
அறுந்துதொங்கிய சிலந்திநூலில்
கதிரொளிபட்டு நிறப்பிரிகை
நடக்கிறது காற்றசைக்கும்
போதெல்லாம்…
அதில்ஊஞ்சலாடும் பூவினை
சிறுதேனியொன்று வட்டமிட்டு
போகிறது ஏமாற்றமாய்…
அந்தவண்ணத்தில் பூத்த தாவரவகைகள்
ஏதுமில்லை அருகில்..
உதிர்ந்தபூவை காற்று சுமந்து வரும்போது
அதன்
சுமைகுறைக்க சிலந்திநூலில்
சிறைபட்டதோ தெரியவில்லை…
பூ எங்கிருந்தாலும் பூதான்
அதன்
வண்ணம் இன்னும் வாடாமல்
அதன் இருப்பைச் சொல்லிக்கொண்டுதான்
இருக்கிறது…
இனிவரும் நாளில் அதுகாய்ந்து
சருகாகக் கூடும்…பிறப்பெடுத்த
பெரும்பயனை அதுசெய்தியாய்
ஒன்றும் சொல்லிவிடவில்லை…
ஆயினும் இருக்கும் இடம் எதுவானாலும்
அதுதன் மலர்ச்சியை
இழக்கவில்லை என்பதுதான்
அதுஎனக்காக விட்டுச்சென்றசெய்தி.
