என்னதான் முடிவு?/வாசுதேவன் ஸ்ரீனிவாசன்

வங்கக் கடலில் உருவான புயல் வலுவிழந்து, இரவில் கரையைக் கடக்கும் என்றும் அதன் விளைவாக பின்-மாலையில் தொடங்கி மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூரைக் காற்று வீசும் என்றும் கிடைத்த ஐ.எம்.டி. யின் தகவலைத் தொடர்ந்து ஆபீஸ் நேரம் ஒரு மணி முன்னதாக முடிய ….

சுரேஷ் தன் டூ-வீலரில் கிளம்பி வெள்ளம் தேங்காத சாலைகளை ஊகித்து பொறுமையாய் வீடு வந்து சேர்ந்த போது மணி ஏழு .

மழை முழுதும் விட்ட பாடில்லை .. பலமான காற்று வீசத் தொடங்கியிருந்தது.

டிராபிக் நெரிசலில் கிளட்ச்சைப் பிடித்துப் பிடித்து வண்டி ஓட்டி வந்த அலுப்பு தீர ‘ஹீட்டர்’ போட்டு குளித்து விட்டு….மனைவி கொடுத்த சூடான சப்பாத்தி-குருமா மற்றும் ஆவி பறக்கும் பில்டர் காபி இவைகளை உள்ளே தள்ளிவிட்டு சற்று ‘ரிலாக்ஸாக’ அமர்ந்து செல்போனின் முக நூல் பதிவுகளில் ஆழ்ந்திருந்த போதுதான் அந்த அறிமுகம் இல்லாக் கைபேசி நம்பரிடமிருந்து அழைப்பு வந்தது .

“யெஸ் ..சுரேஷ் இயர் ..ஹூ இஸ் திஸ் ?”

“என்னை உங்களுக்குத் தெரியாது … உங்களை எனக்குத் தெரியும் “

ஒரு சிறு வயது பெண்ணின் இனிய குரல்…

“அப்படியா ?……”

“என்ன? ஆச்சர்யமா இருக்கா? உங்க பேர் சுரேஷ் தானே சார்..?”

“ஆமாம் ..உனக்கு எப்படித் தெரியும்?”

“என்ன சார் இது? இப்பொ போன எடுத்த உடனே நீங்கதானே சொன்னிங்க?”

“ஓ …! அப்படியா?சரி… உனக்கு என்ன வேணும் சொல்லு “

“ஒரு டவுட்டுக்கு விளக்கம் வேணும்”

“அதுக்கு இந்த ராத்திரி நேரம்தான் கெடைச்சுதா? அதுவும் நீ யாருன்னே தெரியாம உன்னோட டவுட்டுக்கு நான் எப்படி விளக்கம் சொல்ல முடியும் ?”

“உங்களால முடியும்னு நம்பித் தான் கேக்கறேன் .. ப்ளீஸ்”

“சரி ..உன்னோட டவுட்டை சொல்லு ..”

“ஒரு மொழக் கயிறு….இல்லன்னா கொஞ்சம் பெரிய சைஸ் துப்பட்டா … சின்ன சைஸ் பாட்டில் டிக் 20….அஞ்சாறு தூக்க மாத்திரை, கடைசியா மெரினாவில கண்ணை மூடிகிட்டு கிழக்கு பக்கமா தணணியை பாத்து நடக்கறது……. இந்த நாலு ‘மோட்’ல எதுல சட்டுன்னு உயிர் போகும் ?”

சுரேஷ் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டான் ..

போனை ‘ஹோல்ட்’ ல போட்டுவிட்டு பிரிஜ்ஜிலிருந்து ஐஸ் வாட்டர் எடுத்து ஒரு மடக்கு குடித்துக் கொண்டான் .. குளிர் காற்று வீசும் அந்த இரவிலும் அது அவனுக்கு தேவைப் பட்டது . நாக்கு வரண்டு போய் பேச்சு சைலன்ட் மோடில் செயல் படத் தொடங்கி விட்டது.

“என்ன சார்…சைலன்ட் ஆயிட்டிங்க …? பதிலையே காணும் …?தெரியலன்னா விட்டுடுங்க …நானே யோசிச்சு முடிவு பண்ணிக்கறேன் ..”

