
பாலகுமாரன் மறைந்ததும் அவரது வாசகர்கள் பலர் கண்ணீர் விட்டழுதார்கள். தங்கள் வாழ்க்கையை மாற்றிச் சீரமைத்த ஆசானை அவர்கள் இழந்துவிட்டதாக உணர்ந்தார்கள். இதனால் சிலரது கேலிக்கும் உள்ளானார்கள். பாலகுமாரனின் இலக்கிய இடம் என்ன என்பது மீண்டும் ஒருமுறை சர்ச்சைக்குள்ளானது. அவர் முற்றிலும் ஒரு வணிக எழுத்தாளர் என்று சிலர் புறம் தள்ளினார்கள். மாத நாவல்களிலும் பெரிய பத்திரிகைகளிலும் தொடர்கதை எழுதிய இரண்டாம்தர கேளிக்கை எழுத்தாளர் என்றும் சொன்னார்கள். அவர்களே, அவர் பார்ப்பனிய
சிந்தனைகளைத் தந்திரமாகத் தனது பிரதிகளில் நுழைத்த எழுத்தாளர் என்றும்
சொன்னார்கள்.
சுஜாதா, பாலகுமாரன் இருவரது பெயர்களும் தீவிர இலக்கிய வட்டாரங்களில் அதிகம் வெறுக்கப் பட்டவையாக ஒரு காலத்தில் இருந்தன. சுஜாதா இதை அவருக்கே உரிய புத்திசாலித்தனத்தோடு சமாளித்தார். பிரதிக்கு வெளியே அவர் எழுதியவை, பேசியவை எல்லாமே இன்று அவருக்குச் சற்றே தயக்கத்துடன் வழங்கப்படும் இலக்கிய இடத்தை நோக்கியே அமைந்திருந்தன. பாலகுமாரன் இதற்கு முயலவே இல்லை. இவ்வளவுக்கும் அவர்கள் இருவருமே சிற்றிதழ்கள் வட்டத்திலிருந்து மேல்க்கிளம்பிச் சென்றவர்களே. பாலகுமாரன் தனது முன்னோடியாக ஞானக்கூத்தனையும் ஜானகிராமனையும் வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர். இது அவருக்குச் சில சங்கடங்களைக் கொண்டுவரவும் செய்தது. ஜானகிராமனின் மெலிந்த பிரதிதான் பாலகுமாரன் என்ற குற்றச்சாட்டு இன்னமும் கூறப்படுகிறது. ஆனால் இவரும் ஆண் பெண் உறவுகளின் சிடுக்குகளைப் பற்றி எழுதினார் என்பதுவும் சில வார்த்தைப் பிரயோகங்களும் தவிர இருவரது பயணங்களிலும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. ஜானகிராமனின் உலகம் பெரும்பாலும் வீழ்ந்து வந்த ஒரு நிலவுடைமைச் சமுதாயத்தின் உலகம். அவரது கலை எவ்வளவு உச்சத்திலும் ஒரு கருணைமிக்க மிராசுதாரின் கலையே. பாலகுமாரனின் வாழ்வுலகமோ நடுத்தர வர்க்கத்தின் அபிலாசைகளுடன் மிக நெருக்கமாய்ப் பின்னிப் பிணைந்தது. முதல் தலைமுறையாக டெலிபோன் துடைக்கிற பெண்ணாகவோ வங்கியில் குமாஸ்தாவாகவோ மருத்துவமனையில் செவிலியாகவோ வேலை செய்ய இறங்குகிற பெண்ணின் காதலையும் காமத்தையும் ஏக்கங்களையும் பேசுவது. பாலகுமாரன் இந்த அகவாழ்க்கையை விரிவாக விதம்விதமான புறப்பின்னணிகளில் எழுதினார். வணிகர்களின் வாழ்க்கையைப் பற்றி அவர் நிறைய கதைகள் எழுதி இருக்கிறார். வெவ்வேறு விதமான வணிகங்கள் குறித்த அவற்றின் நுட்பமான தகவல்களுடன் அவர் எழுதிய நாவல்கள் நிறைய இருக்கின்றன. அவரது வாசகர்களில் பலர் வணிகர்கள்.
பாலகுமாரனின் முதல் நாவல் அவரது தொழிற்சங்க வாழ்க்கையையும் அதன் மீதிருந்த அவரது தொடக்ககாலப் பற்று விலகுவதையும் விவரிக்கிற ‘இரும்பு குதிரைகள்’. இன்றளவும் அவரது சிறந்த நாவல் அதுவே என்று வாதிடுவோர் உண்டு.
பாலகுமாரன் ஒருபோதும் அசோகமித்திரன் போன்றோ சுந்தரராமசாமி போன்றோ ஆகிருதியான எழுத்தாளர் அல்ல. ஆனால் அவர் புகழ் உச்சியில் இருந்த காலத்தில் அவ்வாறு மயங்கிய கூட்டம் இருந்தது.
இணையத்தில் படித்தது
