ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கவிதை /பிரமிள்

                  அவன் 

அவன் என்னை நோக்கி நடந்தான்
நான் அசைவற்று நின்றேன்

என் இதயமும் உயிரும்
உரம் பெற்றன

ஒரு திடீர் மௌனத்துடன்
மரங்களும் பறவைகளும் கவனித்தன
ஆகாயத்தில் இடியோசை முழங்கிற்று
பின்பு, பூரண அமைதி

அவன் என்னை நோக்கக் கண்டேன்
எனது பார்வை எல்லையற்று விரிந்து
எனது கண்கள் கண்டன
மனம் புரிந்து கொண்டது இதயம் விரிந்து
எல்லாவற்றையும் தழுவிற்று.

ஏனெனில் அப்போதே
பிறந்துவிட்டது ஓர்
புதிய அன்பு

எனது ஆகிருதி முழுவதும்
ஒரு புது மகத்துவத்தில் சிலிர்த்தன

ஏனெனில் என்முன் அவன் செல்ல
தலைநிமிர்ந்து நான் தொடர்ந்தேன்

அவனூடே நான் கண்ட நெடுமரங்கள்
மெல்ல அசைந்து வரவேற்றன

சருகுகள், சேறு, ஜ்வலிக்கும் நீர் அபோத நிலையில் வம்பளந்தபடி
அவனூடே நடந்தனர் கிராமவாசிகள்

என்னை நோக்கிக் குரைத்தபடி
நாய்கள் பாய்ந்து வந்தன அவனூடே

ஒரு பாசறை வீடு
அற்புத மாளிகையாகிறது

அதன் சிவப்புக் கூரை அஸ்தமிக்கும் சூரியனுடன்
உருகி லயிக்கிறது

தோட்டம்
தேவதைகளின் பிரதேசமாயிற்றே
மலர்கள்
தேவதைகளாயின

மங்கும் மாலைவானுக்கெதிரே
வெளிக்கோட்டுருவமாக நிற்கையில்
அவனது
காலாதீத மகத்துவத்தைக் கண்டேன்

சிறிய ஒடுங்கிய பாதையில் அவன்
நான் தொடர்வதைப் பார்த்தபடி
என்முன் நடந்தான்

எனது அறை வாசலில் அவன் நிற்க
அவனூடே சென்றேன்

பரிசுத்தராகி, இதயத்தில் ஓர்
புதிய பாடல் கொண்ட அதேநிலை

எப்போதுமே அவன்
என்முன் உள்ளனன்
எங்கு நான் நோக்கினும்
அங்கெல்லாம் அவன்

அவனது மகத்துவம்
என்னுள் நிரம்பி
நானறியா மகத்துவத்தை விழிப்படைய வைக்கிறது

எனது பார்வை
ஒரு முடிவற்ற சாந்தம்

எல்லாவற்றுக்கும்
மகத்துவம் கிட்டுக

எப்போதும்
அவன் என்முன்.

(‘The Immortal Friend’, Part IV – 1928)

(முக நூலில் கால சுப்பிரமணியன்)