
விவாகரத்து என்பது எவ்வளவு கொடுமையானது என்று தெரியாது. ஆனால், விவாகரத்து என்ற வார்த்தை கொடுமையானது என்று புரிந்தது. அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிய நேரிட்டது.
நடு வானத்தில் என் மனைவி என் மீது இந்த வார்த்தையைப் பிரயோகம் செய்தபோது, நான் நடுங்கித்தான் போனேன். சுவையான உணவிற்குத் திண்டாட வேண்டிய நிர்பந்தம் வந்து விட்டால் என்ன செய்வது என்ற கவலை வந்து விட்டது.
அப்போது தான் நானும் என் மனைவியும், விமானத்தில் எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் வெளிப்பாடான நூடுல்ஸ் டப்பாவைப் பிரித்து, அதன் நீண்ட குழல்களை வாயில் திணிக்க முயன்று தோற்றுக் கொண்டு இருந்தோம்.
ஊரே காறித்துப்பும் வைவஸ்வத மனு கங்கைக் கரையில் தன் நீண்ட வெளுத்த தாடியை நீவுவது போல அதை நீவி, தாஜா செய்து, உள்ளே தள்ளி உறிஞ்ச எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. ஆடைகளில் கறை படிந்தது வேறு சோகம்.
ஜெய்ப்பூர் பயணம் முடியும் தறுவாய் அது. ஜெய்ப்பூரில் இருந்து தில்லி. பிற்பாடு கோவை. தில்லி வரும் வரை உணவு கிடையாது. பிற்பாடு விமானத்தில் இருந்தது நூடுல்ஸ் மட்டுமே.
ஏற்கனவே ஜெய்ப்பூர் பயணம் துக்ககரமாக ஆகிவிட்டது.
நாங்கள் இறங்கி அரை மணியில் மழை வெளுத்து வாங்கி, ஊரே திக்குமுக்காடிக் கிடந்தது.
இதற்கு முந்தைய மழை, சுத்தமான நெய்யில் செய்த கன்னடக் காரரான அகத்தியர்* ஜீபூம்பா மாதிரி ஜாடியில் அடைத்து வைத்து இருந்த காவிரியைத் திறந்து விட்ட அன்று பெய்ததாகச் சொன்னார்கள்.
(காவிரியை முழுதும் அடைத்து, பெரும் போராட்டத்திற்குப் பிற்பாடு திறந்து விடும் நியதியை முதன் முதலாக ஏற்படுத்தியவர் கன்னடக் காரராகத் தானே இருக்க முடியும்?)
இவ்வளவு களேபரமும் உருண்டு திரண்டு ஒற்றை வார்த்தையில் வந்து விழுந்தது.
விவாகரத்து.
காரணம் சற்று பெரியது.
ஊர் போய் இறங்கியவுடன் பொன்னியின் செல்வன் படத்திற்கு முதல் வேலையாக அழைத்துப் போகவேண்டும் என்பது.
நான் வழக்கம் போல அசட்டுத்தனமாக பேச முற்பட்டதும், பசியும், கேவலமான உணவும் அவள் ஆத்திரத்தைத் தூண்டிவிட போதுமானதாக இருந்தன.
“ஒண்ணும் கொனஷ்டையாப் பேச வேண்டாம்”
“இல்லம்மா.. கோயமுத்தூர் போகவே ஒம்பதரை ஆயிடும்.. அதுக்கு மேல எப்படி?”
“செகண்ட் ஷோ போறது”
“டிக்கெட் கிடைக்க வேண்டாமா?”
“அது ஒங்க கவலை.. ஒங்க சிஷ்ய கோடி யாரையாவது போய் தியேட்டர்ல படுத்துக்க சொல்லுங்க.. பன்னண்டு மணியா இருந்தாலும் போறோம்… இல்லேன்னா டைவர்ஸ் தான்”
என் அதிர்ஷ்டம், கோவையில் இறங்கி, தெரிந்தவர்கள் வழியாக முயன்ற போது, திரைக்கு முன்னால் மட்டும் அல்ல, பின்னாடியும் டிக்கெட் இல்லாமல், பிதுங்கி வழிவதாகத் தெரிவிக்கப்பட்டது.
“நாளன்னிக்கு ராத்திரி பதினோரு மணிக்கு இருக்காம்”
“பரவாயில்லை… புக் பண்ணச் சொல்லுங்க”
நாளை முடிந்து நாளன்னிக்கு என்பது வந்தே விட்டது. அது நேற்றாகி விட்டது இன்று.
