காலப்பயணம்/முபீன் சாதிகா

அந்த ஊரின் அங்காடி ஒன்றில் அவன் நடந்து கொண்டிருந்தான். அங்கிருந்த மக்கள் பழக்கமானவர்களைப் போல சில சமயங்களிலும் பகைவர்களைப் போல சில சமயங்களிலும் அவனுக்குத் தெரிந்தார்கள். அவர்கள் பேசிய மொழி கொச்சையாக இருந்தது. அவனுக்கு அந்த மொழி புரிந்தாலும் மொழிப் பயன்பாடு சீரழிந்து போய்விட்டதைக் கண்டு துயருற்றான். அந்த மொழியின் செம்மையான வடிவம்தான் அவனுக்குத் தெரியும். அந்த மொழியில் அவன் ஒரு கடையில் கேட்ட பொருள் இல்லை என்றார்கள். அந்தப் பொருளை அவன் குறிப்பிட்ட பெயர் தவறு என்றும் அதை வேறு வகையில் சொல்லவேண்டும் எனவும் கற்றுத் தந்தார்கள். அவனிடம் பொற்காசுகள் மட்டுமே இருந்தன. அங்கிருந்தவர்கள் பொற்காசுகளை வைத்திருந்தால் களவு போய்விடும் என அவனை அச்சுறுத்தி ஒரு வங்கிக்கு அழைத்துப் போய் கணக்கைத் தொடங்கச் சொன்னார்கள். அவன் ஊரின் பெயரோ நாட்டின் பெயரோ எவருக்கும் புரியவில்லை. அவன் நொந்து போனான். வங்கியில் இருந்த ஒருவர் அவனிடம் பேச்சுக் கொடுத்தார். அவன் தங்குவதற்கு தன் வீட்டிற்கு வரலாம் எனக் கூறி தன் முகவரியைக் கொடுத்தார். அவனுக்கு அதைப் படிக்கத் தெரியவில்லை. அவரிடம் அது எங்கிருக்கிறது எனப் படம் வரைந்து வாங்கிக் கொண்டு கிளம்பினான். ஒரு கடையில் பொற்காசுகளைக் கொடுத்து அந்த நாட்டில் புழங்கும் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஓர் உணவு விடுதிக்குச் சென்றான். அங்குப் பரிமாறுபவர் சொன்னதற்குத் தலையாட்டிவிட்டு அவர் கொண்டு வந்து வைத்ததை உண்டான். அதன் சுவை புதுமையாக இருந்தாலும் அவனுக்கு ருசிக்கவில்லை. அங்கிருந்து கிளம்பி வங்கியில் பார்த்தவர் கொடுத்த முகவரிக்குப் போய்ச் சேர்ந்தான். அவர் அவனை வரவேற்று ஓர் அறையைக் காட்டினார். அங்குப் போய் கீழே படுத்து நன்றாக உறங்கினான். அடுத்த நாள் உணவை முடித்துவிட்டு கடற்கரைக்குப் போனான். தான் குழந்தையாக இருந்த போது அங்குச் சுற்றித் திரிந்ததை எண்ணிப் பார்த்தான். கடற்கரை விழாக்கோலம் பூண்டிருந்தது. பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் பெரு விழா அது எனச் சொன்னார்கள். கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இதே போல் கடற்கரையில் விழா நடக்கும் போது பேரலை ஒன்று எழுந்து அந்த நகரத்தை மூழ்கடித்ததை நினைத்துப் பார்த்தான். அதே நாள் அதே இடத்தில் தான் அமர்ந்திருப்பதையும் எண்ணிச் சிரித்துக் கொண்டு கடலை உற்றுப் பார்த்தான். ஒரு பேரலை அந்த ஊரைச் சுருட்டிக் கொண்டது.