நகுலனைப் பற்றி…/ஆ.பூமிச்செல்வம்

நோய்மையில் இருந்த சகோதரன் மனப்பிறழ்வுக்கு ஆளாகி சுவரில் தலையை மோதிக்கொண்டு உயிரை இழக்க, வயதான பெற்றோரும் அடுத்தடுத்து உயிர்விட நிரந்தரத் தனிமை நகுலனைச் சூழ்ந்தது. முதலில் வெற்றிலையைப் போட்டுப் பார்த்து பின்பு ‘குடி’ யை நாடினார்.

ஓய்வூதியமாகக் கிடைத்து வந்த ரூபாய் 1850இல் தனக்கும் தனக்குப் பணிவிடை செய்த தாதி கோமதியம்மாளுக்கும் செலவிட்டு வந்தார்.

கண்பார்வை அவரைக் கைவிட்டு விட்ட நிலையில், வாசனையின் உதவியால் மட்டுமே உரிய புத்தகங்களைத் தேர்ந்து, உள்ளங்கை விரல்களின் ஸ்பரிசத்தால் மட்டுமே வாசித்து மனஅமைதிப்படுவார். வீட்டின் முற்றத்தில் சூரல் நாற்காலியில் அமர்ந்து யாருடைய வருகையையாவது எதிர்பார்த்துக் காத்திருப்பார்.

உள்ளூரில் தனக்கு ஆத்மார்த்தமான நண்பர்களாக இருந்த கிருஷ்ணன்நம்பி, சண்முக சுப்பையா, நீல பத்மநாபன் மூவருள் முன்னவர்கள் இருவரும் இளம் வயதிலேயே காலமாகிவிட
அவ்வப்போது வந்து பார்த்துக் கொண்ட நீலபத்மநாபன் உடனிருக்க மருத்துவமனையில் கிடத்தப்பட்டார் நகுலன். 17.05.2007 இரவு 11 மணிவரை இருந்து, தம் உடல் ஒத்துழைக்காமையால் மறுநாள் காலை வரலாம் என நினைத்து பத்மநாபன் புறப்பட்ட நிலையில், அடுத்த 30 நிமிடங்களுக்குள் தன் நண்பரிடமிருந்தும், இவ்வுலகிடமிருந்தும் நிரந்தரமாக விடுபட்டார் நகுலன்.

முகநூல் பதிவு : ஆர். கந்தசாமி