கொட்டகைக்குள் நுழையும் போது இனம் புரியாத உணர்வு இருந்தது.
இதற்கு முந்தைய சினிமா, இதே கொட்டகையில் சரியாகப் பத்து மாதம் முன்னால் பார்த்தது.
அந்தப் படமும் பொசெ மாதிரி தான்.
நம் நாடி நரம்புகள் எல்லாம் வியாபித்து, ஒவ்வொரு நொடியையும் ஏற்கெனவே நிஜ வாழ்வில் அனுபவித்தது.
1983ல் நாம் வென்ற முதல் உலகக் கோப்பை பற்றியது.
ஆனால், அந்தப் படத்தில் இருந்த எதிர்பார்ப்பு இதில் இல்லை. அந்தப் படம் எப்படி எடுக்கப் பட்டு இருக்கிறது என்ற எதிர்பார்ப்பில் தான் அதைப் போய் பார்த்தது. அந்த உந்துதல் இதில் இல்லை.
பொசெ தேர்ந்த எழுத்தாளர் ஒருவரால் ஏற்கெனவே நமது இதயத்தில் செதுக்கப்பட்ட ஒன்று. அதைத் தண்ணீர் விட்டு அழித்து விட்டு, வேறு மாதிரி எழுத யாராலும் முடியாது.
இதை எடுக்கத் துணிந்த, ஏற்கெனவே வேறுவகையில் பரிச்சயம் ஆன மணிரத்னம், எந்த வகையில் நம் உணர்வுகளோடு ஒத்துப் போகிறார் என்று விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் மனநிலையில் தான் பெரும்பாலான ரசிகர்கள் வந்திருக்கக் கூடும்.
படத்தைப் பார்த்து விட்டு, அதைப் பற்றி சுடச்சுட விமர்சனம் செய்யாதவர்கள் பாவம் செய்தவர்கள்.
பக்கத்து வீட்டுக் கிழவி, என்னைப் போகிற வழியில் பாதியில் நிறுத்தி, பத்து பக்கத்துக்குத் தங்கு தடையின்றி விமர்சனம் பொழிந்தாள்.
பொசெ’யை (பொதுச்செயலாளர் அல்ல) நடுரோட்டில் கமலா ஆரஞ்சு போல் கிடத்தி, ஏழெட்டு ரோடுரோலர்களை அதன்மேல் விட்டு அடித்தாற்போல் ஆகிவிட்டது அதன் மீதான விமர்சனங்கள்.
ஒருத்தர் மணிரத்னம் தஞ்சைப் பெரிய கோயில் செல்லாமல், கும்பிடாமல், படப்பிடிப்பு நடத்தாமல் இருந்தது மகாபாவம் என்றார்.
பொசெ முடிவில் அருண்மொழி பட்டம் ஏற்கவில்லையே? மாறாக பட்டத்தைத் துறந்தல்லவோ விடுகிறான்?
எப்போது உத்தமச் சோழன் மண்டையைப் போடுவது, அருண்மொழி பதவி ஏற்பது, ராஜராஜன் என்று பெயர் வாங்குவது, கோயில் கட்டுவது?
அதற்கப்புறம் தானே கோயிலே கதைக்குள் வரப்போகிறது?
கோயிலில் படப்பிடிப்பு நடந்தால் கேலி பேச மாட்டோம்?
ஒருவேளை நந்திபுரத்து நாயகி என்ற அடாஸான நாவலை, பெண்டாட்டி பிள்ளைகளைப் பணயம் வைத்துப் படமாக எடுத்தால் பெரிய கோயில் வராண்டாவில் எடுக்கலாம்.
ந.பு.நாயகியைப் படிப்பதே, தொட்டுக்கொள்ள ஒன்றுமில்லாமல் பழைய சோறு சாப்பிடுவது போன்றது.
அழகிய சிங்கர் என்ற பெரிய எழுத்தாளர், எம்ஜிஆர் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் மாதிரி அபிப்ராயப் பட்டு இருந்தார்.
எம்ஜிஆர் யாராக நடித்து இருப்பார்?
