கவிஞர் பிரமிள் அவர்களின் பேட்டி:

மீறல் : பிரமிள் பேட்டி

பேட்டி கண்டவர் : கால சுப்ரமணியம்

கால சுப்ரமணியம் :

சம்பிரதாயமான ஒரு கேள்வியுடன் ஆரம்பிக்கலாமா? உங்களின் எழுத்தியக்கத்தின் ‘ரிஷி மூலங்கள்’ என்ன?

பிரமிள் :

நதிமூலம் ரிஷிமூலம் கேட்கக் கூடாது என்பார்கள். ஏனென்றால், அவை ரொம்பவும் எளிமையாக இருந்து விடலாம். பிரம்மாண்டமான கங்கையின் நதிமூலமான கங்கோத்ரியில் ஒரு சொட்டு நீர்தான் அவ்வப்போது ஜனிக்கிறது. இதை ஞாபகத்தில் வைத்து என் பதிலைப் பார்க்க வேண்டும்.

என் தாயாரின் மூதாதைகளிடையே அநேக கவிகள் இருந்திருக்கின்றனர். தாயார் கூட, எழுதப் படிக்கத் தெரிந்திருக்காவிட்டாலும் நுட்பமான ரசனையும் கவியுணர்வும் கொண்டவர். அவர் பேசும்போதும் சரி சண்டையிடும் போதும் சரி, சில வேளைகளில் அவர் சொல்கிறவை அசாதாரணமாக இருக்கும். இயற்கை, செடிகள், பிராணிகள் மீது அவருக்கிருந்த வாஞ்சைகூட ஒரு கவியுள்ளத்தினைத்தான் காட்டுகிறது. கடுமையான வறுமை, என் ஐந்து வயதிலிருந்து அவ்வப்போது தகப்பனாரால் கைவிடப்பட்ட நிலை, அயலகத்துப் பூசகர்களின் நிலப்பறிப்புகள், நாளாந்த வன்முறைகளுக்கு இலக்காக்கும் சூழல் – இவை யாவற்றினூடேயும் என் தாயாரின் இந்த ஆழ்ந்த குணாதிசயங்கள் என்னைச் சூழ்ந்து நீடித்திருக்கின்றன. தகப்பனார் கோணத்திலிருந்து இத்தகைய ஆழங்கள் எதுவும் கிடைத்ததில்லை. அவரால் மிகவும் வருத்தப்பட்ட என் தாயின் நிராதரவு தான் என் உணர்வுலகத்தினை நெய்திருக்கிறது என்றும், நிராதரவாக நிற்கும் சீரிய மதிப்பீடுகளைப் பாதுகாக்கமுனையும் என் எழுத்தியக்கத்துக்கு இது ஒரு மனோதத்துவ ரிஷிமூலம் ஆகலாம் என்றும் தோன்றுகிறது.

கால சுப்ரமணியம் :

மிகவும் ஆழமும் கருத்துச் செறிவும் கொண்ட கவிதைகளை எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் கவிதை எழுதும்படி தூண்டிய ஆரம்ப உந்துதல்கள் எவை ?

பிரமிள் :

