ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 24

20.10.2021 – புதன்


அழகியசிங்கர்



அழகியசிங்கர் :    இன்று பேசுவதற்கு ஒன்றுமில்லை.

மோகினியும் :        மௌனம் அனுஷ்டிப்போம்.

அழகியசிங்கர் :     ஆமாம்.

ஜெகன் :             நிஜமாகவே பேச ஒன்றுமில்லை?

அழகியசிங்கர் : இருக்கிறது.  என் புத்தகம் பற்றி தினமலரில் விமர்சனம் வந்தது.

ஜெகன் :  எந்தப் புத்தகம்?

அழகியசிங்கர் :  துளிகள் 2 என்ற புத்தகம். 

மோகினி :  அதனால் புத்தகம் விற்றதா?

அழகியசிங்கர் : ஒருத்தர் போன் செய்து ரூபாய் 900க்குப் புத்தகம் வாங்கினார்.

ஜெகன் :  அதெல்லாம் போதாது.

அழகியசிங்கர் : உண்மைதான்.

மோகினி :  வாங்கினாரே.  அதுவரைக்கும் சந்தோசப்படுவோம். என்ன எழுதியிருந்தார்கள்.

அழகியசிங்கர் :  இதோ: 

“நாட்குறிப்பு எவ்வாறு எழுதலாம் என் பதை உணர்த்தும் வண்ண ம் அமைத்துள்ளார் இந்த நூலாசிரியர் . எளிய எழுத்து நடையிலும் இரண்டு பக்கங்களுக்கு மிகாமலும் இருப்பதால், படிப்பதில் தொய்வு ஏற்படவில்லை . புத்தக கண்காட்சியில் பங்கேற்ற நிகழ்வை அதிக அளவில் துளித் துளிகளாக நாட் குறிப்பில் பட்டியலிட்டுள்ளார். திருப்பதி பயணம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதைப் பதிவிட்டுள்ளார். ஒரு துளியில், ‘இன்று பிற்பகல் கட்சி மாறிய அந்த அரசியல்வாதியின் பெயர், பலவேசம்; இவரை விடப் புத்திசாலி, இந்தப் பெயரை வைத்த அவரது அப்பா, அம்மாதான்’ எனக் கட்சி மாறும்

அரசியல்வாதிகளின் தன்மையைப் பதிவிட்டுள்ளார். ஒரு நாளைக்குக் காபிக்கு மட்டும் 30 ரூபாய் போதும். முற்பகல் துவங்கி, சாய்பாபா கோவிலில் அன்னதானமாகத் தக்காளி சாதம், புளியஞ்சாதம், சாம்பார் சாதம், அனுமார் கோவிலில் பொங்கல், தயிர்ச் சாதம், சர்க்கரைப் பொங்கல், இரவு பருப்பு சாதம் என அனைத்தும் நேரப்பட்டியலுடன் பதிவு செய்துள்ளார். சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ளவர்கள் ஓட்டலுக்கும் போக வேண்டாம்; வீட்டிலும் சமையல் செய்ய வேண்டாம் என்கிறார் ஆசிரியர். 63 துளிகளைக் கொண்டதும் நாட்குறிப்பு வகையில் அமைந்தது. நாட்குறிப்பு எழுதுவது பற்றி எளிமையாக விளக்குகிறது. –

— முனைவ இரா.பன்னிருகைவடிவேலன்


ஜெகன் : நன்றாக எழுதி உள்ளார்.

மோகினி : நாமும் புத்தக அறிமுகத்தை நம் பத்திரிகையில் ஆரம்பிக்கலாம்.

அழகியசிங்கர் : அது மாதிரி ஒரு திட்டம் இருக்கிறது.  புத்தகத்தை அறிமுகப் படுத்தி ஒரு பாரா மட்டும் எழுத வேண்டும்.