இப்படி ஏதாவது விபரீதம் நேர்ந்து விடப் போகிறதே என்று தான் கல்கி, தனக்குத் தானே ஒரு சதியாலோசனை நடத்தி, தலைப்பில் ஒரு ஹீரோவையும் கதையில் ஒரு ஹீரோவையும் புனைந்து விட்டார் என்று தோன்றுகிறது.
கமலஹாஸ்யன் எடுத்து இருந்தால் நந்தினி, குந்தவை, சுந்தரச்சோழர், இரண்டு பழுவேட்டரையர்கள், வந்தியத்தேவன், அருண்மொழி, ஆதித்த கரிகாலன், சேந்தன் அமுதன், மதுராந்தகன் உள்ளிட்ட பத்து கதாபாத்திரங்களையும் தானே செய்து இருப்பார்.
நான் இதுகாறும் பாலக்காட்டில் வைணவர்கள் கிடையாது என்று அசட்டுத்தனமாக நம்பியிருந்தேன். ஆழ்வார்க்கடியான் நம்பி அதை உடைத்து விட்டான். வீர வைணவனான அவன் பாலக்காட்டுக்காரன் என்பது மணிரத்னம் வாயிலாகத் தான் அறிந்து கொள்ள முடிந்தது.
இதையும் கமலஹாஸ்யனே செய்து இருக்கலாம். பிறப்பால் பாண்டிய தேசத்து வைணவர். அதைத் துறந்து நாளானாலும், அவர் சுத்த அசைவர் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அசைவம் என்றால் வைணவம் தானே?
அதைத்தவிர, அவரது சமீப நடவடிக்கைகள் நல்ல ஹாஸ்ய ரசம் பொங்க இருப்பதால் ஆழ்வார்க்கடியான் வேடத்திற்கு மிகவும் ஏற்றவர். போதாததற்கு, ஆளவந்தான் படத்து மிருகம் பாதியில் ஒரு சிறு புன்னகையோடு வந்தாலே ஆழ்வார்க்கடியான் கெட்டப் தயார்.
இந்தப் படம் ஆழ்வார்க்கடியான் என்ற பாத்திரத்தைக் குழி தோண்டி புதைத்து விட்டது.
கிழட்டு ஆழ்வார்க்கடியான். வயதான புரோகிதர் மாதிரி இருக்கிறான். படம் நெடுக ரஹ்மான் புண்ணியத்தில் வாயடைத்து, கிணற்றில் கல் போட்டது போல இருந்த ஆடியன்ஸ், அடித்த அடியில் பூணூல் கூட அறுந்து விட்டது என்றதும் கொல்லென்று கடமையாகச் சிரிக்கிறது.
அவனை ஏதோ செந்தில் மாதிரி வந்தியத்தேவன் அடிக்கடி அடிக்கிறான்.
நல்ல வேளை கல்கி இல்லை. துரதிர்ஷ்டவசமாக அவரது வாசகர்கள் இருக்கிறார்கள்.
திரிச்சு குந்தவை பிரா(யம் போன பா)ட்டி. சிம்ரனின் தொப்புள் அழகு போல் திரிச்சுவின் முழுக்காலழகு உலகப்புகழ் வாய்ந்தது.
சங்ககாலப் பாடல் ஒன்றில் ஔவையார்,
ரம்பைத் தொடையழகும் சிம்ரன் இடையழகும்
சிநேகக்கண்ணழகும் அனுஷ்கா உடலழகும்
இந்தத்
திரிச்சு காலழகுக்காணாது நேர்” என்று பாடிப் பதிந்ததைக் கீழடியில் தோண்டி எடுத்திருக்கிறார்கள்.
காலழகு காட்டாத படமும் உண்டோ என்ற சந்தேகத்தை உடைத்து எறிந்த திறமை மணிரத்னம் உடையது.
அவர் படம் நெடுக ஒரு மர்மப் புன்னகையோடு வலம் வருகிறார். நீ நினைப்பதை நான் அறிவேன் என்று சரித்திர வல்லுனர்கள் கூறுகின்றனர். எனக்கென்னமோ அது ஒரு பொறுப்புத் துறப்பாக, “நான் என்ன சொன்னாலும் நீ கேட்கப் போவதில்லை. நீ செய்வதையே செய்” என்று கையாலாகாதவர்களின் சலிப்புப் புன்னகையாகத் தென்பட்டது.
ஐஸ்வர்யா ராய் என்பவரை செம்பியன் மாதேவியாக நடிக்க வைத்து இருக்கலாம். அல்லது மந்தாகினியோடு நிறுத்தி இருக்கலாம்.
