
1
மதுரை மீனாக்ஷியின்
கன்னிமை கழியும் போது
அகத்தியன் தெற்கே வருவான் –
பொதியலின் தமிழ்த்தாலாட்டில்
தூங்கிப் போவான் –
அப்போது தமிழ்
அவன் கைவிட்டு
ஓடிப்போவாள்.
அப்போது
கல் யாளிகள் கிளம்பிக்
கூத்தாடும்-
கொட்டைகள் ஊசலாடக்
குதிரைகள் கோயில் கூரையை
அந்தரத்தில்
தொங்கவிட்டு விட்டு
மேலமாசி வீதியிலே
பவனி வரும்.
பாண்டு வாத்தியம் டபடபவென
முழங்க
சினிமா வண்டிகள்
செய்தியை ஊரெலாம்
எடுத்துச் செல்லும்.
சூடான இட்லியும் பாலும்
காலியானதை
சாம கானமாக
தேவ தூதர்கள்
எடுத்தோதுவர்.
குண்டோதரன்
பசித்து வருவான்.
மதுரை மீனாக்ஷியின்
கன்னிமை கழியும்போது.
2
கன்னிக் குமரியவள்
கணவனை எதிர்பார்த்து
ஏமாந்து நிற்க
அவனை மீனாக்ஷி
மதுரையிலே தடுத்து
நிறுத்திக் கொண்டாள்.
ஆனால் அவனோ
“நான் மதுரை வரையில் கூடச்
சென்றதில்லையே.
நின்ற இடத்திலேயே.
நிமிர்ந்தாடும் நான்
ஒற்றைக் காலால்
சிற்றம்பலம் வந்ததே
பெரிசு” என்று
குரல் எழுப்புகிறான்.
“நான்
ரெயில்வேலைனைக் கடந்திருந்தால்
தத்துவப் பேராசிரியனாகியிருப்
பேனே!”
என்று அங்கலாய்க்கிறான்.
ஆனால்
தத்துவத்துக்கும்
கல்வி இலாகாவிற்கும்
நாமம் சாத்தத் தயாராக
வேங்கடவன்
வடவெல்லை விட்டிறங்கி
உறங்கிவிட்டுத்
தெற்கே வந்திருப்பானோ?
3
தெய்வங்கள் நிலை பெயர்ந்து
நடமாடத் தொடங்கிவிட்டால்
எங்கே
யாரைத் தேடிக் காண்பது?
“வீட்டில் இல்லையவன்”
என்று பூசாரி சொன்னால்
நம்பிவிட வேண்டுமா?
நம்பத் தொடங்கினால்
மிச்சம் என்ன?
பெரியாரும்
கிருபானந்த வாரியும்
கருணாநிதியும்
தானே!
‘அஃ’1974
