
எங்குப் பார்த்தாலும்
கதவுகள் கதவுகள் கதவுகள்
தட்டப்படாத கதவுகள்
திறக்கப்படாத கதவுகள்
தட்டுவதற்கு முன்
யோசியுங்கள்
கதவுக்கு பின்னால் உள்ளவர்
தனிமையை அருந்திக் கொண்டு
இருக்கலாம்
கதவுகளுக்குப் பின்னால்
ஒரே குரல்
அழுகிறது
சிரிக்கிறது
திட்டுகிறது
கோபிக்கிறது
குறட்டைவிடுகிறது
அவர்கள் அழும்போது
கதவும் அழுகிறது
அவர்கள் சிரிக்கும்போது
கதவும் சிரிக்கிறது
நெடுநாள் பூட்டப்பட்ட கதவு
தனிமையைத் தாங்கிக் கொள்ள
முடியாமல் ஓலமிடுகிறது
கதவு கனவு காணும்
கதவுக்கு காதுண்டு கேட்கும்
மனிதர்கள் வேடதாரிகள்
கதவுக்கு வெளியே ஒருவாழ்வும்
கதவுக்கு உள்ளே ஒருவாழ்வும்
வாழ்கின்றவர்கள்
கதவு ஒருகாலத்தில்
மரமாய் இருந்தது
வாடகைக்கு இருந்தவர்கள்
காலி செய்யும்போது
மனித சகவாசத்தை விரும்பும் கதவு
ஏங்கி ஏங்கிச் சாகும்
மூளையில் சுருக்கென்றது
பூமியே வாடகை வீடுதானே
குப்பையாக வந்த உடம்புதானே
என நினைத்துக் கொண்டே
வீட்டுக்குள் நுழைந்தேன்
வீடு முழுவதும்
எங்குப் பார்த்தாலும்
கதவுகள் கதவுகள் கதவுகள்
தலை சுற்றியது
எந்தக் கதவு
எப்போது திறக்கும்
எனத் தெரியாமல்!