நந்தினி அழகி என்பதால் அழகி என்று முத்திரை குத்தப்பட்டவரைத் தேடுவதற்காக இருபத்து சொச்சம் வருடங்கள் பின்னால் போக வேண்டும் என்றால் மேலும் முப்பது வருடங்கள் பின்னால் பயணித்து ஒரிஜினல் அக்மார்க் அழகி வைஜெயந்தி மாலாவைப் போட்டு இருக்கலாம்.
சௌகார் ஜானகியை வானதியாகவும் சரோஜா தேவியை குந்தவையாகவும் போட்டிருக்கலாம்.
ஜெயம் ரவியை சொந்தக் குரலில் பேச விட்டிருக்கலாம். அருண்மொழியாக நடிக்க வைத்து, அருண்மொழி முழுக்க முழுக்க குந்தவை உள்ளிட்ட பெண்களால் வளர்க்கப் பட்டவன் என்று சிம்பாலிக்காகக் காட்டி இருக்க டைரக்டருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.
பிரபு நன்றாக ஊதி உப்பி, குதிரை மேல் அரிசி மூட்டை போல் குலுங்கிக் குலுங்கி வருகிறார். மணிரத்னம் நட்பிற்காக அவருக்கு ஒரு டம்மி கதாபாத்திரத்தைக் கொடுத்து இருக்கிறார்.
படத்தில் அவர் கொடுங்காளூர் பெரிய வேளார் பூதி விக்கிரம கேசரி. ஆனால், உண்மையில் அவர், பூந்தி-விக்காத கேசரி.
பெரிய பழுவேட்டரையர் கண்களில் இன்னமும் தேர்தல் தோல்வி தெரிகிறது. இனம் புரியாத சோகம். அவர் பேச்சை சடுதியில் அவரது கூட்டாளிகள் துறந்து விடுகிறார்கள்.
முந்தின இரவு வரை கூட இருந்த சொம்புவராயர், மணிமேகலை அருண்மொழிக்கு என்றவுடன் மனது மாறி விடுகிறார். சொம்பு கை மாறி விடுகிறது. குந்தவையின் ராராராஜதந்திரமாம்.
ஆரம்ப டைட்டிலில் நடிகர்கள் வரிசையில் கடைசியாக இவருடன் ஈராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்று வருகிறது.
அப்படிப் பிரத்யேகமாகப் போடுகிற அளவிற்கு அவருடைய பங்கு என்ன என்கிற குழப்பம் நம்மோடு அவருக்கும் இருக்கிற மாதிரி தான் தெரிகிறது.
அன்னதானக் கூட்டத்தில் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற மிரட்சி அவரிடம் தென்படுகிறது.
ஆனால் பெரியவர் போலல்லாது இவரது பேச்சை இவரது சேவகர்கள் கேட்கின்றனர். முப்பதடி உயரத்தில் இருந்து கீழே வாகாக எதற்காகவோ அடுக்கி இருக்கும் அரிசி மூட்டைகளில் அடுத்தடுத்து பல்டி அடிக்கின்றனர்.
நந்தினி பேசாமல் இவரை உஷார் பண்ணி இருக்கலாம்.
ப்ரகாஷ் ராஜ் சுருண்ட சோழன்.
பீஷ்மரைக் குப்புறக் கிடத்தியது போல் முதுகெல்லாம் முள்.
ஒருவேளை அக்குபங்க்சர் என்பது தமிழகத்தின் கலை என்று கூறுகிறார்களோ?
அக்காஜிஞ்சர் என்பது தான் மருவி அக்குபங்க்சர் என்று ஆனது என்று கிளப்பி விடும் உத்தியாக இருக்கலாம்.
ப்ரகாஷ் ராஜ் பெரிய விழிகளில் மைதீட்டி அழகாக இருக்கிறார். இவரையே கொஞ்சம் செப்பனிட்டு நந்தினியாகப் போட்டு இருக்கலாம்.
விக்ரம்.. ஊரே ஆஹா ஓஹோ என்கிறது. முப்பது வருஷம் முன்னால் எப்படி கன்னத்தை அதக்கிக் கொண்டு உணர்ச்சி வசப்படுவாரோ அதே மாதிரி லவலேசமும் மாற்றம் இல்லை.
குந்தவைக்கு நந்தினி பேரில் பொறாமை என்று குற்றம் சாட்டுகிறார்.
