முக நூலில் : ஆர்.கந்தசாமி

கே: ஒரு எழுத்தாளனின் முக்கிய அடையாளமாக எதை நினைக்கிறிர்கள்?
பேயோன்: சட்டைப்பையில் பேனா இல்லாமல் நான் வெளியே போவதில்லை. திடீரென யாராவது ‘வாசகர்’ – ரசிகர் – எதிரில் வந்து புத்தகத்திலோ துண்டுச் சீட்டிலோ ஆட்டோகிராப் கேட்டால் புன்னகையுடன் கையொப்பமிட்டுத் தர பேனா இருக்காமல் போவது எழுத்தாளனுக்கு அசிங்கம். செய்கிற வேலையெல்லாம் கணிப்பொறி விசைப்பலகையில்தான். இருந்தாலும் எழுத்துத் தொழிலுக்குப் பேனா ஒரு மகத்தான குறியீடு என்பதால் அதை நினைவுச் சின்னமாக வைத்திருக்கிறேன். காசோலையில் கையெழுத்துப் போடவும் பேனா இன்றியமையாதது.
கே: நீங்கள் தொடர்ந்து கவிதைகள் எழுதுபவர். கவிதைகள், மற்றும் தற்கால கவிஞர்கள் பற்றிய உங்கள் மதிப்பீடு?
பேயோன்: வெகுஜன அழகியலில் பொய்க்கு இடமிருப்பதை நாமே பார்த்திருக்கிறோம். கவிதைக்குப் பொய் அழகு என்பது பாடம். “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே”யின் நீட்சி அந்தக் கூற்று. ஆக, பொய்யை தார்மீக காரணங்களுக்காகவிற்குப் பதிலாக அழகியல் காரணங்களுக்காகப் பயன்படுத்துவது தவறல்ல என்றாகிறது. Truth is beauty என்றார் கீட்ஸ். அவரும் அதைப் பொய்யினால் அழகாக்கப்பட்ட தனது கவிதையில் சொல்லியிருக்கிறார். சிலருக்குப் பொய் சொல்வதே தொழில். அதே போல முழுநேரக் கவிஞர்களும் இருக்கிறார்கள். (சிரிக்கிறார்)
கே: தற்போதைய எழுத்துச்சூழலில் உங்களை பற்றிய சுய அவதானிப்பாக எதை சொல்லுவீர்கள்?
பேயோன்: (நீண்ட நேர யோசனைக்குப்பிறகு) ப்ளீஸ்! நானும் உங்களைப் போன்று டீசன்ட்டானவன்தான். நானும்தான் கோல்ட்ஃப்ளேக் கிங்ஸ் பிடிக்கிறேன். நானும்தான் உங்களைப் போல ‘லாஜிக் இடிக்கிறது’ என்பதற்கு பதில் ‘தர்க்க இடிபாடுகளிடையே சிக்கியுள்ளது’ என்று சொல்ல விரும்புகிறேன். நானும் கஷ்டப்பட்டும் முன்னுக்கு வர முடியாதவன்தான்.
கே: விருதுகள் பற்றி உங்கள் அபிப்ராயம்?
பேயோன்: சமீபமாய் நிறைய விருதுகள் சேர்ந்துவிட்டன. ஒரு டெம்போ வைத்து தமிழக சுற்றுப்பயணம் சென்றால் அத்தனையையும் அள்ளிக்கொண்டு வந்துவிடலாம்.விருதுகள் என்னை மென்மையாக்கிவிட்டதாய் உணர்கிறேன். 5 ஆண்டுகளுக்குமுன் எல்லோரையும் மண்ணை வாரிப்போட்டு சபித்தபடி இருந்தது நினைவில் பசுமையாய்.
- எழுத்தாளர் பேயோன்
நேர்காணல்: சந்தோஷ் நாராயணன்