உயர்நிலைப்பள்ளியில் எனக்கு வயது சுமார் பதினைந்து இருக்கும்போது தமிழாசிரியர் பெ.பொ.சிவசேகரம், எங்கள் கிளாஸிற்கு விசித்திரமான ‘ஹோம் ஒர்க்’ ஒன்று கொடுத்தார். அப்போது பிரபலமாக இருந்த குழந்தைக் கவிஞர் ‘அழ.வள்ளியப்பா’ எழுதிய ‘பூந்தோட்டம்’ என்ற கவிதையைப் படித்து ரசித்துக் காட்டினார்.பெ.பொ.சிவசேகரம், ‘திருக்கோணமலைக் கவிராயர்’ என்ற பெயரில் கவிதைகள் எழுதியவர் என்பதை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும்; மரபுப் பாடலில்தான். ‘பூந்தோட்டம்’, குழந்தைகளுக்கான மரபுப் பாடல் – இதேபோல் எங்கள் ராமகிருஷ்ண மிஷன் ஸ்கூலுக்கு எதிரில் இருந்த பெரிய மைதானத்தைப் பற்றி ஒவ்வொருவரும் கவிதைகள் எழுதி வர வேண்டும் என்பது ‘ஹோம் ஒர்க்’. இதை நான் எளிதாக நிறைவேற்றியதுடன், ஒரு வரியும் எழுதவராமல் தவித்த வேறு சில நண்பர்களுக்கும் தனியாக எழுதித்தந்து, தங்கள் கவிதைகளாக ஆசிரியரிடம் தரும்படி கொடுத்திருக்கிறேன். (இவர்களுள் இப்போது சி.சிவசேகரம் என்ற பெயரில் நீங்கள் காணக்கூடிய அன்பர் அடங்கவில்லை – அதே கிளாஸில் அவர் இருந்தார் எனினும்.) ‘விளையாட்டு மைதானம்’ என்ற இந்தக் கவிதை தான் முதன்முதலில் நான் எழுதியது. அதுவரை, இயற்கையாகவே நான் ஓவியத்திறன் கொண்டவன் என்பதுதான் என் கணிப்பு. இந்தக் கவிதையுடன், என் புதியதிறன் ஒன்றை நானே கண்டுபிடித்திருக்கிறேன். கவிதையின் எதுகை மோனைச் சொற்களை முதலிலே தீர்மானித்துவிட்டு இட்டு நிரப்பும் நண்பர் ஒருவரும் கிளாஸில் இருந்தார். அவருக்கு நான் எழுதும் இயல்பான முறை வராததால், என்னை ஒரு விசித்திரப் பிறவியாக எடுத்துக்கொள்வார். ஹோம் ஒர்க்கை படித்த பெ.பொ.சிவசேகரம், தமது கிளாஸில் குட்டி பூதங்கள் நிரம்பியிருப்பதாக கிளாஸிலேயே சொன்னபோது, என்னிடம் கவிதை வாங்கி ஹோம் ஒர்க் பண்ணினவர்கள் என்ன நினைத்தார்களோ? அவர்களுக்குத் தலைவலி தீர்ந்தது, எனக்கு பிரசவ வேதனைகள் ஆரம்பித்தன எனலாம். நாலைந்து வருஷங்களுக்குள் எழுத்துவில், 1960-இல் என் கட்டுரை வந்தபோது என் சீனியர் மாணவர்கள் அதை நான் எழுதியிருக்க முடியாது என்று பெ.பொ.சிவசேகரத்திடம் கூறியதும், அவர் அதை மறுத்து, “எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்கோ?” என்றதும் என் காதுக்கு வந்திருக்கின்றன. இந்த ஆரம்பம் எனது கவிதையின் வடிவம் சம்பந்தப்பட்ட மட்டுக்குத்தான். அநுபவத்தின் ஆழமும் வாழ்வைப் பற்றிய விசாரணைகளுமாக என் கவிதைகள் பொருள் ரீதியான மலர்ச்சிபெற மேலும் ஐந்து ஆண்டுகள் ஆயின. அதுவரை என் ஆரம்பகால எழுத்துகளில் மரபின் பிரதிபலிப்புகள் தான் அதிகம். இருந்தும் அதில்கூட ஒருவித புதுமைத்தொனி இருந்திருக்கிறது. துரதிருஷ்டவசமாக அந்தக் காலகட்டத்துக் கவிதைகளை நான் பாதுகாக்கவில்லை.

கால சுப்ரமணியம் :

உங்களுடைய படைப்பு மனோநிலை பற்றிக் கூற முடியுமா? படைக்கும்போது உங்கள் மனநிலை என்ன ?

பிரமிள் :

படைக்கும் போது ஒரு ஒழுங்கமைப்பை நிறைவேற்றும் நோக்கம்தான் என்னால் உணரக்கூடிய என் மனோநிலை. கூடவே சிருஷ்டிகரமான ஆழ்ந்த கருத்துக்கள் தோன்றும் நிலை. இதுதான் படைப்பியக்கத்தின் முக்கியமான களம். ஆனால் இப்படி கருத்துகள் பளீரெனப் பிறக்கும்போது என் மனநிலை என் அவதானத்துக்கு உட்படுவதில்லை. மீண்டும், இவ்விதம் தோன்றுகிற கருத்துகளை ஒரு ஒருமைப்பாட்டுக்குள் ஒழுங்கமைக்கும் இயக்கமாக மனம் செயல்படும். இதெல்லாம் திருப்திகரமாக நிறைவேறிவிட்டால், முடிவாக ஒருவிதமான சுதந்திர உணர்வு பிறக்கிறது.

One Comment on “கவிஞர் பிரமிள் அவர்களின் பேட்டி:”

  1. பிரமிள் அவர்களுடன் எழுத்தாளர் கால.சுப்ரமணியம் அவர்கள் கண்ட நேர்காணலை முழுமையாகப் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Comments are closed.