கடவுளே..
பழைய நார்த்தங்காய் ஜாடியைத் திறந்தது போல் ஒரே பழைய (கிழட்டு) வாடை படம் நெடுக.
மாறுதலுக்கு இரண்டு இளசுகள். வானதி மற்றும் பூங்குழலி.
இரண்டு பேரும் வடகொரியாவில் நாய்வடாம் விற்கிறவர்கள் மாதிரி இருக்கிறார்கள்.
பொசெ’யை அரைகுறையாக வாசித்து, வந்தியத்தேவனை காமடி கதாபாத்திரம் என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள் போலிருக்கிறது. ஏதோ ஓரிரண்டு படங்களில் சுமாரான காமடி செய்ததை வைத்து, கார்த்தியை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.
நல்ல வேளை, யோகிபாபுவைப் போடாமல் விட்டார்கள்.
ஆனாலும், கார்த்தி நினைத்த அளவிற்கு மோசமில்லை.
அதற்காக, குந்தவையை சந்திக்கும் முதல் சந்திப்பில் கம்சன் வேஷம் போட்டு அந்தரத்தில் ஆடுவது எல்லாம் வெள்ளை ரோஜா அல்லது அதற்கு முந்தைய கற்பனை வறட்சி.
கல்கியைப் படிக்காதவர்கள் அநியாயமாக இதையெல்லாம் அவரது கற்பனை என்று அவர் மீது முகம் சுளிக்கவும் கூடும்.
வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு முதல் அத்தியாயத்தில் இருந்தே பிடிக்கக் காரணம் அவனது விளையாட்டுத் தனமும், குந்தவைக்கும் அவனுக்கும் இடையேயான சட்டிலான காதலும், அவளைத் தவிர வேறு யாரிடமும் விழுந்து விடாத அவனது தனித்தன்மையும் தான்.
நந்தினி கடைசியாக அவனிடம் தனக்கு இருந்த மோகத்தை அரசபுரசலாகத் தெரிவித்து விட்டுப் போவாள்.
இந்தப் படத்தில் எல்லாப் பெண்களிடமும் சகட்டு மேனிக்கு வழிகிறான்.
அதைவிடக் கொடுமை, ஆதித்த கரிகாலனின் தூதுவனாக வருபவன், காவலன் பட வடிவேலு மாதிரி, தெருவில் போகிறவர் வருகிறவர்களிடத்தில் எல்லாம் தான் எதற்காக வந்து இருக்கிறோம் என்று தெரிவிக்கிறான்.
லண்டனில் நடப்பது போல் நடக்கும் குரவைக் கூத்தை பழுவேட்டரையரோடு பார்க்கிறான்.
திருவையாறில் நந்தினி பல்லக்கை இடிக்கிறான்.
பின்புலத்தில் ஒரு பெரிய மலைத்தொடர் தெரிகிறது.
திருவையாறில் மலைகள்.
அப்படியானால் சரித்திரமும் பூகோளமும் சொல்வது பொய்.
ராஜராஜன் பெரிய கோவிலுக்குப் பாறைகளை புதுக்கோட்டையில் இருந்து கொணரவில்லை.
அருகில் திருவையாற்று மலைகளை சப்ஜாடாகப் பேர்த்து எடுத்து அதை வைத்துக் கோயில் கட்டி இருக்கிறான்.
இன்று திருவையாறில் மலைகள் இல்லை என்பதே, இருந்த மலைகளைப் பெயர்த்துக் கோயில் கட்டியதற்கான சான்று.
குரவைக் கூத்து நிகழ்வு கதையில் அற்புதமான புனைவு. கதையின் மிக ஆரம்பத்தில் நிகழும் இது கதைக்குள் வாசகர்கள் நுழைய வழி ஏற்படுத்திக் கொடுப்பது. இதன் உச்சகட்டம் ஆழ்வார்க்கடியான் மதில் மேல் இருந்து தலை மட்டும் தெரிய பார்ப்பது.
படத்திலும் வருகிறது. ஆனால், வயசான ஆழ்வார்க்கடியான் நடு ராத்திரியில் அந்தரங்க சுத்தி செய்து கொள்ள தெருவுக்கு வந்து அங்கும் இங்கும் பார்த்தவாறு அமர்வது போல, கரகரப்பான பூந்தி தயிரில் சொய்யென்று ஊறுவது போல ஆகி விடுகிறது.
