கள்.  அங்கிருக்கும் டாக்டர்கள் அனைவரும் பாட்டி, பாட்டி என அன்பாகப் பேசி கவனித்துக்கொள்வார்கள். ராஜம்கிருஷ்ணனைப் பார்க்க விரும்பும் பலரையும் நான் கூட்டிக் கொண்டு சென்றிருக்கிறேன்.  எல்லோரிடமும் தன்னைப் பார்க்க யாருமே வருவதில்லை என்று அழுவார். நிலைமையைப் புரிந்த பார்வையாளர்களும் எந்த மறுப்பும் சொல்ல மாட்டார்கள்.

ராஜம் கிருஷ்ணனுக்கு கண்புரை அறுவை சிகிச்சை நடந்த போது ஆப்பரேஷன் தியேட்டர் அருகில் இறையன்பு நின்றிருந்தார். நானும் சென்றிருந்தேன். இருவருமாகக் காத்திருந்தோம்.

ஒருமுறை லதா ராமகிருஷ்ணன் புத்தக கண்காட்சியில் ஒரு ஸ்டாலில் இருந்தார். அவர் என்னை கண்டதும், ‘ராஜம்கிருஷ்ணனைப் பார்க்க வேண்டும் என்று ஒருவர் விரும்புகிறார்என்று சொன்னார். ‘ அவருடைய வீட்டிற்குச் சென்று இருக்கிறார். அவர் அங்கு இல்லை. புத்தகக் கண்காட்சிக்குச் சென்றால் விஷயம் தெரியும் என்று இங்கு வந்திருக்கிறார்.  ஆனால் அங்கு யாருக்கும்  ராஜம் கிருஷ்ணன் இருக்குமிடம் தெரியவில்லை. இப்போதுதான் அவர் அந்த ஸ்டாலைக் கடந்து சென்றார்என்றும் லதா தெரிவித்தார்.

நான் உடனடியாக நடந்து சென்று அவரைக் கண்டுபிடித்து விட்டேன். அவர், அவருடைய நண்பர் இருவரும் ஜப்பானில் இருந்து வந்திருக்கின்றனர். ராஜம் கிருஷ்ணன்  நாவலை ஜப்பான் மொழியில் மொழி பெயர்த்தவர், அவர். அங்கு அது  நிறைய வாசகர்களை சென்றடைந்திருக்கிறது.  மறுநாள் நான் தாம்பரத்தில் இருந்து நேராக போரூர் ராமச்சந்திரா வந்து விடுவதாகவும், முதலில் சென்று நான் காத்திருப்பதாகவும் சொல்லி விட்டு, மறுநாள்  சென்றேன்.  அவர்களும் அங்கு வந்து விட்டனர் இருவரும் ராஜம் கிருஷ்ணனைச் சந்தித்தனர்.  இருவருக்கும் மிக்க மகிழ்ச்சி.  ராஜம் கிருஷ்ணனும் தனது நிகழ்கால நிலையை மறந்து மிகவும் மகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.   ஆண்டுகள் பல கடந்த பிறகான சந்திப்பு அது,  ராஜம்கிருஷ்ணன் எழுத்தின் மீது மிகுந்த பற்றும் மதிப்பும் வைத்திருந்தனர் அவர்கள்.

திடீரென ஏற்பட்ட இழப்புகள் உடல் உபாதைகள் ராஜம் கிருஷ்ணனின் மனதை பாதித்ததை முன்னமே குறிப்பிட்டிருந்தேன்அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்க முயற்சிகள் எடுத்தவர் திலகவதிஅவர் இன்னும் பல உதவிகள் செய்திருக்கிறார். அவருடைய எழுத்துகளை நாட்டுடமை யாக்கவும் பலர் முயற்சி செய்தனர், கனிமொழி உட்பட.

போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில்  மகளிர் தினத்தன்று பேசுவார், ராஜம் கிருஷ்ணன். பலர் ராஜம் கிருஷ்ணனுக்கு உதவி செய்திருக்கின்றனர் அவருடைய எழுத்தின் மீதான  பற்றாளர்கள் அவர்கள். ஜெயக்குமாரும் அவர் மனைவியும் வெளியில் தெரியாமல் பலதும் செய்திருக்கின்றனர் டாக்டர் மல்லிகேசனையும் இங்கு சொல்லவேண்டும்

பணமும் இழந்து, உடல் வலுவும் இழந்து, மன அழுத்தத்திற்கு ஆளான போது இயல்பாகவே மனிதனுக்குள் எழும் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் அவருக்கும் அடிக்கடி எழுந்ததுநிறைய முதியவர்கள் தூக்கத்திற்கு மாத்திரையை நாட வேண்டியிருக்கும்.   ஆனால், இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி முதியோர் இல்லத்தில் நடந்துவிட்டால் அது மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும். விசாரணை, நடவடிக்கை என்று வேண்டாத தலைவலிகள் வரும்.   நல்ல வேளை, அப்படி ஏதும் நேரவில்லை. இதை நான் மிகுந்த தயக்கத்துடன் எழுதுகிறேன். சொல்லலாமா வேண்டாமா என்று பலமுறை யோசித்திருக்கிறேன்,  நான்.

இங்கு ஒன்றை குறிப்பிட வேண்டும் கண்டிப்பாக.   கலைந்த தலையுடன் ஒரு நைட்டியிலும் ராஜம் கிருஷ்ணனின் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு யாசிப்பவரின் தோற்றத்தை கொடுத்தன ஊடகங்கள்.  அப்படியான நிலை ஏதும் இல்லை ராஜம் கிருஷ்ணனுக்கு. அவருடைய கணவர் என்ஜினீயர்.  அரசு பணியாளர். அவருடைய மறைவுக்குப் பின் ராஜம் கிருஷ்ணனுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் குடும்ப ஓய்வூதியமாக வந்தது.  மேலும் அவருடைய வாசகர்கள் அவரை எந்த செலவும் செய்ய விடவில்லை. நிறைய போஷகர்கள், அன்பர்கள்.

தன் கணவருக்கு எந்த விதமான சடங்கும் செய்யவில்லை ராஜம் கிருஷ்ணன்.  இறந்த அன்று வந்திருந்த உறவினர்களின் ஏற்பாட்டினால் சம்ப்ரதாயமாக தகனம் நடந்தது.  அதன் பிறகு சம்பிரதாயங்கள் எதுவும் அவர் செய்யவில்லை.  அவருக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் ராஜம் கிருஷ்ணன் இறந்தபோது தன் உடலை அந்த மருத்துவமனைக்கு வழங்கிவிட்டார். முதலிலேயே எழுதிக் கொடுத்திருந்தார். எந்த சம்பிரதாயமும் கிடையாதுஅவருடைய படைப்புகளை நாட்டுடமை  ஆக்கியதற்காக வந்த பணத்தையும் அவர் போரூர் ராமச்சந்திரா  மருத்துவ மனைக்குக் கொடுத்துவிட்டார்.

சாகித்ய அகாடமி பரிசு அவருக்கு வந்த போது ஒரு பெண் என்பதற்காக அளிக்கப்பட்டதாக சொன்னார்கள்.  அப்போது அவர், ‘அப்படி வெறும் பெண் என்று பரிதாபப்பட்டு கொடுக்கும் பரிசு எனக்கு வேண்டாம். என் படைப்பு  தகுதியானதாக இருந்து கொடுப்பதானால் வாங்கிக் கொள்வேன்என்று சொல்லிவிட்டார்பெண்  என்பதற்காக பிச்சை ஏற்பார்களா என்ன என்று கேட்டார் என்னிடம்.

க்ருஷாங்கினி

nagarajan63@gmail.com

2 Comments on “ராஜம் கிருஷ்ணன் என்ற எழுத்தாளரின் நினைவு நாள்”

Comments are closed.