“இல்லல்ல … .. …சொல்றேன் …ஆனா அதுக்கு முன்னாடி …நீ யாரு? எங்கிருந்து பேசற? இந்த வெவரம் எனக்கு தெரியணும் …”

“உங்களுக்கு அதெல்லாம் தெரிஞ்சாலும் பிரயோஜனப் படாது … …கிட்ட தட்ட எல்லாமே முடிஞ்ச மாதிரிதான்…’தற்கொலை’ ங்கறது ‘ முடிவாயிடுச்சு …அதோட ‘மோட்’ தான் பிடி படல …அது மட்டும் தெரிஞ்சா அடுத்த நிமிஷம் என் கதை முடிஞ்சுது…”

“அடக் கடவுளே! ….டெலிபோன் பொண்ணு! …அவசரப் படாதே …நீ கஷ்டமான கேள்வியா கேட்டிருக்க…ஒரே ஒரு மணி நேரம் உன்னோட ஆக்ஷனைத் தள்ளி வை…. …அதுக்குள்ள யோசிச்சு பொருத்தமான விடையை சொல்லிடறேன் ..ப்ளீஸ்…”

சாகத் துடித்தும் ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உந்துதலில் அந்த பெண்ணிடம் கெஞ்சினான் சுரேஷ்.

“ஓகே … ஒரே ஒரு மணி நேரம் தான் ..
நீங்க பதில் சொல்லலைன்னா …நானே முடிவு எடுக்க வேண்டி வரும் …சொல்லிட்டேன்.” என்று தெளிவாய் பேசினாள் அந்த டெலிபோன் பெண் .

“ஆனா ஒரு விஷயம் நான் உனக்கு போன் பண்ற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருக்கணும் ..ஒகே ?”

“ஒகே சார்”

ஏதோ அடுத்து அவளுடன் பேச டிஸ்ரிக்ட் கலக்ட்டர் லைனில் காத்திருப்பதைப் போல் தொடர்பை உடனடியாய் துண்டித்தாள் அந்தப் பெண்..

2

போன் தொடர்பு துண்டிக்கப்பட்ட அடுத்த பத்தாவது நிமிடம் அந்த இரவில் வீசும் கடும் குளிர் வாடைக் காற்றையும் சிறு தூறலையும் பொருட்படுத்தாமல் டூ-வீலரில் அமர்ந்து அவன் கல்லூரிக் கால நண்பன் வேலை செய்யும் ‘வோடாபோன் ‘ ஆபிஸ் வளாகம் வந்து சேர்ந்தான் சுரேஷ்.

புயல் அறிவிப்பின் காரணமாக முக்கால் வாசி ‘ஸ்டாப்’ சென்று விட்டதால் ஆபிஸ் வெறிச்சோடிக் கிடந்தது.

“வா சுரேஷ் ..”

மானேஜர் ராம் அவனை வரவேற்றார் . அவரிடம் அப்பெண்னின் டெலி போன் உரையாடலை முழுவதுமாக சொன்னான் சுரேஷ்.

“எல்லாம் சரிப்பா .. அதுக்கு போலீசில இல்லே சொல்லணும்?அதை விட்டுட்டு இங்கே எதுக்கு வந்த ..?

“போலீசில சொல்லி அவங்க ஆக்ஷன் எடுக்கறதுக்குள்ள விடிஞ்சுடும் …மேலும் இது ஒரு பொண்ணோட லைஃப்.. …நாளைக்கு போட்டோ… பேட்டின்னு பத்திரிகையில வந்து அவ வாழ்க்கையே கேலிக்குரியதா ஆயிடும் …
அதனாலதான் உன்னோட ஹெல்ப் கேட்டு வந்தேன் ..நீதான் ஏதாவது பண்ணனும்..
..ஒண்ணும் பண்ண முடியாட்டியும் அந்த போன் நம்பரை வச்சு அவளோட விலாசத்தை கண்டு பிடிச்சு சொல்லு”

“அந்த பொண்ணோட வாய்ஸ ரெக்காட் பண்ணினியா ..?”

“பண்ணனுமா ?எனக்கு தோணல”

“சரி….. அவ பேசின அந்த நம்பரை சொல்லு”

“9962337021”

“ஒரு நிமிஷம்” …

என்று ‘ஸிஸ்டத்’தில் போன் நம்பரை ஏற்றி அதற்குரியவர் பெயரையும், விலாசத்தையும் கண்டு பிடித்தார் ராம்.