ஆழ்வார்க்கடியானை வீணடித்தது மன்னிக்க முடியாத குற்றம்.
பல சந்தர்ப்பங்களில், சில அரசியல் கட்சிகள் நிறைய ஜாதிக்கட்சிகளை சேர்த்துக் கொண்டு களம் இறங்கும். அந்தந்த ஜாதிகளின் சில நூறு ஓட்டுக்கள் கிடைக்கும் என்ற சாணக்யம்.
மணிரத்னம் இதே பாணியைக் கைக்கொண்டு இருக்கிறார். நிறைய பழைய பெருங்காயப் பானைகளைப் படம் நெடுக உடைத்து இருக்கிறார்.
சரத்குமாருக்காக நாற்பது பேர், விக்ரம் பிரபுவுக்காக இருபத்தெட்டு, திரிச்சுவுக்காக ஒரு நானூறு, ஐஸ்க்காக ஒரு நூற்றி நாற்பத்தாறு, விக்ரமிற்காக எழுபத்தெட்டு, பார்த்திபனுக்காக நாலேமுக்கால் ரசிகர்கள் என்று கணக்குப் போட்டு, ஒரு பெரிய பட்டாளத்தை வளைத்துப் போட்டு இருக்கிறார்.
வெற்றி பெற்ற நாவல்களைப் படமாக்குவது கடினம். படமாக வெற்றி பெற்றவை குறைவு.
தில்லானா மோகனாம்பாள் ஒன்று தான் நாவலைத் தாண்டி வெற்றி பெற்ற படம்.
அதில் சிவாஜியையும் தாண்டி எல்லோருமே அதியற்புதமாக நடித்து இருப்பார்கள்.
பாலையா வாழ்ந்து காட்டியிருப்பார். அதில் ஒன்றும் பெரிய ஆச்சரியம் இல்லை. நடிப்பில் அவர் பிரவாகம்.
சாரங்கபாணி முதன்முறையாக அடக்கி வாசித்து இருப்பார். பெரிய நடிகர்களுக்கு இது கடினம்.
திமோ ஃபார்முலா தான் பொசெ’விலும் கடைப்பிடிக்கப் பட்டுள்ளது.
அதே மாதிரி நட்சத்திரப் பட்டாளம். ஒவ்வொருவரும் பலகாலம் முத்திரை பதித்தவர்கள். ஆனால், திமோ’வில் நடிகர்கள் வியாபித்தது போல பொசெ’வில் யாரும் பரிமளிக்கவில்லை.
காரணம் திமோ நடிகர்கள் குறைந்த சம்பளம் வாங்கி, கஷ்ட ஜீவனம் நடத்தி, நடிப்பு தவிர வேறெந்தத் தொழிலும் அறியாதவர்களாக இருந்தவர்கள். அவர்களில் ஒவ்வொருவரும் பலகாலம் குருகுல வாசத்தில் முறையாக சுய அனுபவத்தில் நடிப்பைக் கற்றுக் கொண்டவர்கள்.
வைத்தியின் கதாபாத்திரம் பொசெ’யின் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை ஒத்தது.
கார்த்தி என்பவரால் நாகேஷ் கொடுத்தது போன்ற பெர்ஃபார்மான்ஸ் காட்ட நாற்பது கோடி வருடங்கள் ஆகும்.
இசை மாமாவுடையது. எப்படிப்பட்ட சாகாவரம் பெற்ற பாடல்கள்?
இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் விசேஷ கவனம் செலுத்தப்பட்டு, கோட்டையடுப்பில் உடல் வெந்து, எங்கோ வெளியில், முகம் தெரியாது, சாப்பாட்டை ரசித்து சாப்பிட்டு விட்டு, திருப்தியாக எழுந்து போகும் மனிதனுக்காக, தன் சக்தி முழுவதையும் செலவிடும் சமையற்காரன் போல, ஏபிஎன் போன்றவர்கள் ரசிகனின் திருப்திக்காக இயங்கினார்கள்.
இன்று, பென்ஸ் வண்டியில் இறங்கும் தொழில்முறை சமையல் கான்ட்ராக்டர்களாக டைரக்டர்கள் மாறி விட்டார்கள்.
தன் புத்திசாலித்தனத்தைப் பீற்றிக் கொள்ள, கிடைத்த சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்ளும் முறை அமலுக்கு வந்து விட்டது.
