மழைக் கொண்டாட்டம்/மதுவந்தி

பத்திரமாய் பால்கனியிலமர்ந்து
கையிலேந்திய தேநீர்க் கோப்பையுடன்
மழையை ரசித்திருந்தேன்.

“ஹைய்யா!!! மழை வந்தாச்சு!!!”
எனக் கூவியபடி,
பக்கத்து வீட்டுச் சிறுமி வாசலுக்கு
ஒடுகிறாள்.

“வேண்டாம் , சளி பிடிச்சா என்னாகும்?”
கத்தியபடி அவள் அம்மாவும் பின்னால்.

வான் நோக்கி முகம் காட்டி,
இறக்கைகளாய் கைவிரித்து,
மழைக்கரங்கள் உடலெங்கும் விளையாட,
சுற்றிச் சுற்றி நடனமாடுகிறாள் சிறுமி.

மழையோடு இணைந்தாடும் சிறுமியை
பிரமிப்போடு பார்த்தபடி அவள் அம்மாவும்,
நானும்.

ரசிப்பது வேறு.
கொண்டாடுவது வேறு போல.