ஆசாரக்கோவை பாடல் 1/வளவ.துரையன்

ஆசார வித்து -1
(பஃறொடை வெண்பா)
நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து
பொருள் விளக்கம்

ஒருவன் செய்த உதவியை மறக்காமல் நன்றியுடன் இருத்தல், பொறுமையுடன் இருத்தல், இனிய சொல் பேசுதல், எந்த ஒரு உயிருக்கும் துன்பம் செய்யாமல் இருத்தல், கல்வி அறிவு, பலனை எதிர்பார்க்காமல் இந்த சமுதாயதிர்க்கு செய்யும் சேவை (அடுத்தவருக்கு உதவும் ஒப்புரவு குணம்), காலம் கருதி ஆற்ற வேண்டிய விஷயத்தை ஆற்றும் திறன், அறிவுடைமை, நல்ல குணம் உடையவருடன் சேர்தல் ஆகிய எட்டும் ஒழுக்கங்களின் வித்து என்று கூறும் விதை ஆகும். இந்த குணங்களில் இருந்து தான் நல்லொழுக்கம் அனைத்தும் ஆரம்பமாகிறது.