அதில் மற்றுமொரு முயற்சி தான் பொன்னியின் செல்வன்.
இசையைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்றால் விமர்சனம் முழுமை ஆகாது.
இசையமைப்பாளர் 1992 தொடங்கி இன்றுவரை இந்த முப்பது வருடங்களில் எத்தனைப் பாடல்களை முணுமுணுக்க வைத்திருக்கிறார் என்பதில் வெளிப்படும் அவர் பவுசு.
இந்தப் படம் உள்பட பெரும்பாலான படங்களில் ஒரே மாதிரி பாடல்கள். அதே அரபிக்கடலோரம், அதே குச்சி குச்சி ராக்கம்மா குடை சாஞ்ச ராக்கம்மா தான்.
மற்ற பாடல்களை உல்டா பண்ணுவதில் நிபுணர்களான சங்கர் கணேஷ் போன்றவர்களிடம் கொடுத்தால் இன்னும் நிறைய ஹிட் கொடுக்கலாம்.
அப்புறம் ஏன் இந்த இசையமைப்பாளரை எல்லோரும் ரசிக்கிறார்கள், தூக்கிப் பிடிக்கிறார்கள்?
எழுபத்து ஐந்து வாக்கில் மயிலை பிஎஸ் பள்ளி வளாகத்தில் ஒரு கண்காட்சி நடந்தது. நான் சிறுவன். என் பெரியம்மா பையன் என்னை ஆசையாக அழைத்து வந்திருந்தான். அவன் அப்போது தான் வங்கி வேலைக்கு சேர்ந்து இருந்தான்.
அங்குதான் முதன் முதலாக கலர் டீவி பார்த்தது.
அங்கு ஓரிடத்தில் யோகர்ட் விற்றுக் கொண்டு இருந்தான். அது என்னவென்று என் அண்ணனுக்குத் தெரியவில்லை.
அதை ஐஸ்கிரீம் என்று தான் அணுகியது.
ஐஸ்கிரீம் குவளை போல இருந்ததில் இருந்த அந்த வஸ்துவை ஒருவர், மர ஸ்பூனால் உறிஞ்சி உறிஞ்சி சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அவர் முகம் அவர் அதைப் பூரணமாக ரசிக்கவில்லையோ என்று தோன்றியது.
என் அண்ணன் அவரிடம், “இது எப்படி சார் இருக்கு? பரவாயில்லையா” என்று கேட்டான்.
அவர் கொஞ்சம் கூட நிமிராமல், தன் முயற்சியில் தீவிரமாகி, “வெரி நைஸ்… வெரி நைஸ்” என்று சுரண்டி சுரண்டி சுவைக்க ஆரம்பித்தார்.
என் அண்ணன் இரண்டு கப்புகள் வாங்கி, அதைத் தின்னவே முடியவில்லை. கண்றாவியாக இருந்ததை, காசு கொடுத்து விட்டோமே என்று இருவரும் பிடிவாதமாக துழாவிக் கொண்டு இருந்தபோது வேறொரு மனிதர் என் அண்ணனிடம் எப்படி சார் இருக்கு என்று கேட்டார்.
“வெரி நைஸ்… வெரி நைஸ் ” என்றான் அவன்.
அன்றிரவு எங்கள் இருவருக்கும் காய்ச்சல் வந்து விட்டது.
யோகர்ட் போல ஏஆர் ரஹ்மான் என்பவர் பெரும் புகழ் அடைந்து விட்டார்.
இவரை விட ஆயிரம் மடங்கு நல்ல பாடல்கள், காலத்தால் எந்த காலத்திலும் அழியாத பாடல்களை, ஜி ராமநாதன், எம்எஸ்வி & கோ, கேவி எம், இளையராஜா என்று நிறைய மேதைகள் உருவாக்கி இருக்கிறார்கள்.
வி.குமார், விஜயபாஸ்கர் என்று சில நூறு மடங்கு நல்ல பாடல்களைத் தந்தவர்களும் உண்டு தான்.
ஆனால், ரஹ்மான் பாடல் பிடிக்கவில்லை என்று சொன்னால் அது கௌரவக் குறைவு என்றும், நம்மைப் பழமைவாதியாக நினைத்து விடுவார்களோ என்றும், அதில் ஏதோ இருப்பதால் தானே பெரிய மனிதர்கள் அதை ரசிக்கிறார்கள் என்பதாகவும் நிறையப் பேர் நினைக்கிறார்கள் போலிருக்கிறது.
