
ராணி வாரஇதழின் ஆசிரியராக, 44 ஆண்டுகள் பணியில் இருந்த . அ.மா.சாமி என்ற எழுத்தாளரே, அமுதா கணேசன் என்ற பெயரில் பல குடும்ப நாவல்கள் மற்றும் சிறுகதைகளையும், குரும்பூர் குப்புசாமி என்ற பெயரில், பல நகைச்சுவை நாவல்களையும் எழுதியுள்ளார். தினத்தந்தி நாளிதழிலும், தன் எழுத்துப்பணியைத் தொடர்ந்துள்ளார்.
அ.மா.சாமியின் முழுப்பெயர் அருணாச்சலம் மாரிச்சாமி என்பதாகும். இவர் ராணிவாரஇதழின் ஆசிரியராக இருந்தபோது, அது, தமிழிலேயே அதிகளவில் விற்பனையாகும் வாரஇதழாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருகட்டத்தில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் வாரஇதழ்களிலேயே, மலையாளமனோரமா வாரஇதழுக்கு அடுத்து அதிகம் விற்பனையான இதழாக இருந்தது.
ராணி வாரஇதழில், பிரபலமான “அல்லி பதில்கள்” பகுதியில், சிலஆண்டுகாலம் வரையில், இவரே பதில்களை எழுதிவந்தார்.
அ.மா.சாமி எழுதிய “தமிழ் இதழியல் தோற்றம்−வளர்ச்சி” என்றநூலே, தமிழில் வெளியான முதல் தமிழ் இதழியல் ஆய்வுவரலாற்று நூலாகும். 1987ஆம் ஆண்டில் இந்நூல் வெளியானது. இதுதவிர, திராவிட இயக்க இதழ்கள், வரலாறு படைத்த தினத்தந்தி, தமிழ் இஸ்லாமிய இதழ்கள், தமிழ் கிறித்துவ இதழ்கள், 19ம் நூற்றாண்டு தமிழ்இதழ்கள் என இவரெழுதிய அனைத்து இதழியல் நூல்களும், தமிழிதலியல் இலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தனவாகும்.
சிவந்திஆதித்தனார் சாதனைச்சரித்திரம், சி.பா. ஆதித்தனார் வாழ்க்கைவரலாறு, முதலான வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். பயணநூல்கள் சிலவற்றையும் எழுதியுள்ளார். சிறுவர்கதைகள் சிலவற்றையும் எழுதியுள்ளார்.
85 ஆண்டுகள் வாழ்ந்த அ.மா.சாமி, பெரியார் விருது, சிறந்த இதழாளர் விருது, உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவ்வளவு பெரிய சாதனையாளராக இருந்தும், தன்னையோ, தன் புகைப்படங்களையோ, அ.மா.சாமி ஒருபோதும் வெளிப்படுத்தியதுமில்லை; தற்பெருமை கொண்டதுமில்லை.
-பூபதி
தகவல் : அனங்கன்

ராணி ஆசிரியர் பற்றிய அரிய தகவல்கள் நன்றி
ராணி ஆசிரியர் பற்றிய அரிய தகவல்கள் நன்றி