
ருஸ்டி, ஓன்டாஜி, அருந்ததி ராய் போன்றவர்களையடுத்து தென் ஆசியாவுக்குக் கிடைத்திருக்கும் புக்கர் பரிசு இவ்வாண்டு இலங்கையின் செஹான் கருணதிலகவுக்குக் கிடைத்திருக்கிறது.
காலத்தாவுதலை நிகழ்த்தும் மேஜிகல் ரியாலிசப் பாணியில எழுதப்பட்ட மிட்நைட் சில்ரன், துயரும் மனோரதியமும் கலந்து காவியப் பாணியில் எழுதப்பட்ட இங்கிலீஷ் பேஷன்ட், குழந்தைகளின் மொழிவிளையாட்டின்பகுதியாக எழுதப்பட்ட காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ், தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மைடா என்பன இந்த நாவல்கள்.
கடைசி நாவல் தவிர மூன்றையும் வாசித்து வேறு வேறு இதழ்களில் விரிவாக எழுதியும் இருக்கிறேன். ருஸ்டியினுடையது இந்திய சுதந்திரமும பாகிஸ்தான் பிரிவினையும் அவசரநிலைக் காலமும் பற்றியது. ஒன்டாஜியினுடையது இரண்டாம் உலகப்போர் குறித்தது என்றாலும், போரின் பின்னான உலகில் அடையாளம் இழந்து அலையும் மனிதர்கள் குறித்தது. அருந்ததி ராயினுடயது மார்க்சியம், பெண்ணிலைவாதம், தலித்தியம் போன்றவற்றை விரிந்த இந்திய வரலாற்றில் வைத்துப் பேசுவது.
2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் விருது இந்தியாவைச் சேர்ந்த கீதாஞ்சலி சிறீக்கு இந்தியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட அவரது நாவலான டாம்ப் ஆப் சான்ட் நாவலுக்கும், பிரித்தானியாவில் பதிப்பிக்கப்படும் ஆங்கில நாவலுக்கான புக்கர் விருது செஹான் கருணதிலகவுக்கும் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிதரத்தக்கது.
இலங்கை இனப்பிரச்சினை-அரசியல் பற்றிய ஒன்டாஜியின் அனில்ஸ் கோஸ்ட் எனக்குப் பிடிக்கவில்லை. இலங்கை உள்நாட்டு யுத்தம் குறித்த அரசியல் எள்ளல் என்று விவரிக்கப்படுகிற செஹான் கருணதிலகவின் நாவல் கைவசம் இருக்கிறது. இனித்தான் வாசிக்க வேண்டும்.
