எது கவிதை?/யாங் வான் லீ


இப்போது,
கவிதை என்றால் என்ன?
அது வெறும் வார்த்தைகளின் விவகாரம்
என்று நீங்கள் சொல்வீர்களானால் ,
ஒரு நல்ல கவிஞன் சொற்களினின்றும் விடுபட்டவனாகவே இருப்பான்
என்று நான் கூறுவேன்.
அது வெறுமனே அர்த்தங்கள் சம்மந்தபட்ட விஷயம் என்று
விளக்கம் தருவீர்களென்றால், அர்த்தங்களிலிருந்தும் அவ்வளவாக விலகியிருப்பவனே
நல்ல கவிஞன் என்று
நான் பதிலிறுப்பேன்.
‘ஆனால்…, சொற்களும் அதன்
அர்த்தங்களும் இல்லாமல்
எங்கிருக்கும் கவிதை ? ‘
என்று நீங்கள் வினவும் பட்சத்தில்
உங்களுக்கு விடை சொல்கிறேன்
‘ சொற்களின்றும் விடுபட்ட பின்னும்
அர்த்தங்களிலிருந்து விலகிய பிறகும்
அங்கே இன்னும் மிஞ்சியிருப்பதே கவிதை.’

மொழி பெயர்த்தவர் க. மோகனரங்கன்