கணேசன்
நம்பர் 6,
சுங்குவார் அக்ராஹாரம் தெரு
சிந்தாதிரிப்பேட்டை
சென்னை 2

“சரி…. நான் உடனே கிளம்பறேன் ..அந்த பொண்ண எப்படியாவது காப்பாத்தியாகணும்”

“இந்த வெதர் கண்டிஷன்லயா போகப் போற? ..நானும் கூட வரட்டுமா ?”

“வேண்டாம்…. நீ வீட்டுக்கு கெளம்பு ….நான் பாத்துக்கறேன் …”
என்று விடு விடு வென்று கிளம்பிய சுரேஷ், கிடைத்த விலாசத்தை அடையும் போது இரவு ஒன்பது ஆகி விட்டது.

அந்த ‘ஏரியா’ முழுவதும் கரெண்ட் துண்டிக்க பட்டிருந்தது.
அருகில் எங்கோ மரக் கிளை விழுந்து மின்சார ஒயர் தொங்கிக்கொண்டு இருக்க வேண்டும்!!

அந்தக் காலத்து சீமை ஒடு போட்டு இரு பக்கமும் திண்ணை வைத்த மிகப் பழைய வீடு…. வாசல் முகப்பின் தரையில் சிறிது அழிந்திருந்த செம்மண் கோலம் .

சீரான இடைவெளியில் மூன்று பித்தளைப் பூண் போட்டு கலை வேலைப்பாடு கொண்ட கனமான தேக்கு மரக் கதவு…

கரெண்ட் இல்லாததால் கதவை பலமாக தட்டினான் சுரேஷ் .

டக் …டக் …டக் …

சத்தம் கேட்டு ஓரிரண்டு நிமிடத்திற்கு உள்ளிருந்து யாரும் வரவில்லை …மாறாக எங்கோ குளிருக்கு சுருண்டு படுத்திருந்த தெரு நாய்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு சுரேஷ் நின்று கொண்டிருந்த திசை நோக்கிக் ‘கோரஸ்’ ஸாக குரைத்ததுதான் மிச்சம்.

சுற்றிலும் கும்மிருட்டு …
சுரேஷ் வெலவெலத்துப் போய்விட்டான். பேசாமல் அந்தப் பெண் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று திரும்பி விடலாமா என நினைத்து இரண்டு அடி காலை பின் வைக்கும் போது ..

கிரீச் …..என்ற சப்தத்துடன் கதவு திறந்து கொண்டது.

கதவைத் திறந்த அந்தப் பெண்ணிற்கு சுமார் பதினெட்டு வயது இருக்கும் .கையில் செல்போன் ..அதில் டார்ச் லைட் எரிந்து கொண்டிருந்தது.

உடனேயே போனில் பேசிய பெண் இவளாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்து விட்டான் சுரேஷ்

“யாரு நீங்க?” என்று தைரியமாகக் கேட்டாள் அப் பெண் .

“என் பேர் சுரேஷ். ..கணேசன் ங்கிறது…?

“என் அப்பாதான் …அவர் ஊர்ல இல்ல ..நீங்க அடுத்த வாரம் வந்தாப் பாக்கலாம் …என்ன விஷயம்னு சொன்னேள்னா நான் அவர் வந்தவுடனே சொல்றேன்”

“இல்ல …நான் உன் கிட்டதான் கொஞ்சம் பேசணும்”

இதைக் கேட்ட வுடன் அந்தப் பெண்ணின் முக பாவம் மாறி

“எதுக்காக?”

கடுப்புடன் கேட்டாள்

“சொல்றேன் ….ஒரு ரெண்டு மணி நேரம் முன்னால செல் போன்ல என்னோட பேசினது நீ தானே?”

“ஓ …அந்த சுரேஷ் சாரா நீங்க? இப்போ புரியுது … அதாவது சார் …நான் என்னோட டவுட் ஒண்ணை கிளியர் பண்ணிக்கறதுக்கு ரெண்டு மூணு பேர் கிட்ட பேசி இருக்கேன் ..அதுல நீங்களும் ஒருத்தர் போல …!
சரி அதை விடுங்க ..பதில் கண்டு பிடிச்சுட்டிங்களா?”

