காதல் தவிப்பு /நாகேந்திர பாரதி

91 வது விருட்சம் கவிதை நேசிக்கும் நிகழ்வில் (21.10.2022) வாசித்த கவிதை.

பக்கம் வந்தால் பதறும்
பாதி உடம்பு உதறும்
வெக்கம் மானம் விலகும்
வெறித்த பார்வை பழகும்

பார்க்கத் துடிக்கும் துடிப்பு
பதறும் நெஞ்சத் தடிப்பு
சேர்க்கத் துடிக்கும் பார்வை
சிதறும் எண்ணக் கோர்வை

பேசத் துடிக்கும் நாக்கு
பிறண்டு போகும் போக்கு
ஆசை வார்த்தை துள்ளி
அமுங்கிப் போகும் தள்ளி

தொட்டுப் பேச ஆசை
துடிக்கும் உள்ள ஓசை
கட்டிப் பிடிக்க எண்ணும்
காதல் உயிரைத் தின்னும்

என்ன சொல்லி என்ன
ஏக்கம் மட்டும் பின்ன
வண்ணப் பெண்ணை எண்ணி
வாழ்க்கை பூரா ‘ தண்ணீ ‘