கலம்பகம் என்பது/சுரேஷ் ராஜகோபால்

தமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்பு, அகம் என்னும் இரு சொற்களின் இணைப்பால் உருவானது.
பன்னிரு பாட்டியல் என்னும் நூல் இதன் இலக்கணத்தைக் கூறுகிறது. கலம்பகம் எனும் சொல்லில் கலம் என்பது பன்னிரெண்டையும், பகம்(கலத்தில் பாதி) ஆறினையும் குறிக்கும். ஆக பதினெட்டு உறுப்புகள் அமைய பாடப்படுவதே கலம்பகம் என அழைக்கப்படுகிறது. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நந்திக் கலம்பகம் ஆகும்.
நந்திக் கலம்பகம் தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று. இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப் பாடப்பட்டது. இதுவே கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டு விளங்குவதாகும்.

வான்உறு மதியை அடைந்ததுஉன் வதனம்
மறிகடல் புகுந்ததுஉன் கீர்த்தி
கான்உறு புலியை அடைந்ததுஉன் வீரம்
கற்பகம் அடைந்ததுஉன் கரங்கள்
தேன்உறு மலராள் அரிஇடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுஉன் தேகம்
நானும்என் கலியும் எவ்விடம் புகுவேம்
நந்தியே நம்தயா பரனே

(நந்திக் கலம்பகம்: – 113)
(வான் உறு = வானத்தில் தோன்றும்; மதி = சந்திரன்; வதனம் = முகம்; மறி = மோதுகின்ற; கீர்த்தி = புகழ்; கான் = காடு; தேன் உறு மலராள் = திருமகள்; அரி = திருமால்; தழல் = நெருப்பு; தேகம் = உடம்பு; கலி = வறுமைத் துன்பம்; தயாபரன் = அருள் நிறைந்தவன்)
நந்தி என்ற பெயர் உடைய மன்னனே! அருளில் மேம்பட்டவனே! நீ இப்போது இறந்து விட்டாய். எனவே உன் முகத்தின் ஒளி வானத்தில் உள்ள நிலவில் சேர்ந்துவிட்டது. உன் புகழ் கடலில் மூழ்கிவிட்டது. உன் வீரம் காட்டில் வாழும் புலியிடம் சேர்ந்து விட்டது. உன் கொடைத்திறம் கற்பக மரத்திடம் சேர்ந்து விட்டது. திருமகள் திருமாலிடம் சேர்ந்து விட்டாள். இவை எல்லாம் போய் விட்டன. எனவே, உன் உடல் நெருப்பிடம் சேர்ந்து விட்டது. ஆனால் நானும் என் வறுமையும் எங்கே போய் வாழ்வோம் என்ற பொருளில் இப்பாடல் அமைகின்றது.
ஒரு நாள் துறவி வந்தார். அவரைக் காவலர்கள் அரசனின் முன் கொண்டு வந்தனர்.
அரசன் துறவியைக் கண்டான். அவர் வரலாற்றைக் கேட்டான். தன் தம்பி என உணர்ந்தான். மகிழ்ச்சி அடைந்தான். கலம்பகப் பாடல்களைப் பாடுமாறு அரசன் வேண்டினான். துறவி முதலில் மறுத்தார். பின் ஒப்புக் கொண்டார்.
பச்சை ஓலையால் நூறு பந்தல்கள் போட வேண்டும். ஒவ்வொரு பந்தலிலும் மன்னன் அமர்ந்து ஒவ்வொரு பாடலாகக் கேட்க வேண்டும். ஒரு பாடல் முடிந்ததும் அந்தப் பந்தல் எரிந்துவிடும். கடைசிப் பாடலைக் கேட்கும் முன் பந்தலில் விறகுகளை அடுக்கி அதன் மேல் படுத்துக் கொண்டு கேட்க வேண்டும். கடைசிப் பாட்டு முடிந்ததும் உன் உடலிலும் விறகிலும் தீப்பற்றி எரியும். நீ இறப்பாய். இதற்குச் சம்மதமா என்று துறவி கேட்டார். மன்னவனும் சம்மதித்தான். துறவி கூறியவாறு பந்தல்கள் போடப்பட்டன. ஒவ்வொரு பாடலைக் கேட்கும் போதும் அந்தப் பந்தல் எரிந்தது.
இறுதியில் மன்னன் விறகை அடுக்கி அதன் மேல் படுத்தான். துறவி முற்கூறிய ”வான் உறு மதியை” என்று தொடங்கும் பாடலைப் படித்தார். மன்னன் உடலில் தீப்பற்றி எரிந்தது. மன்னன் இறந்தான். தமிழ் மொழி அல்லாத பிற மொழியைச் சேர்ந்த மன்னன் ஆகிய நந்திவர்மன் தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் காரணமாக உயிர் விட்டான் என்பதை
இந்த மரபு வழியாக வரும் செய்தி மூலம் அறியமுடிகிறது.

15/10/2022

One Comment on “கலம்பகம் என்பது/சுரேஷ் ராஜகோபால்”

Comments are closed.