
இந்த முக்கிய தினங்கள் கொண்டாடுவது என்பதெல்லாம் மேற்கத்திய கலாசாரம். அதுவும் பெண் குழந்தைகளைக் கொண்டாடுவது என்பது நம் பாரத தேசத்துக்கு கை வந்த கலை.
வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறந்து விட்டாலே மஹாலஷ்மி பிறந்திருக்கா என்று அவளை தெய்வமாகக் கொண்டாடிய
(கவனியுங்கள்”கொண்டாடிய”) நாடு இது.
நடுவில் எங்கே தொலைத்தோம் அந்த நல்ல குணத்தை என்று தெரியவில்லை. பெண்களை அடிமைப் படுத்தி, துன்பப் படுத்தி,கஷ்டப்படுத்தி,விரக்தி அடையச் செய்து, பெண்ணாய்ப் பிறப்பதே பாவம் என்று வெறுக்கிற மன நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.
பெண் குழந்தையே வேண்டாம் என்று பயப்படும் அளவிற்கு நிலைமை மாறிப் போனதன் பலனை இப்போது அனுபவிக்கிறோம். திருமண மார்கெட்டில் வரன் தேடினால், பெண் வரன் கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது. பெண்கள் குறைந்தும் விட்டார்கள், அவர்களுக்கு திருமணத்தின் மேல் இருந்த நம்பிக்கையும் குறைந்து வருகிறது.
அளவுக்கு மீறி ஒடுக்கப் பட்டதால் , இப்போது அழுத்தப்பட்ட பந்து போல் மேலெழும்பி பல உச்சங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறார்கள் பல பெண்கள்.இருந்தாலும் இந்த சமூகம் அவர்களுக்குத் தரும் இன்னல்கள் முற்றிலும் குறைந்தபாடில்லை.
பாரத தேசத்தின் வரலாற்றை, அ ந்நிய ஆதிக்கங்கள் நம் நாட்டில் ஊடுருவிய காலத்திற்கு முன், திரும்பிப் பாருங்கள்.எப்பேற்பட்ட பெண்கள் இருந்திருக்கிறார்கள் நம் நாட்டில். வரலாறு படைத்திருக்கிறார்கள்,சாதித்திருக்கிறார்கள். ஏன், சுதந்திரப் போராட்ட காலம் வரை கூட எத்தனை பெண்கள் அரசியலில் இருந்து சமூக மாற்றங்கள் வரை எவ்வளவோ பாடு பட்டிருக்கிறார்கள்.இவற்றைப் பட்டியலிடுவது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல.
உலக பெண் குழந்தைகள் தினமான இன்று பெண்களைக் கொண்டாடிக் கொண்டிருந்த நாடு நம் நாடு என்பதைப் புரிந்து கொள்வோம். இன்றைய பெண் குழந்தைகள் அறிவாளிகள்.தெளிவானவர்கள். அவர்களை உற்சாகப் படுத்துவோம். உடன் இருந்து உதவிகள் செய்வோம். வழி நடத்துவோம். வாழ்த்துவோம்.
பெண்குழந்தைகளைப் பெருமைப் படுத்துவோம்.பெண்களைப் போற்றுவோம்.