“மொதல்ல என் நம்பர் எப்படி கெடச்சது உனக்கு ? அதைச் சொல்லு”

“ரொம்ப சிம்பிள் …போன்ல தோராயமா ஒரு நம்பரை டயல் பண்ணினேன் …நீங்க மாட்டினீங்க”

இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த சுரேஷ் அப் பெண் நல்ல தெளிவான நிலையில்தான் இருக்கிறாள்.. என்பது உறுதியானவுடன் கொதித்து எழுந்து….

“ஏம்மா உனக்கெல்லாம் ஒன் உயிர் அவ்வளவு சாதாரணமா போச்சா?

இத்தனை வயசு வரைக்கும் உன்ன வளக்கறதுக்கு உங்க அப்பா எப்படியெல்லாம் கஷ்டப் பட்டிருப்பார்?

உன் எதிர் காலத்தைப் பற்றி என்ன வெல்லாம் கனவு கண்டிருப்பார்?

உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தா உன்னை தனியா விட்டுட்டு ஊருக்குப் போயிருப்பார்?

உனக்கு அப்படி என்னம்மா இந்த சின்ன வயசில தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு கஷ்டம்?”

கேள்விகளைச் சரமாரியாக தொடுத்தான் சுரேஷ் .

“ஹலோ!… எக்ஸ்கியூஸ் மீ …
என்ன சார் … விட்டா மேல மேல பேசிண்டு போறேள்?

“யார் இங்க தற்கொலை பண்ணிக்க ரெடியா இருக்கா?
ஏதோ உசிரு, வயசு, கனவு நம்பிக்கைன்னு ஒளறிண்டு இருக்கேளே ?”

அவளும் சளைக்காமல் எதிர் கேள்வி கேட்டாள்.

“ஏய் ..ஏய் …நானா உளர்றேன் ? அப்போ தற்கொலை பண்ணிக்க நாலு ‘மோட்’ சொல்லி எதுல சட்டுன்னு உயிர் போகும்னு நீ போன்ல என்கிட்ட கேட்டது…..? அதுக்கு பதில் சொல்ல நான் ஒங்கிட்ட டைம் கேட்டது? …அதெல்லாம்?”

“எல்லாமே சரிதான் “

“கொழப்பறியே? அப்போ உன்னோட தற்கொலை முடிவ மாத்தி கிட்டயா ?

“மொதல்ல இந்த திண்ணையில அமைதியா அஞ்சு நிமிஷம் உக்காருங்க சார்.

என்னைப் பத்தி இப்போ சொல்றேன் .. தெரிஞ்சுக்குங்க ..நான் பிளஸ் டூ முடிச்ச கையோட நீட் எக்ஸாம் எழுதிட்டு ரிசல்ட்டுக் காக வெயிட் பண்றேன் ..

ஒரு ‘வாரப் பத்திரிகை’ யில ‘சிறு கதை’ போட்டிக்குத் திரில்லர் கதை கேட்டிருந்தாங்க ..அப்பா ஊர்ல இல்ல ..செம போர் ….சரி …சும்மாதானே இருக்கோம்…ஏதாவது உருப்படியா செய்யலாம்னு ஒரு கதை எழுத ஆரம்பிச்சு தொண்ணுறு சத விகித கதையையும் எழுதி முடிச்சுட்டேன்..கிளைமாக்ஸ் தான் பாக்கி. என் கதையில் கதாநாயகி முடிவுல தற்கொலை பண்ணிக்கறதா வச்சிருந்தேன் . ஆனா என்னால அதற்கு உண்டான ‘மோட் ‘ முடிவு பண்ண முடியல இப்போவும் கெட்டுப் போகல. நீங்க சொன்னிங்கன்னா என்னோட ‘என்னதான் முடிவு?’ங்கற கதையை முழுசாய் எழுதி முடித்து நாளைக் காலை கரெண்ட் வந்த வுடன் பத்திரிகைக்கு மெயில் அனுப்பிடுவேன்…

சார் ….சார் …உங்களுக்கு என்ன பண்ணுது?”

பேசிக்கொண்டிருக்கும் போதே மூர்ச்சையான சுரேஷை முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினாள் அந்த டெலிபோன் பெண்.