உண்மையில் அதில் ஏதோ இருக்கிறதோ என்னமோ? நான் எல்லோரும் பழிக்கும் படியான பழைமைவாதிதானோ என்னமோ? ஆனால் எனக்கு என் அம்மா செய்யும் மோர்க்கூழ் என்னும் வஸ்துதான் யோகர்ட்டை விட அதிகம் பிடிக்கிறது.
போலியான போக்கை நாம் ஏன் அனுசரிக்க வேண்டும்?
இந்த படத்தில் பின்னணி இரைச்சல்கள் அவசியமானவை. அதுவும் சண்டைக் காட்சிகள்.
பழைய விஜய்காந்த் படங்களில் சண்டை என்றால் மண்கலங்களை (பானை) சுக்கு நூறாக உடைப்பார்கள்.
மணிரத்னம் தன் ரேஞ்சுக்கு மரக்கலங்களை உடைக்கிறார்.
படம் முடிவதற்குள் இசைமேதை இருபது முப்பது வண்டித் தவலைகளை அடித்தே நசுக்கி இருக்கக் கூடும்.
காமராவும் இசையும் இயக்கமும் படத்தை ஆங்கிலப்படம் போல ஆக்கியது என்று சொல்கிறார்கள்.
இருக்கலாம். இருக்கட்டும். ஆட்சேபம் இல்லை. பெருமைதான்.
ஆனால், அதற்கென்ன அவசியம் வந்தது?
நாம் எதற்காக ஆங்கிலப் படம் போல எடுக்க முனைய வேண்டும்? அவனை விட பல நூற்றாண்டுகளுக்கு முன் நாகரீகம் கண்ட நாம் எதில் குறைந்து விட்டோம்?
அவன் ஏன் நம் படங்கள் போல எடுக்க முனைவதில்லை?
அவனுமே அவன் பாணியில் இல்லாத அகிரா குருசேவா படங்களைத் தானே அற்புதம் என்று கொண்டாடுகிறான்?
இந்த ஆங்கில மௌடீகம் என்று ஒழியும்?
அப்படியே ஆங்கிலப் படம் வேண்டும் என்றால் ஆங்கிலப் படத்தையே பார்த்தால் போயிற்று?
அதிலும், தமிழில் பேசும் ஆங்கிலப் படங்கள் இன்னும் உசிதம்.
இந்தப் படத்தில் அநேகமாக எல்லோரும் மொழிமாற்றம் போலத்தானே பேசுகிறார்கள்?
பத்தாம் நூற்றாண்டிலேயே நம் மொழி செம்மொழி ஆகிவிட்டது என்பதை மணிரத்னம் நிரூபித்து இருக்கிறார்.
மெய்யெழுத்து பதினெட்டில் “ள” என்கிற அவசியம் இல்லாத எழுத்தை நீக்கி விட்டுத்தானே எல்லோரும், அசல் தஞ்சை மறவர் குல இளவல் உட்படப் பேசுகிறார்கள்?
சர்வ நிச்சயமாக, பொன்னியின் செல்வன் தில்லானா மோகனாம்பாள் போல ஒரு கல்ட் மூவி அல்ல.
ஆனால், ஆக்கப்பட்டு விடும்.
இந்தப் படம் பொன்னியின் செல்வனை எட்டாம் முறையாக வாசிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. நிறையப் பேரை முதல் வாசிப்பில் செலுத்தி இருக்கிறது.
அந்த வகையில் உத்தமம்.
மற்றபடி, டைட்டிலில் முதலிலேயே டிஸ்க்ளைமர் ஆக “கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது” என்று போடுகிறார்கள்.
அது ஓரளவுதான் சரி.
கல்கியின் பொன்னியின் செல்வனைத் தழுவி எடுக்கப்படவில்லை.
பொன்னியின் செல்வனில் இருந்து கல்கியைக் கழுவி எடுத்திருக்கிறார்கள்.
80

கரும்புள்ளி
அக்கு வேறு ஆணி வேறாக……
விமர்சனத்திற்கு பாராட்டுக்கள். பலரும்
நினைப்பதை தைரியமாக,
மட்டுமல்லாமல் நகைச்சுவை யோடு (வாய் விட்டு சிரிக்க வைத்து)
எழுதியிருக்கிறார்